பக்தனுக்கு அருள்வதில் பாகுபாடு காட்டாத இறைவனை முதலில் எப்படி போற்றி வணங்க வேண்டும்?

Published:

இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் உலகில் உள்ள உயிர்கள் அனைத்துக்குமே இறைவன் பொதுவானவன்.

அப்படி இருக்க இந்த உலகில் நாம் எவ்வாறு போற்றிப் பாடி வணங்க வேண்டும் என்பதையும், விலங்குகளுக்கும் இறைவன் காட்டிய கருணையைப் பற்றியும் இன்றைய மார்கழி 20 (4.1.2023) நாளில் திருவெம்பாவை, திருப்பாவைப் பாடல்களில் நாம் காணலாம்.

மாணிக்கவாசகர் பாடிய இன்றைய பாடலில் போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் என்கிறார்.

Markali 20
Markali 20

இந்தப்பாடலில் இறைவனின் திருவடியை முதலில் போற்றுவோம். இறைவனை ரசித்து அனுபவித்ததை எல்லாம் போற்றிப் பாடுகின்றார்.

போற்றுவது என்றால் அவரது உயர்வை எடுத்துச் சொல்வது, அவரைப் பாராட்டி தெரிவிப்பது, வீர தீர பராக்கிரம செயல்களையும், கருணையையும் உலகுக்கு எடுத்துச் சொல்வது. இதில் மாணிக்கவாசகர் திருவடியில் இருந்து ஆரம்பித்து போற்றிப் பாடுகிறார்.

இறைவா உனது தாமரை திருவடியை நான் தொழுகிறேன். இந்த உலகில் உள்ள எல்லா விஷயங்களுக்கும் காரண, காரியமாக இருப்பது இறைவன் தான். நாம் ஒரு சிறுபுள்ளியாய் இருந்து தாயின் கருவறையிலிருந்து உலகிற்கு வருகிறோம்.

அதன்பிறகு எல்லா விஷயங்களையும் நாம் தெரிந்து கொள்ளவும், நம்மை ஆதரிப்பதற்கும் தாயுடன் சேர்ந்து இறைவனும் நம்மை காத்தருளுகிறார்.

குழந்தை முதலில் அழ வேண்டும். மூச்சு விட வேண்டும். அதே போல இறைவனைப் பார்க்க அழ வேண்டும். இறைவன் நமக்கு சூரிய ஒளியைத் தந்து வெளிச்சத்தை உயிர்களுக்கு எல்லாம் தந்து இருக்கிறார். சுவாசிக்கக் காற்றைத் தந்து இருக்கிறார்.

பூமியைத் தந்து இருக்கிறார். இந்த உலகத்தையே நமக்கு இலவசமாகத் தந்து உயிர்கள் வாழ தேவையான அத்தனை சூழல்களையும் ஏற்படுத்தித் தந்து இருக்கிறார். அதனால் தான் மாணிக்கவாசகர் நான் உன்னை வணங்கி வழிபடுகிறேன்.

உன்னுடைய இந்த பாதகமலங்கள் சாதாரணமானவை அல்ல. திருமாலுக்கும் ஒலித்த திருவடியை எனக்காகக் காட்டி அருளிய பெருமானே. உன்னுடைய அந்தப் பெருங்கருணையை எப்படி நான் மறவேன்? இப்படியே மீண்டும் மீண்டும் நமக்கு செய்த அற்புதமான உபதேசங்களை போற்றிப் பாடுகிறார்.

நாமும் இறைவனைப் போற்ற இறைவனால் தான் இந்த உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்று நம்பிக்கையை எடுத்துக் கொண்டு போற்ற வேண்டும். பூஜையை நிறைவு செய்யும்போது இந்த போற்றிப் பாடல்களை நாம் பாட வேண்டும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் பாராட்டுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளைப் பெற்றவர்கள் பாராட்ட வேண்டும். உறவினர்கள் ஏதாவது செய்தால் பாராட்ட வேண்டும். நம்மை நாமே பாராட்டுவதைத் தவிர்த்து பிறரைப் பாராட்டுவதை நாம் வழக்கமாகக் கொள்ள வேண்டும். இறைவனின் அற்புதமான செயல்களைப் பாராட்டிப் போற்றி பெண்ணைத் துயில் எழுப்பி இறைவனை வணங்க எழுந்து வா என மாணிக்கவாசகர் இந்தப் பாடலில் அழைக்கிறார்.

இந்த 20 பாடல்களுடன் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை நிறைவுற்றது.

ஆண்டாள் முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று என்று இன்றைய பாடலைத் தொடங்குகிறார்.

Aandal 20
Aandal 20

இந்தப் பாடலில் ஆண்டாள் பக்தன் ஒருவனுக்குப் பிரச்சனை என்றால் முப்பத்து முக்கோடி தேவர்களும் கிளம்பிப் போகும் முன்னாடியே கண்ணன் சென்று அங்கு அருள்புரிந்து விடுவார்.

அப்படி முந்திக் கொண்டு அருள்புரிய கண்ணனுக்கு நிகரில்லை. தனது குழந்தைக்கு ஒரு பிரச்சனை என்றால் பெற்றோர் எப்படி ஓடி வருவார்களோ, அதே போல நாமும் இறைவனுக்கு பிள்ளை ஆதலால் ஒரு துன்பம் என்றால் இறைவன் ஓடோடி வருவார். கஜேந்திர மோட்சம் பற்றிய கதையைப் பார்க்கலாம். கஜேந்திரன் என்ற யானை முதலையின் வாயில் மாட்டிக் கொண்டது.

இருவிலங்குகளுமே பலசாலி தான். ஆனால் யானையின் காலுக்குத் தான் பிரச்சனை. காலில் ரத்தம் வழிகிறது. கடைசியில் பெருமாளை அழைத்தது யானை. பெருமாள் கிளம்பி வேகமாக வருகிறார். அப்போது உடன் அவசரத்தில் தாயாரையும் அழைக்காமல் வேகமாகக் கிளம்பி வந்துவிடுகிறார்.

தாயாரும் சுவாமி எங்கு செல்கிறார் என வேகமாகப் பின் தொடர்ந்து வந்து இருவரும் சேர்ந்து கஜேந்திரனைக் காப்பாற்றுகின்றனர். அந்த யானைக்கும் மோட்சத்தைத் தந்து அருளுகிறார். விலங்குகள் மனிதன் என்ற பாகுபாடு இறைவனுக்குக் கிடையாது. அதே போல பிரகலாதன், திரௌபதி என எல்லா நிலைகளுக்கும் சுவாமி கருணை காட்டியுள்ளார்.

அதேயேத் தான் எல்லாவற்றிற்கும் முந்தி அருளும் கண்ணனே நீ எழுந்து வா இப்போ எல்லாரும் வந்துட்டோம்…பக்தர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளா எழுந்து வருவது நீதானே…இப்போதும் அப்படியே வா…நீ எழுந்து வந்தால் பகை எல்லாம் விலகி ஓடி விடும்…அந்த நிலையை எங்களுக்குத் தான என இந்தப் பாடலில் ஆண்டாள் நாச்சியார் வெகு அழகாக சொல்கிறார்.

மேலும் உங்களுக்காக...