மிகப்பெரிய கஷ்டகாலங்கள் வரும் சூழலில் இறைவனிடம் எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும்?

Published:

இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு வேண்டுதல் உண்டு. அவரவர் கஷ்டங்களுக்கு ஏற்ப வேண்டிக் கொள்வர். ஒரு சிலர் அவசரத்தில் வேண்டிக் கொள்வர். ஆனால் நிறைவேற்றத் தயங்குவர். வேண்டுதல் என்னவோ அதைத் தான் நிறைவேற்ற வேண்டும். அதற்கு பதிலாக வேறு எதையும் நிறைவேற்றக்கூடாது. சிலர் உயிர்போகும் தருவாயில் மருத்துவரே கைவிட்ட சூழல் வருவதுண்டு.

அப்போது கடவுள் தான் எனக்குப் பிச்சைப் போட்டு என் கணவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று அழுது தொழுது மனைவி வேண்டுவாள். அதுபோன்ற கஷ்டமான காரியங்களில் வேண்டுதல் நிறைவேறுகையில் ஒரு பெண் மடிப்பிச்சை எடுக்கிறாள். உயிரை விட மானம் பெரிசு. கடன் தொல்லையால் என் மானமே போய்விடும் என்ற ஒரு சூழல் உண்டாகி வீட்டையே விற்க வேண்டிய நிலை கூட ஏற்படலாம்.

அப்போது கடவுளிடம் கையேந்தி தனது வேண்டுதலைக் கூறுவர். இன்று பலரும் பல கோவில்களிலும், திருவிழாக்களிலும் மடிப்பிச்சை எடுக்கின்றனர். அப்படி யார் ஒருவர் வேண்டினாலும் நாம் கட்டாயமாக காணிக்கைப் போட வேண்டும். பெரிய கோடீஸ்வரரும், பணக்காரப் பெண்மணியும்கூட மடிப்பிச்சை ஏந்துவதை நாம் பார்க்கலாம். ஆணவம் முழுவதும் அற்றுப் போகச் செய்வதே இந்த மடிப்பிச்சை.

Thiruverkadu Karumari Amman
Thiruverkadu Karumari Amman

முழுமையாக இறைவனை சரணாகதி அடையும் நிலை இங்கு ஏற்படுகிறது. இப்படி ஒரு பக்குவம் வரும்போது நிச்சயமாக இறைவன் அவருக்குக் கருணை காட்டுவார். மிகப்பெரிய பிரச்சனையில் இருந்து வெளியில் வர வேண்டும் என்பதற்காகவே மடிப்பிச்சை எடுப்பார்கள்.

எந்தக் கோவிலில் எடுப்பது என்று வேண்டிக் கொள்கிறோமோ அந்தக் கோவிலில் போய் எல்லா நாள்களிலுமே இந்த மடிப்பிச்சையை எடுக்கலாம். அங்குள்ள தீர்த்தத்தில் போய் குளித்துவிட்டு சுவாமியை உள்ளன்போடு வேண்டிக் கொண்டு உள்ளம் உருகி கண்ணீர் பெருக்கோடு நான் வேண்டியதை நிறைவேற்றி வைத்தாய்…என நன்றியை சொல்ல வேண்டும். மடிப்பிச்சை ஏந்த மஞ்சள் உடை உடுத்திக்கொள்ளலாம்.

பெண்களாக இருந்தால் தனது முந்தானையை ஏந்தி பிச்சை கேட்கணும். ஆண்களாக இருந்தால் துண்டை இடுப்பில் கட்டி அதை விரித்து மடிப்பிச்சை கேட்கணும். காசு அல்லது அரிசி போடலாம். அவர்கள் வீடு வீடாக வந்து அரிசி தானம் கேட்பார்கள். சிலர் கோவில் வாசலில் காசு கேட்பார்கள். எதுவாக இருந்தாலும் அதை சுவாமிக்குத் தான் பயன்படுத்த வேண்டும்.

அதை நாம் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்தக் கூடாது. இது ரொம்ப ரொம்ப முக்கியம். இதில் வரும் அரிசியை நாம் சுவாமிக்கு நைவேத்தியம் செய்தபின் அன்னதானமாகப் பண்ணனும். காசை 2 வகையில் பயன்படுத்தலாம். ஒண்ணு காணிக்கையா போடலாம். அடுத்து காணிக்கை போட்டு மீதியுள்ள ரூபாய்க்கு உணவு வாங்கி அன்னதானமாகக் கொடுக்கலாம்.

மடிப்பிச்சை எடுப்பவர்கள் காசு போடுங்க…காசு போடுங்கன்னு கோவிலுக்கு வரும் பக்தர்களை இடையூறு செய்யக்கூடாது. காசு போடுவதும் போடாததும் அவரவர் விருப்பம்.

Madipitchai2
Madipitchai2

அவங்க எவ்வளவு கஷ்டத்துல இருந்து இந்தப் பிரார்த்தனையைப் பண்றாங்கன்னு அவங்க முகமே நமக்குக் காட்டிக் கொடுத்து விடும். அவர்களைப் பார்க்கும்போது நமக்கு காசு போடணும்னு எண்ணம் வந்து போட்டுவிடுவோம். இறைவனின் கருணையும், அம்பாளின் கருணையும் கண்டிப்பாகக் கிடைக்கும்.

அம்பிகையைப் பிரார்த்தனை பண்ணும்போது திருவிளக்குப் பூஜை செய்கையில் மாங்கல்யப் பிச்சையோடு மடிப்பிச்சை தாருமம்மா என பாடலில் ஒரு வரி வரும். மாங்கல்யப் பிச்சை போடுபவளும் அம்பாள் தான். நம் மடியை நிறைக்கக்கூடிய சந்தானப் பாக்கியத்தைத் தரக்கூடியவளும் அவள் தான்.

ஒரு வீட்டில் பிச்சை எடுக்கையில் அம்மா தாயே என்று தான் கேட்பார்கள். ஒரு வீட்டில் தர்மம் செய்யக்கூடியவள் பெண்ணாகத் தான் இருப்பாள். அதனால் தான் அம்பாளிடம் வேண்டுகின்றனர். அதனால் தான் அம்மன் கோவில்களில் இந்த மடிப்பிச்சை எடுப்பது ஆரம்பித்தது.

மேலும் உங்களுக்காக...