மும்மலங்களை நீக்க எளிய வழி…இதைச் செய்தால் போதுங்க…! இறைவனுக்காக செலவு செய்வதே உண்மையான சொத்து!!!

Published:

இந்த இனிய மார்கழி மாதம் இறைவனை அதிகாலையில் எழுந்து வணங்க உன்னதமான மாதம். இதை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் கணக்குப் போட்டு வாழ்ந்து வந்தால் ஒவ்வொரு நாழிகைப் பொழுதையும் நாம் இனிமையாக அனுபவிக்க ஆரம்பித்து விடுவோம்.

இறைவனுடன் கலந்து இனிய வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிடுவோம். இந்த இனிய நாளான மார்கழி 13 (28.12.2022) அன்று மாணிக்கவாசகர், ஆண்டாள் பாடிய பாடல்களைப் பற்றிப் பார்ப்போம்.

Markali 13
Markali 13

பைங்குவளைக் கார்மலரால் என்று தொடங்குகிறது இன்றைய பாடல். இதில் மாணிக்கவாசகர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

ஒரு குளத்தில் நீராடக்கூடிய தன்மையைப் பற்றி சொல்கிறார். தாமரை மலர்கள் நிறைந்து காணப்படுகிறது. நமது உடலைக் குளுமைப்படுத்தவே குளிக்கிறோம். வெறுமனே அழுக்கைப் போக்குவதற்காக மட்டும் நாம் குளிக்கவில்லை. இந்தப் பாடலில் ஆன்மா குளிக்கும் குளியலைப் பற்றிப் பேசுகிறார்.

இந்த ஆன்மா ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களுடன் கலந்து காணப்படுகிறது. அவற்றைக் கழுவ வேண்டும். அப்போது தான் தூய ஆன்மாவைப் பெற முடியும். பிறவி என்ற சூட்டைத் தணித்து பிறவாநிலை என்ற குளிர்நிலையை அடைய வேண்டும். அதற்கு குளிக்க வேண்டும். எப்படி குளிப்பது?

சிவமாகிய குளத்தில் நாம் குளிக்க வேண்டும். அப்போது தான் நாம் இறைநிலையை அடைய முடியும். இறைவனும், இறைவியும் இருக்கின்ற இந்த அழகான குளத்தில் நாங்கள் சிவமாகப் பாவித்து நீராடுகிறோம் என்கிறார் மாணிக்கவாசகர்.

இதற்கு மிகச்சிறந்த உதாரணம் திருநீலகண்டத்து குயவனார். இவரது வாழ்க்கையில் ”இனி எம்மைத் தீண்டுவராயிற் திருநீலகண்டம் ” என்ற ஒரு வார்த்தையை அவரது மனைவி சொன்னதற்காகத் துறவற வாழ்க்கையை மேற்கொண்டார்.

தனது மல, மாய, கன்மங்களை நீக்க வழி தெரியாமல் தவித்துக் கொண்டார். எங்கே போறது? நான் தப்பு பண்ணிட்டேன். அந்தத் தவறுக்குரிய தண்டனையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன் என வாழ்ந்து வந்தார். இவரைக் கடைத்தேற்ற வேண்டும் என்ற எண்ணம் சிவபெருமானுக்கு ஏற்பட்டது.

அதற்காக அவரிடத்தில் ஒரு திருவிளையாடல் புரிகிறார். ஒரு ஓடு ஒன்றை செய்து கொடுத்து அந்த ஓட்டை மறைத்து என்னுடைய ஓடு எனக்கு வேண்டும் என்று வாதிடுகிறார். அதற்கு அவர் அந்த ஓடு எங்கிட்ட காணாமப் போச்சு. என்னுடைய ஓடு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறார்.

அதற்கு சிவன் சம்மதிக்கவில்லை. என் ஓடு உயர்ந்தது என்று நீ அதை வைததுக் கொண்டு உனது ஓட்டைத் தருகிறாய் என்றார். உண்மையிலேயே தொலைந்து விட்டது என்று குயவனார் சொல்ல அதை சிவன் ஏற்கவில்லை. அப்படியானால் சத்தியம் செய்கிறேன் என்கிறார். அதற்கு குளத்தில் மூழ்கி சத்தியம் செய்ய வேண்டும் என சிவன் சொல்கிறார்.

