வீட்டில் தீய சக்தியை அகற்றும் ஐயப்ப கன்னிசுவாமி பூஜை…! எப்படி செய்வதுன்னு பார்ப்போமா…!

Published:

கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து என்ற ஐயப்பனின் பாடல் நம் காதோரம் ஒலிக்கும் போதெல்லாம் நம்மால் அந்த இடத்தை விட்டு நகர மனம் வருவதில்லை.

அவ்வளவு ஆனந்தமான பாட்டு. அப்படி என்றால் கன்னி பூஜையிலும் எத்தனை எத்தனை ஆனந்தமான பாட்டுகள் உலா வருகின்றன என்பதை நாம் பார்த்திருப்போம்.

அவ்வளவு பாட்டுகளும் ஐயப்பசாமிமார்கள் தாளம் போட்டு பாடும்போது நமக்குள் எழும் ஒருவித ஆனந்தப் பரவச நிலை மாலையே போடாவிட்டாலும் வருவது தான் தனிச்சிறப்பு. அத்தகைய சிறப்பு வாய்ந்த கன்னிபூஜையை ஐயப்ப பக்தர்கள் காலம் காலமாக செய்து வருகின்றனர். அந்த பூஜை முறை எப்படி என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

சபரிமலைக்கு முதல் முறையாக இருமுடி கட்டிச் செல்லும் ஐயப்ப பக்தரை கன்னி சுவாமி என்று அழைக்கிறோம். இவர்கள் செய்யும் பூஜை தான் கன்னி சுவாமி பூஜை. இதை வீட்டில் செய்வது சிறப்பு. வீட்டில் இறை சக்தி உண்டாகும். தீயசக்தி வீட்டை விட்டு அகலும். இது சத்தியமான உண்மை.

Kanni pooja2
Kanni pooja2

பூஜையை அவரவர் வசதிக்கேற்ப நடத்தலாம. இப்படி தான் ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்று ஐயப்பன் விரும்பவில்லை. ஏனென்றால், ஐயப்பசாமி ஏழைபங்காளன் என்பது நாம் அறிந்ததே.

சபரிமலை செல்ல மாலை போட்டுள்ள பக்தர்கள் வீட்டில் ஐயப்ப பூஜை செய்து, அதில் கலந்து கொள்ளும் ஐயப்பமார்களுக்கும், பொது மக்களுக்கும் பூஜை முடிந்தவுடன் அன்னதானம் அளிப்பது சிறப்பு.அதிலும் கன்னி சுவாமி பூஜை என்றால் விசேஷம்.

கன்னி சுவாமி பூஜை போட வசதி இல்லை என்று சொல்லும் ஐயப்பமார்கள் கவலைப்படவேண்டாம். மலைக்குச் செல்லும் முன் ஏதாவது ஒரு நாளில் தான் சாப்பிட சமைக்கும் உணவைக் கூடுதலாக சமைத்து அதை ஐயப்பசாமிக்கு படையல் போட்டு 108 சரணகோஷம், எழுப்பி ஆரத்தி காட்டி வழிபட்ட பின்பு சபரிமலைக்கு மாலை போட்ட மூன்று ஐயப்ப சுவாமிகளை வீட்டிற்கு அழைத்து அன்னம் அளிப்பது சிறப்பு.

மூன்று சுவாமிகள் கிடைக்கவில்லை என்றால் வருத்தப் படவேண்டாம், ஒருவர் இருந்தாலும் பரவாயில்லை.

அப்படியும் கிடைக்கவில்லை என்றால் அன்னத்தை மூன்று பொட்டலமாக கட்டி சாலையில் குடியிருக்கும், ஏழைகளுக்கோ, மாற்றுத்திறனாளிகளுக்கோ கொடுக்க வேண்டும். இதன் மூலம் ஐயப்ப சுவாமியின் அருளை பரிபூரணமாக பெறலாம் என்பது உண்மை. ஏனென்றால் அன்னதான பிரபு நம் ஐயப்பசாமி.

கன்னி பூஜையை வெள்ளைக்குடி பூஜை, படுக்கைபூஜை, ஆழி பூஜை என்றும் சொல்வார்கள். மண்டல காலமாகிய கார்த்திகை முதல் தேதியில் இருந்து, மார்கழி 11ம் தேதிக்குள் நடத்துவது சிறப்பு. (டிசம்பர் 26 க்குள்).

பூஜை செய்ய முதலில் ஐயப்பன், விநாயகர், முருகர் படங்களை தயார் செய்து கொள்ளவேண்டும். ஐயப்பன் படத்திற்க்கு வலது பக்கம் விநாயகர், இடது பக்கம் முருகர் படத்தை வைத்து பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

வாழைப்பழம், அவல், பொரி, அச்சு வெல்லம், பழங்கள் இவைகளை படைத்து சரணகோஷங்கள் மற்றும் ஐயப்பன் பாடல்களை பாடி கற்பூர ஆரத்தி காட்டி பூஜை செய்ய வேண்டும்.

கன்னிபூஜை முடிந்தவுடன் வந்திருக்கும் அனைவருக்கும் உணவு அளிக்கவேண்டும். ஐயப்ப சுவாமியின் கன்னி பூஜையின் நோக்கமே அன்னதானம் அளிப்பது தான். அது ஐயப்பனுக்கு பிடித்தமான ஒன்று.

ஐயப்ப பூஜையில் ஏதாவது ஒரு ரூபத்தில் ஐயப்பன் வந்து நாம் படைக்கும் அன்னத்தை உண்பார் என்பது பெரியோர் வாக்கு.

Kanni pooja3
Kanni pooja3

சபரிமலைக்கு மாலை போட்டு 18 ஆண்டுகளுக்கு மேல் சென்று வந்தவர்கள் குருசாமி என்று சொல்வார்கள். ஒரே ஆண்டில் 18 தடவை சபரிமலைக்கு சென்று வந்தால் குருசாமி என சொல்லமுடியாது.

18 ஆண்டுகள் மண்டல பூஜை (அ) மகர விளக்கு பூஜைக்கு 48 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை விரதமிருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பனை தரிசித்து வந்தவர் தான் குருசாமி. இவர்கள் மற்றவர்களுக்கு மாலை அணிவிக்கலாம். கன்னி பூஜை, விளக்கு பூஜை செய்யலாம், இரு முடி கட்டலாம்.

கன்னி பூஜை செய்ய வசதியில்லாத பக்தர்கள் கடன் வாங்கி செய்யக்கூடாது. அதை ஐயப்பன் விரும்பவே மாட்டார். அவர் எப்போதும் பக்தர்களின் உளம் கனிந்த பக்தியை மட்டுமே விரும்புவார்.

 

மேலும் உங்களுக்காக...