மார்கழி மாதம் புண்ணியகால மாதமாக கருதப்படுகிறது. இறைவனுக்குரிய மாதமாக கருதப்பட்டு ஊரில் இருக்கும் சிறு கோவிலானாலும் சரி அதில் யாராவது உபயதாரர்களின் உபயத்தோடு பூஜைகள் நடைபெறுகிறது.
இந்த மாதத்தில்தான் ஐயப்ப பக்தர்களின் பஜனைகள் ஆங்காங்கே கேட்கும். மார்கழி மாத அமாவாசையன்று பிறந்த ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படும்.
ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான வைகுண்ட ஏகாதசி திருவிழாவும் ஸ்ரீரங்கம் உட்பட அனைத்து ஆலயங்களிலும் சிறப்பாக நடைபெறும்.
மார்கழி மாத திருவாதிரை நடராஜ பெருமானுக்கு உகந்ததாக கருதப்பட்டு அவருக்கு திரு உத்திரகோசமங்கை, சிதம்பரம் உள்ளிட்ட தலங்களில் மிகப்பெரும் விழா வைபவங்கள் நடைபெறும்.
இப்படி மார்கழி மாதத்தின் எல்லா நாட்களும் முக்கியமான புண்ணிய நாட்களாக வருவதால் மார்கழியை போல மனதுக்கு உகந்த ஆன்மிக மாதம் எதுவும் இல்லை என கூறலாம்.