சித்ரா பௌர்ணமி ரொம்ப விசேஷமானது. அன்று கோவிலுக்குப் போவது, நீர்நிலைகளில் புனித நீராடுவது என நிறைய விசேஷங்கள் உண்டு. வைகை ஆற்றில் அழகர் இறங்குவதும் இந்த நாளில்தான். இந்த நாளில் தன்னோட தவ வலிமையை அதிகப்படுத்திக் கொள்வதற்காக சித்தபுருஷர்கள், ஞானிகள் தவம் செய்யக்கூடிய இடங்களுக்குப் போய் அங்கு இருக்கக்கூடிய குறிப்பாக சமாதிகளுக்குப் போய் வழிபாடு செய்வது, தியானம் செய்வது உண்டு. எதற்காக இந்த பௌர்ணமி நாளை நம் முன்னோர்கள் தேர்வு செய்தாங்கன்னு தெரியுமா? பௌர்ணமி என்பது ஒரு முழுமை பெற்ற நாள் மட்டுமல்ல. எந்தவிதமான மனக்குழப்பங்கள் இருந்தாலும் அந்தக் குழப்பங்களில் இருந்து வெளியே வருவதற்கான ஒரு நல்ல தெளிவை நமக்குப் பெற்றுத்தரும் நாளும் இதுதான்.
அதனால்தான் சித்த புருஷர்கள் வாழும் இடங்களுக்குச் சென்று முழுமையான பௌர்ணமி நாளில் வழிபாடு செய்றாங்க. மலையில் இருக்கக்கூடிய தலங்களில் சென்று கிரிவலம் செய்வது என எல்லாமே விசேஷமானது.
திருவண்ணாமலையில் ஏன் சித்ரா பௌர்ணமிக்கு மட்டும் அளப்பரிய கூட்டம் என்று இப்போ தெரிந்து இருக்குமே. அங்கு கிரிவலம் என்பது ரொம்பவே விசேஷமானது. உங்க ஊர் பக்கத்தில் சிவன் கோவில் இருந்தாலும் இப்படி கிரிவலம் பண்ணலாம். மலையே இல்லை என்றாலும் உங்களால் பௌர்ணமி அன்று 11, 21, 108 என ஏதாவது ஒரு எண்ணிக்கையில் வலம் வந்தால் அதிவிசேஷமானது.
இது கிரிவலம் சென்று வந்த பலனைத் தரும். மலை இருக்கு. கோவில் இருக்கு. ஆனால் சிவன் இல்லை. முருகர் தான் என்றாலும் கவலை வேண்டாம். சிவனும், முருகரும் வேறில்லை. சித்ரா பௌர்ணமி அன்று சிவனுக்கு எப்படி விசேஷமான வழிபாடு இருக்குதோ அதே மாதிரி முருகன், அம்பாள், நாராயணர் என எல்லா தெய்வங்களுக்கும் விசேஷமான வழிபாடு உண்டு.
இந்தநாளில் சத்யநாராயண பூஜை செய்வது ரொம்பவே விசேஷம். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார். இந்த அற்புதமான சித்ரா பௌர்ணமி நாள் நாளை (1.5.2026) வருகிறது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