சரி என அப்படியே குளத்திற்கு வந்தார். குளத்தில் மூழ்கி சத்தியம் செய்ய வருகையில் அடியாராகிய சிவன் சொல்கிறார். நீ மட்டும் மூழ்கக்கூடாது. உன் மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு குளத்தில் மூழ்க வேண்டும் என்கிறார் அடியார்.

அதில் தான் குயவனாருக்குப் பிரச்சனை. ஏனென்றால் அவர்கள் இருவருக்கும் முன்பே நடந்த ஒரு பிரச்சனையில் பிரிந்து இருந்தனர். இதனால் குயவனார் அதற்கு மறுப்பு தெரிவித்தார். அப்படியானால் நீ பொய் சொல்ற. நீ தான் ஓட்டை மறைத்துள்ளாய் என்றார் இறைவன்.

இதற்கு மேலும் அவரால் சோதனையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கடைசியில் அவர் அந்த உண்மையை சொல்கிறார். எனக்கு இப்படி ஒரு சத்தியம் இருக்கு. அதனால் என் மனைவியின் கையைத் தீண்ட மாட்டேன். தயவு செய்து நானே குளத்தில் மூழ்கி இந்த சத்தியத்தை செய்கிறேன் என்கிறார்.

அப்போது ஒரு குச்சியை இறைவன் நீட்டுகிறார். இதைப் பிடித்துக் கொண்டு குளத்தில் மூழ்கு என்கிறார். அப்போது குயவனார் குளத்தையே சிவமாகக் கருதி என் தேவையில்லாதப் பிரச்சனைகளை எல்லாம் நீ தான் தீர்த்து வைக்க வேண்டும் என்றும் என்னை ஞானவானாக மாற்றுவது உனது கையில் தான் இருக்கிறது என்றும் சொல்லி குளத்தில் மூழ்குகிறார்.

மூழ்கும்போது வயதான தோற்றம். அப்போது முதுமையின் நிலை. அதிலிருந்து எழும்போது எப்படி எழுந்திருக்கிறார் என்று பாருங்கள். இளமையில் இரண்டு பேரும் எப்படி சத்தியம் செய்தனரோ அதே தோற்றத்தில் வெளியே வந்தார். குளத்தில் மூழ்கும்போது அஞ்ஞானத்தில் இருந்தவர் குளத்தை விட்டு வெளியே வந்ததும் ஞானவானாக மாறினார்.

இதைத் தான் மாணிக்கவாசகர் சிவமே நீயே ஒரு குளம். உனக்குள் என்னை மூழ்கடித்துக் கொள்கிறேன். எனது மும்மலங்களைக் கழுவி பிறவி என்ற வெப்பத்தைத் தணித்து பிறவாமை என்ற குளிர்நிலையைத் தந்து அருள வேண்டும் என்று வேண்டுகிறார்.

ஆண்டாள் நாச்சியார் இன்றைய பாடலில் புள்ளின் வாய் கீண்டானை என்று தொடங்குகிறார்.

Aandal 13
Aandal 13

இந்தப்பாடலின் முடிவில் கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய் என்கிறார். அதாவது தூக்கம் என்ற திருட்டுத்தனத்தைத் தவிர்த்துக் கொண்டு இறைவனை தரிசிக்க வா என்று ஆண்டாள் தோழியை அழைக்கிறார்.

தூக்கம் ஒரு திருட்டா என்று கேட்கலாம். நாம் செலவு செய்யும் எல்லா பணமும் நமதுதானா..? நமது ஆயுட்காலம் நம்முடையதா? நமது பிள்ளைகள் அப்படியா? இதற்கு ஒரு கதை உண்டு.

ஒரு துறவி நடைபயணமாக தனது துறவறத்தைத் தொடங்கிச் சென்றார். அவர் அப்போது ஒரு வைராக்கியம் கொண்டிருந்தார். பொய் சொல்பவர் வீட்டில் சாப்பிடுவதில்லை என்று இருந்தார். ஒவ்வொரு வீட்டிலும் அவர்களைப் பற்றி நல்லா விசாரித்துத் தான் அவர்களின் வீட்டில் சாப்பிடுவார்.

