இறைவனின் பரவெளி தத்துவத்தை உணர்த்தும் கோவில் எதுன்னு தெரியுமா?

அண்டசராசரமும், அகில உலகமும், இந்த பிரபஞ்சமும், பேரண்டமும் என்றெல்லாம் சிலர் சொல்வதைக் கேள்விப்பட்டு இருப்போம். இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார் என்பதைத் தான் இவ்வளவு விலாவாரியாக சொல்கிறார்கள். அவற்றில் ஒன்று தான் இந்த பரவெளி…

அண்டசராசரமும், அகில உலகமும், இந்த பிரபஞ்சமும், பேரண்டமும் என்றெல்லாம் சிலர் சொல்வதைக் கேள்விப்பட்டு இருப்போம். இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார் என்பதைத் தான் இவ்வளவு விலாவாரியாக சொல்கிறார்கள். அவற்றில் ஒன்று தான் இந்த பரவெளி தத்துவம். இதை மாணிக்கவாசகர் எப்படி சொல்கிறார் என பிரபலம் ஒருவர் அலசி ஆராய்ந்துள்ளார். என்னன்னு பாருங்க.

நீங்கள் மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்தின் 51 பகுதிகளையும் ஒருமுறையாவது படித்துப் பாருங்கள். அவை அனைத்தையும் படிக்க முடியலன்னா முதல் 4 பகுதிகளையாவது படித்துப் பாருங்கள். அதுல போற்றி திரு அகவல் என்பது ஒரு அற்புதமான பகுதி. நிறைய அதிசயங்களையும், அற்புதங்களையும் சுட்டிக்காட்டுகிற அற்புதமான பகுதி.

அதுல மாணிக்கவாசக சுவாமிகள் சொல்கிறார். இறைவன் எத்தன்மையானவர்? அப்படிங்கறதை பஞ்சபூத தத்துவமாக அவர் விளக்குகின்றார். பாரிடை ஐந்தயர் பறந்தாய் போற்றி. நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி. தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி. வழியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி. வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி.

அப்படின்னு பஞ்சபூதங்களிலும் இறைவன் எத்தன்மையானவர் அப்படிங்கறதை நமக்கு சொல்கிறார். இறைவன் பரவெளி தத்துவமாக அதாவது ஆகாச தத்துவமாக இறைவன் நமக்கு வெளிப்படக்கூடிய திருத்தலம். ஆகாயம் அப்படின்னு சொல்றோம். இதற்கு எல்லை உண்டா? எங்கே துவங்குகிறது? எங்கே முடிகிறது?

விஞ்ஞானத்தாலும் அறிய முடியாது. அது போல் இறைவன் எங்கிருந்து தோன்றினான்? எங்கே போய் முடிகிறான்? அவனுக்கு தொடக்கம் என்ன? முடிவும் என்ன? எதுவுமே தெரியாது. அதனால் தான் சிதம்பரம் ஆகாய தத்துவத்தை நமக்கு விளக்கக்கூடிய தளமாக மிக அற்புதமான இடமாக விளங்கிக் கொண்டு இருக்கிறது. மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.