பண்டிகை நாட்களில் காகத்திற்கு உணவு வைப்பதற்கான காரணம் என்ன தெரியுமா…?

By Meena

Published:

பொங்கல், தீபாவளி, அமாவாசை, பௌர்ணமி ஆகிய தினங்களில் நம் வீட்டு பெரியோர்கள் காகத்திற்கு உணவளிப்பதை நாம் பார்த்திருப்போம். இது பொதுவாக அனைவர் வீடுகளிலும் நடக்கின்ற வழக்கமான முறையாகும். நம் முன்னோர் காலத்தில் இருந்தே இதை செய்து வந்துள்ளனர். ஆனால் எதற்காக காகத்திற்கு உணவு அளிக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? அதற்கு காரணம் என்ன என்பதை இனி காண்போம்.

காகம் ஒரு தனித்துவமாக உயர்ந்த குணம் உள்ள பறவையாக கருதப்படுகிறது. ஏனென்றால் உயிரினங்களில் கூடி வாழும் பறவை காகம். எந்த உணவு கிடைத்தாலும் தங்கள் கூட்டத்தோடு பகிர்ந்து சேர்ந்து உண்ணுவது காகம் தான். அதுமட்டுமில்லாமல் தனது துணை இறந்துவிட்டால் வாழ்நாளில் வேறு துணை தேடாமல் தனியாகவே இருந்து சாகக்கூடிய தன்மை கொண்டது காகம். இது மட்டுமில்லாமல் தினசரி நீராடி சுத்தமாக இருப்பது காகம் தான்.

அதனால் காகத்தை நம் முன்னோர்களின் வடிவமாக கருதுகிறார்கள். முக்கியமான பண்டிகை காலத்தில் சாதத்திற்கு உணவளிப்பதன் மூலம் நம் வீட்டின் மறைந்த மூதாதையர்கள் காகம் வடிவெடுத்து நம் வீட்டில் வந்து நம் உணவை சாப்பிடுவதாக ஒரு ஐதீகம். அதனால்தான் எந்த விசேஷமானாலும் சுவாமிக்கு படையல் போட்டு கும்பிட்டு விட்டு காகத்திற்கு ஒரு பங்கு எடுத்து வைத்த பிறகு தான் வீட்டில் உள்ளோர் சாப்பிடுவார்கள்.

நாம் வைக்கும் உணவை காகம் உடனே எடுத்து சாப்பிட்டு விட்டால் நம் முன்னோர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது அர்த்தம். அப்படி நாம் வைக்கும் சாதத்தை காகம் எடுக்கவில்லை என்றால் நம் முன்னோர்கள் ஏதோ வருத்தத்தில் இருக்கிறார்கள் எனவும் அதற்கான பரிகாரத்தை செய்ய வேண்டும் என்றும் ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.

அது மட்டுமில்லாமல் இதற்கு வேறு ஒரு புராண கதையும் இருக்கிறது. அது என்னவென்றால் சனி பகவானால் ஏற்படும் இன்னல்களில் இருந்து தப்பிக்க வெள்ளை சாதத்தில் எள் சிறிதளவு கலந்து தினமும் பரிகாரமாக காகத்திற்கு உணவளிப்பவர்களும் உண்டு. மேலும் சனிபகவானின் வாகனம் தான் காகம். அதனால் காகத்திற்கு சாப்பாடு வைப்பதால் சனிபகவான் மனமிறங்கி அந்த பக்தர்களுக்கு வரும் இன்னல்களில் இருந்து காப்பாற்றுவாராம் என்றும் கூறுவர். அதனால்தான் ஒவ்வொரு விசேஷ தினங்களிலும் காக்கைக்கு உணவளிப்பது மிக முக்கியமானதாகவும் சிறப்பானதாகவும் கருதப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...