இந்த மண்ணை விட்டு மறைந்த நம் முன்னோர்களுக்கு பித்ருக்கள் என்று பெயர். இவர்கள் கடவுளுக்குச் சமமானவர்கள். ஒவ்வொரு மனிதனும் நல்ல முறையில் வாழ ஒவ்வொரு தெய்வ வழிபாட்டையும் ஏற்றுக் கொள்வது போன்று ஒவ்வொரு மனிதனின் சந்ததியும் தழைக்க அவரவரது முன்னோர் வழிபாடு என்ற பிதுர் காரியத்தை செய்வது மிகவும் அவசியம்.
ஆண்டுதோறும் திதி கொடுப்பது, அமாவாசையில் தர்ப்பணம் செய்வது பிதுர் காரியங்கள். இவற்றைச் சரியாகச் செய்யாதவர்களுக்கு பிதுர்தோஷம் ஏற்பட்டு குடும்ப வாழ்க்கையில் குறைபாடு உண்டாகிறது. இதனால் குழந்தையின்மை போன்ற பிரச்சனைகள் உண்டாகின்றன. இதைப் போக்கவே ராமேஸ்வரம், திருவாஞ்சியம், திருவெண்காடு ஆகிய புகழ்பெற்ற புனித தலங்களுக்குச் செல்கின்றனர்.
அங்குள்ள ஏதாவது ஒரு தலத்தில் தில ஹோமம் செய்ய வேண்டும். தொடர்ந்து பிதுர் காரியங்களாகிய முன்னோர் வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வந்தால் பிதுர்தோஷம் நீங்கி விடும். இதனால் நல்ல குடும்ப வாழ்க்கையும் வம்ச விருத்தியும் உண்டாகும்.
மனதில் இறைவனை நிறுத்தி வழிபடுவது மிகவும் உயர்ந்தது. அடுத்து சிலை வழிபாடு. அதற்கடுத்து படத்தை வைத்து வழிபடுவது. முதலில் கூறிய மன வழிபாடுக்கு மனதை ஒருநிலைப்படுத்துவது மிகவும் அவசியம். உலக வாழ்க்கையை வெறுத்து வேறு எந்த சிந்தனையும் இல்லாத ஞானிகளுக்கு மட்டுமே இது சாத்தியமாகும்.
உருவச்சிலை வழிபாட்டில் அபிஷேகம், நைவேத்தியம் ஆகிய கிரியைகள் செய்யப்படுவது உண்டு. இதுதான் பக்தர்களால் அதிகமாகக் கடைபிடிக்கப்படுகிறது. அவரசமான காலகட்டத்தில் இதை எல்லாரும் கடைபிடிக்க முடியாது.
அவர்கள் திருவுருவப்படத்தை வைத்தே வழிபடலாம். தினமும் புஷ்பம் சாத்தி, பழம், பால், கல்கண்டு ஆகியவற்றை நைவேத்தியமாக வைத்தாலே போதும். எது உயர்ந்ததுன்னு கவலைப்படாதீர்கள். எது நம்மால் முடியும்? அதை விடாமல் செய்கிறோமா என பாருங்கள். அதுதான் உண்மையிலேயே உயர்ந்த வழிபாடு.