மனிதப்பிறவி எடுத்ததற்கான பலனை அடைய… இதைச் செய்தால் போதும்…!!!

By Sankar Velu

Published:

சிவராத்திரியை ஒளிமயமான இரவு. இன்பம் தரும் இரவு என்றும் சொல்வர். சிவன் அருள் இருந்தால் மட்டுமே இந்த மகாசிவராத்திரி விரதம் இருக்க வாய்ப்பு கிடைக்கும். அம்மனுக்கு நவராத்திரி விரதம் எவ்வளவு முக்கியமோ, அது போல் ஈசனுக்கு சிவராத்திரி விரதம் முக்கியம்.

இன்று (18.02.2023) வரும் சனிப்பிரதோஷ மகாசிவராத்திரி சிறப்பு வாய்ந்தது. பகலில் திரயோதசியும், இரவில் சதுர்த்தசி திதியும் கூடும் இந்த சிவராத்திரி மிகவும் விசேஷமானது. கௌரிசங்கர சம்மேளன சிவராத்திரி என்றும் கூறுவர்.

Sivalingam1
Sivalingam1

இத்தகைய சிறப்பு வாய்ந்த சிவராத்திரி தான் இன்று கடைபிடிக்கப்படுகிறது. பிரளய காலத்தில் உயிர்களைக் காக்கும் பொருட்டு பார்வதி தேவி சிவனை பூஜித்தாள். அந்த இரவே சிவராத்திரி.

பார்வதி தேவி தவமிருந்து சிவபெருமானின் இடப்பாகத்தில் இடம்பெற்றதும் இந்த சிவராத்திரி நாளில் தான்.

உமாதேவி சிவபெருமானிடம் ஆகம உபதேசம் பெற்றதும் சிவராத்திரியில் தான். பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் தவமிருந்து பாசுபதம் என்ற அஸ்திரத்தைப் பெற்றதும் சிவராத்திரியில் தான். மார்க்கண்டேயனுக்காக எமதர்மனை சிவன் சம்ஹாரம் செய்த நாள் மகாசிவராத்திரி தான்.

பகீரதன் ஒற்றைக்காலில் கடும் தவம் புரிந்து கங்கையை பூமிக்குக் கொண்டு வந்ததும் ஒரு சிவராத்திரியில் தான். கண்ணப்பநாயனார் குருதி வடியும் லிங்க வடிவில் இருந்த ஈசனின் கண் மீது தன் கண்களைப் பொருத்தி முக்தி அடைந்ததும் இந்த மகாசிவராத்திரியில் தான்.

பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் லிங்க ரூபமாக சிவபெருமான் அருள் வழங்கிய நாள் மகாசிவராத்திரி.

ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள். ஒரு மாதத்திற்கு 2 சிவராத்திரிகள். ஆக ஆண்டிற்கு 24 சிவராத்திரிகள். அவை வளர்பிறை சதுர்த்தசி, தேய்பிறை சதுர்த்தசி ஆகியவை.

தை மாதத்தில் வரும் தேய்பிறை சிவராத்திரியே வச்சு சிவராத்திரி. அது போல மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசியே மகாசிவராத்திரி.

இவைகளில் ஏதாவது ஒரு சிவராத்திரி விரதம் இருந்தால் போதும். மனிதப் பிறவி எடுத்தமைக்கான பலனை அடைந்து விடலாம் என்கிறார் அகத்திய மாமுனி.

இந்த சிவராத்திரி பூஜையால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி நற்கதி அடைய முடியும். சிவராத்திரி விரதமானது எமபயத்தை நீக்கும். சிவனடியார்களை எமதூதர்கள் நெருங்க அஞ்சுவார்கள் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. சிவராத்திரியின் நான்காம் கால பூஜையில் மிருத்யுஞ்ச மந்திரத்தை ஓதுவதால் நோய்கள் அனைத்தும் நீங்கும்.

சிவராத்திரி அன்று தான தர்மங்கள் செய்வதால் கோடி புண்ணியம் கிடைக்கும். சிவலிங்கம், ருத்திராட்சம், ரத்தினங்கள், நிவேதனப் பொருள்கள், அன்னம் போன்றவற்றைத் தானம் செய்யலாம்.

மகாசிவராத்திரி அன்று விரதம் இருக்க நினைப்பவர்கள் முந்தைய நாளிலேயேத் தொடங்கி விட வேண்டும். அன்றைய தினம் ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு விரதத்தைத் தொடங்கலாம்.

Sivalingam2 1
Sivalingam2

மகாசிவராத்திரியன்று காலையில் குளிர்ந்த நீரில் குளித்து விட்டு நெற்றியில் விபூதி பூசி சிவனை வழிபட்டு பூஜை அறையில் உள்ள சிவனின் படம் முன்பாக விளக்கேற்றி அன்றைய விரதத்தைத் தொடங்கலாம். இன்று பகல் மற்றும் இரவு முழுவதும் எதுவும் சாப்பிடக்கூடாது. சிவசிந்தனையுடன் இருக்க வேண்டும். தண்ணீர் மட்டும் அருந்தலாம்.

வயதானவர்கள், நோயாளிகள் பால், பழங்கள், அவல் சாப்பிடலாம். மௌனவிரதம் இருப்பது சாலச்சிறந்தது. அவர்கள் மனதுக்குள்ளேயே பஞ்சாட்சரம் அல்லது ஓம் நமசிவாய என உச்சரித்து வந்தால் புண்ணிய பலன் அதிகமாகும். இன்று மாலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை சிவன் கோவில்களில் பூஜைகள் நடைபெறும்.

4 கால அபிஷேக பூஜைகளில் கலந்து கொண்டு சிவனை வழிபட வேண்டும். நாளை காலை நீராடி பகல் முழுவதும் உறங்காமல் இருந்து விரதத்தை முடிக்க வேண்டும். நாளை பகலில் தூங்கினால் சிவராத்திரியின் பலன் முழுமையாகக் கிடைக்காது.

ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் விரதம் இருந்து வந்தால் அவர் சிவகதியை அடைவதுடன் அவரது 21 தலைமுறைகளும் நற்கதியை அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம். அது மட்டுமல்லாமல் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

தனது பாவங்கள் அனைத்தையும் போக்கி வாழ்க்கையில் வெற்றிகளையும், செல்வத்தையும் பெற விரும்புவோர் இன்று விரதம் இருக்கலாம். தீராத நோய்கள் தீரும். நம்மை விட்டு பாவங்கள் அகலும். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் செல்வ வளங்கள் வந்து சேரும் என்பது சித்த ரகசியம்.

ஈசனின் 5 முகங்களை உணர்த்தும் விதமாகவும், பஞ்சபூத தத்துவங்களை உணர்த்தும் விதமாகவும் 5 சிவராத்திரிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த சிவராத்திரி விரதத்தைக் கடைபிடித்து நாமும் நம் வாழ்க்கையில் வளம் பெறுவோம்.

 

மேலும் உங்களுக்காக...