கணவன் மனைவிக்குள் ஒரே ஈகோ, எப்போ பார்த்தாலும் ஓயாத பிரச்சனை, வீட்டுக்கு வந்தாலே நிம்மதி இல்லை…என்னடா வாழ்க்கை இது? என்று புலம்பித் தவிப்பவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துக் கொண்டே போகிறது.
இதனால் ஏராளமான விவாகரத்துகள், கணவன் மனைவி பிரிவு உண்டாகின்றன. இவர்களுக்கு ஆன்மிக விஷயத்தில் போதிய விழிப்புணர்வும், நம்பிக்கையும் இல்லாதது தான் இதற்கு முக்கிய காரணம். பகுத்தறிவு என்ற பெயரில் பலவிதமாக சிந்தித்து தன்னையும், தன்னைச்சுற்றியுள்ளவர்களையும் குழப்பி விடுகின்றனர்.
இதிலிருந்து விடுபட தான் நம் முன்னோர்கள் பல விரத முறைகளையும், ஆன்மிக விஷயங்களையும் சொல்லித் தந்துள்ளனர். அவற்றை முறையாகக் கடைபிடித்தாலே நம் வாழ்க்கை சிறப்பாக அமையும். அந்த வகையில் இப்போது நாம் காண இருப்பது கணவன் மனைவிக்குள் ஒற்றுமையை அதிகரிக்கச் செய்யும் உமா மகேஷ்வரி விரதம்.
கார்த்திகை மாதம் இந்த விரதம் வருகிறது.
பொதுவாக ஆவணி மாத பௌர்ணமி அல்லது புரட்டாசி மாத பௌர்ணமியில் இந்த விரதம் இருப்பாங்க. 16 ஆண்டுகள் தொடர்ந்து எடுக்க வேண்டிய விரதம் இது.
புரட்டாசி மாத பௌர்ணமி அன்று முழு விரதமாக இருந்து இந்த விரதத்தைத் தொடங்க வேண்டும். அப்போது சிவபெருமானும் அம்பாளும் இருப்பது போன்ற ஒரு விக்கிரகத்தை வாங்கி வீட்டில் வைக்க வேண்டும். அதற்கு பூஜை செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இந்த பூஜை செய்து 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு சிவன் கோவிலில் சென்று இந்த விக்கிரகத்தைக் கொடுத்து விட வேண்டும்.
இந்த விரத காலத்தில் அன்னதானத்தை மேற்கொள்ள வேண்டும். பலருக்கும் உள்ள பிரச்சனை இதுதான். 16 ஆண்டுகள் எப்படி இந்த விரதத்தைப் பூர்த்தி செய்ய முடியும்? இந்த விக்கிரகத்தை எங்களால் பாதுகாக்க முடியல என்பதுதான். இந்த விரதம் இருக்கும்போதே சிலருக்குப் பாதியில் நின்றுவிடுகிறது.
கணவன் மனைவி ஒற்றுமைக்காகவே இந்த விரதம் இருக்கப்படுகிறது. சித்திரை பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆனி சாவித்திரி விரதம், ஆடி கோவர்த்தன விரதம், ஆவணி அவிட்டம், புரட்டாசி உமா மகேஸ்வரி விரதம், ஐப்பசி பௌர்ணமி விரதம், கார்த்திகை தீபத்திருநாள் அல்லது ஞாயிற்றுக்கிழமை, மார்கழி மாதம் திருவாதிரை, தை மாதம் தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகிய நாள்களில் நாம் இந்த விரதத்தை இருக்கலாம்.
நமக்கு எது சௌகரியமாக உள்ளதோ இந்த நாள்களில் விரதம் இருக்கலாம். அதுவும் நமக்கு கணவன் மனைவியின் ஒற்றுமையை அதிகரிக்கும். இப்படி விரதம் இருந்தாலும் உமா மகேஸ்வரி விரதத்திற்கு உண்டான பலன் கிடைக்கும்.
இவற்றில் அதி விசேஷமான பலன் தரக்கூடியது புரட்டாசி பௌர்ணமி. அதேபோல் ஒவ்வொரு மாத பௌர்ணமியிலும் இருக்கலாம். அதிலும் இந்த கார்த்திகை மாத ஞாயிறன்று இந்த விரதம் இருப்பது சிறப்பது.
துர்வாச முனிவரின் சாபத்தால் மகாலெட்சுமியை மகாவிஷ்ணு பிரிய நேரிடுகிறது. மீண்டும் அவர்கள் இணையக் காரணம் இந்த உமா மகேஷ்வரி விரத பலன் தான்.
பிரிந்து வாழும் கணவன் மனைவி ஒற்றுமைக்காக இருக்கும் உன்னதமான நாள் தான் இந்த உமா மகேஷ்வரி விரத நாள். சில பெண்களுக்கு கணவனுடன் சேர்ந்து வாழ ஆசை இருக்கும். ஆனால் அவரது கணவர் ஒத்துக்கொள்ளாமல் இருப்பார். அப்படிப்பட்ட பெண்களும் இந்த விரதம் இருந்தாலும் கணவருடன் சேர்ந்து வாழும் பாக்கியம் உண்டாகும். அதே போல தான் மனைவி பிரியும் போதும் கணவன் இருக்கலாம்.
கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை இந்த விரதம் எப்படி ஆரம்பிப்பது என்று பார்க்கலாம். ஒரு நாளுக்கு முன்பே வீடெல்லாம் கழுவி விட வேண்டும். ஞாயிறன்று காலை எழுந்து குளித்ததும் உமாமகேஷ்வரர் விக்கிரகம் அல்லது திருவுருப்படத்தை வைத்து இந்த பூஜையை செய்யலாம்.
சுவாமியும் அம்பாளும் இணைந்து இருக்க வேண்டும். இப்படி இல்லை என்றால் ஒரு விளக்கேற்றி வைத்து சுவாமியையும் அம்பாளையும் நினைத்து வழிபடலாம். படம் அல்லது விக்கிரகம் வைத்துள்ளவர்கள் ஒரு பலகை எடுத்து அதில் அந்த படத்தை வைத்து வில்வம் மலரைக் கொண்டு அர்ச்சனை பண்ண வேண்டும்.
அதிரசம் அல்லது கல்கண்டு கொண்டு நைவேத்தியம் பண்ணலாம். பெண்கள் வீட்டிலேயே செய்து கொள்ளலாம். பால் காய்ச்சி நாட்டுச்சர்க்கரை வைத்து நைவேத்தியம் செய்யலாம். 2 வாழைப்பழம், வெத்தலைப்பாக்கு, ஊதுபத்தி இவ்ளோ தான் தேவை. வைத்து விட்டு சுவாமிக்கு உள்ளம் உருக பிரார்த்தனை செய்ய வேண்டியது தான் முக்கியம்.
இந்த ஆண்டு நவ.20 (இன்று), நவம்பர் 27, டிசம்பர் 4, டிசம்பர் 11 ஆகிய தேதிகளில் கடைபிடிக்கலாம்.