அப்படி ஒரு முறை ஒரு ஊருக்கு வருகிறார். அங்கு உள்ள மக்களிடம் இந்த ஊரில் யார் அடியார்? யார் அடியார்களை எல்லாம் அன்போடு ஆதரிப்பாங்க என கேட்கிறார். அதற்கு எல்லோரும் ஒரு தனவந்தரைச் சொல்கின்றனர்.

அவர் பெரிய புண்ணியவான். அடியாரை நல்லா கவனிப்பார். பெரிய கோடீஸ்வரர். 4 பிள்ளைகள். அழகான குடும்பம். 70 வயசுல நல்ல பக்குவமான மனிதர் என சொல்கின்றனர். இவர் விசாரித்ததும் அந்த வீட்டுக்குப் போனார்.

Thuravi yathra
Thuravi yathra

அங்கு நல்லா அன்பா வரவேற்று அவருக்குப் பணிவிடைகள் எல்லாம் செய்து உபசரித்தனர். இப்போது அவர் கொஞ்சம் பொறுங்க. நான் சாப்பிடுறேன் என்றார். அப்போது அவரைப் பற்றி விசாரிக்கிறார் துறவி. அப்போது தனவந்தர் ஒரு பையன் தான் தனக்கு உண்டு என்கிறார். அப்போது மனதுக்குள் எண்ணிக் கொண்டார். இவர் பொய் சொல்கிறார் என்று.

சொத்துகளிலும் அவர் ஒரு கோடி என சொன்னார். அப்போதும் அவர் பொய் தான் சொல்கிறார் என்று முடிவு செய்தார். அப்போது சுவாமிக்கு என்ன வயசு எனக் கேட்கிறார். சுவாமி எனக்கு என்ன வயசாயிடுச்சு. என்ன ஒரு பத்தோ பதினொண்ணோ இருக்கும் என்றார். அதற்கு துறவிக்கு வந்ததே கோபம். உன்னை மாதிரி பொய்யன் வீட்டில் நான் நுழைந்ததே பாவம் என எழுந்தார்.

சுவாமி என அவரது காலில் விழுந்தார் தனவந்தர். எனக்கு பொய்யே சொல்ல வராது என்றார். சுவாமியிடம் பிள்ளைகள், சொத்து, வயது குறித்த பொய்யை சொன்னார் துறவி. அதற்கு சுவாமி பெத்ததெல்லாம் பிள்ளை கிடையாது. எனக்குன்னு ஒரு பிள்ளை தான் இருக்கு…என்றார்.

சொத்து விஷயமாக சொல்கையில் சேர்த்தது எல்லாம் என் சொத்து கிடையாது. இதெல்லாம் என்கூடவா வரப்போகுது என கேட்டார். தொடர்ந்து ஒரு நோட்டைக் காட்டி இதில நான் செய்த தர்மக் கணக்கு இருக்கு. இதுதான் ஒண்ணே கால் கோடி. இதுதான் கடைசி வரை என் கூட வரும் என்றார். அது சரி அப்படின்னா அதென்ன 11 வயசு? என்றார்.

பேசுறோம்…தூங்குகிறோம்…உட்காருறோம்…எழும்புறோம்..தேவையில்லாம நேரத்தை வீணாக்குகிறோம்….இதெல்லாமா என் நேரம்..? இது உலக விஷயங்களுக்காக செலவிடுகிற நேரம்? இறைவனுக்கு என்று நான் தினமும் 4 மணி நேரம் தான் செலவிடுகிறேன் என்றார். எனது 10 வயசுல இருந்து நான் கடவுளுக்குன்னு வேலை செய்ய ஆரம்பிச்சேன்.

அப்படி கணக்குப் போட்டுப் பார்த்தா ஒரு 10ல இருந்து 11 வயசு தான் எது ஆயுட்காலமாக எடுத்துக் கொள்ள முடியும் என்றார். இதைக் கேட்டதும் துறவி அவரை ஆரத்தழுவிக் கொண்டார்.

மேலும் உங்களுக்காக...