வழக்கமா கிரிவலம் போக எல்லாருமே ஆசைப்படுவார்கள். காரணம் ஒரு மன அமைதி அப்போது கிடைக்கிறது. கண்குளிர இயற்கைக் காட்சிகளைப் பார்க்க முடிகிறது. சித்தர்களின் ஜீவசமாதி, சின்ன சின்ன கோவில்களில் போய் இறைவனைத் தரிசிக்க முடிகிறது. தியானம் செய்ய முடிகிறது. அந்த ஒரு நாளில் நம் மனம் எவ்வளவு கனமாக இருந்தாலும் லேசாகி விடுகிறது.
இதற்காகத் தான் திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் என பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்கின்றனர். பொதுவாக பௌர்ணமி தினங்களில் கிரிவலம் செல்வார்கள். இந்த கிரிவலத்தில் சித்தர்கள் நம் வேண்டுதலை எப்படி நிறைவேற்றுறாங்க. வாங்க பார்க்கலாம்.
கிரிவலம் என்றாலே சிவபெருமான் இருக்கும் மலை சார்ந்த திருக்கோவில்கள் தான் நினைவுக்கு வரும். அதிலும் குறிப்பாக திருவண்ணாமலையைச் சொல்லலாம். அதுபோல முருகப்பெருமானுக்கும் உண்டு.
‘குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’. அந்த வகையில் அந்த மலையைச் சுற்றி கிரிவலமாக வந்தும் பக்தர்கள் வழிபடுவர்.
நடந்து அந்தப் பாதையில் போகிறபோது நம் மனம் ஒருமுகப்பட்டு ஒரே சிந்தனை, ஒரே குறிக்கோளுடன் கிரிவலம் செய்கின்றோம். மலையைச் சுற்றி உள்ள மூலிகைக் காற்று, யோகியர்கள், சித்த புருஷர்கள் இன்றும் நம் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறார்கள்.
அவர்களது அருள்பார்வை நம் மீது படுகிறபோது எந்த நோக்கத்துக்காக செல்கிறோமோ அது 100க்கு 100 சதவீதம் நிறைவேறுகிறது.
அதனால்தான் கிரிவலம் சென்றால் கேட்டது கிடைக்கும் என்கிறார்கள். அப்படி இருக்கும்போது கிரிவலத்தை பௌர்ணமியில் செய்வது வழக்கம். சிலர் செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகள், சஷ்டி தினங்களில் செய்வர். தமிழ் மாதப்பிறப்புகளிலும் கிரிவலம் வருவர். ஆனால் இப்போது பௌர்ணமியில் தான் கிரிவலம் செய்கின்றனர். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



