புரட்டிப் போட்ட தெய்வீகக் காதல்…. யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே… கண்ணனோடு தான் ஆட…!

Published:

இன்று உலக காதலர் தினம் (14.02.2023) அனுசரிக்கப்படுகிறது. இந்த வேளையில் காதல் என்றால் என்ன என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்த ஒரு தெய்வீகக் காதலைப் பற்றி நாம் பார்ப்போம்.

எந்த ஒரு நிபந்தனையும் எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பது தான் உண்மையான காதல். அப்படி ஒரு காதலைத் தான் ராதை கண்ணன் மீது வச்சிருந்தாள். ஜெயதேவர் எழுதிய கீதா கோவிந்தத்தில் ராதை கண்ணனின் காதல் கதைகள் இடம்பெறுகிறது.

மதுராவின் சிறைச்சாலையில் தேவகிக்கும், வாசுதேவருக்கும் மகனாகப் பிறக்கிறார் கண்ணன். அவர் கோகுலத்தில் யசோதாவுக்கும், நந்தகோபருக்கும் மகனாக வளர்க்கப்படுகிறார். பின்னர் அங்கிருந்து பிருந்தாவனத்திற்குச் செல்கின்றனர். அங்குள்ள எல்லோருக்கும் கண்ணன் செல்லப் பிள்ளையாகிறார்.

தன்னோட நண்பர்களுடன் சேர்ந்து வெண்ணை திருடி தின்பது, புல்லாங்குழல் இசைப்பது என கண்ணன் செய்யும் குறும்புகள் அங்குள்ள எல்லோரையும் கவர்கிறது. அப்போது தான் அவரைச் சுற்றி எப்போதும் கோபியர் கூட்டம் அலைமோதிக்கிட்டே இருக்கு.

அந்தக்கோபியர்களில் ராதை மீது மட்டும் கண்ணனுக்குத் தனி பிரியம். மற்றவர்கள் கண்ணனைக் கடவுளாகப் பார்க்கின்றனர். தன்னோட பாதுகாவலனாக நினைக்கின்றனர். ஆனால் ராதைக்கு மட்டும் கண்ணனின் மீது தனித்துவமான அன்பு படர்கிறது.

ஒருபோதும் கண்ணன் எந்தப் பிரச்சனைகளுக்கும் ஆளாகக் கூடாது என்று அவள் உள்ளம் துடிக்கும். ராதை தன்னில் ஒருவனாகக் கண்ணனை நினைக்கிறாள். அந்த மகத்துவமான அன்பு தான் கண்ணனைக் கட்டிப் போட்டது.

Ratha Kannan 1
Ratha Kannan

ராதை ஒருநாள் கூட கண்ணனைப் பார்க்காமலோ அவனது குழலோசையைக் கேட்காமலோ இருந்ததில்லை. அப்படி என்றாவது ஒரு நாள் அவளால் கண்ணனைப் பார்க்க முடியாமல் போனால் அன்று முழுவதும் சாப்பிடவும் மாட்டாள்.

தூங்கவும் மாட்டாள். அப்படிப்பட்ட ராதை, கண்ணனின் காதலுக்கு மிகப்பெரிய சோதனை வந்தது. அதுதான் கண்ணன் மதுரா செல்ல வேண்டிய நிர்ப்பந்தம்.

இதைக் கேட்டு மொத்த பிருந்தாவனமும் சோகத்தில் மூழ்கியது. ராதையோ துக்கம் தாளாமல் வேதனையுடன் தவித்துக் கொண்டு இருக்கிறாள்.

மறுநாள் கண்ணனும், பலராமனும் ரதத்தில் ஏறிப் புறப்பட, ராதை ஓடோடி போய் பாதையின் அருகில் உள்ள பழத்தோட்டத்தில் காத்துக் கொண்டு இருக்கிறாள். ரதம் வருவதைக் கண்டு வேதனையுடன் பார்த்துக் கொண்டு இருக்கிறாள்.

எப்படியோ கண்ணன் அவள் இருப்பதைப் பார்த்து விடுகிறான். உடனே ரதத்தை நிறுத்திவிட்டு ஓடோடிப் போய் பழத்தோட்டத்தில் இருக்கும் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு என் உடல் மட்டும் தான் மதுராவிற்குப் போகிறது.

என் மனது எப்போதுமே உன் வசம் தான் என்கிறார். தன் கையில் உள்ள புல்லாங்குழலை அவளிடம் கொடுக்கிறார். இதை என் நினைவு வரும்போதெல்லாம் நீ வாசி என்கிறார்.

Ratha Kannan3
Ratha Kannan2

நீயும் நானும் யமுனை ஆற்றங்கரையிலும், சோலைகளிலும் சந்தித்துப் பேசிய நினைவுகள் எப்போதும் இந்தப் புல்லாங்குழல் ஓசையிலேயே நிறைந்திருக்கும் என்று சொல்லி விட்டு மதுராவிற்குக் கிளம்பிப் போகிறான் கண்ணன். அங்கு சென்றதும் அவனுக்குப் பல வேலைகள் காத்திருக்கின்றன.

மதுராவிற்கு அரசனாகவும் ஆகிறான். அதே நேரத்தில் ராதைக்கு அயன் என்கிற அபிமன்யு கூட திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடக்கிறது. ஆனால் அவளது மனது முழுக்க கண்ணனே நிறைந்து இருக்கிறான். அதே போல கண்ணனின் மனதிலும் ராதையே நிறைந்து இருக்கிறாள்.

கண்ணன் பல திருமணங்கள் செய்த போதும் அவனது முதல் காதல் எப்போதுமே ராதாவுக்குத் தான். அவங்க ரெண்டு பேரும் பல வருடங்கள் பிரிந்து இருந்த போதும் அவர்களோட காதல் கொஞ்சம் கூட குறையல. மாறாக அதிகரிக்கவே செய்தது.

Kannan Ratha 1
Kannan Ratha

அப்படி இருக்கையில் கண்ணன் மதுராவில் இருந்து மக்களைக் காப்பாற்ற கடலுக்கு அடியில் துவாரகை என்ற ஒரு பெரிய நகரத்தை உருவாக்குகிறார்.

காலங்கள் உருண்டோடுகிறது. தனது கணவனின் இறப்பிற்குப் பிறகு ராதை முதுமைப் பருவத்தில் புல்லாங்குழலுடன் கண்ணனைப் பார்க்கத் துவாரகைக்கு வருகிறாள்.

வர்ற வழியெல்லாம் அவளுக்கு சிறு வயதில் பிருந்தாவனத்தில் கண்ணனோடு இருந்த நினைவுகள் தான். அந்த நினைவுகளுடனே துவாரகைக்கு வருகிறாள். அவளுக்குக் கண்ணன் பெரும் உபசரிப்புக் கொடுக்கிறார். மனது முழுக்கக் காதலோடு ரெண்டு பேரும் பேசிக்கொள்கின்றனர்.

பல வேலைகள் காரணமாகக் கண்ணன் ராதாவைக் கவனிக்க முடியாமல் போகிறது. ராதா யாரிடமும் சொல்லாமல் துவாரகை அரண்மனையை விட்டு வெளியேறுகிறாள்.

அவள் பின்னே குழலோசைக் கேட்கிறது. திரும்பிப் பார்த்தால் கண்ணன். அவள் கிளம்பியதும் எப்படியோ அதைத் தெரிந்து கொண்ட மாயக்கண்ணன் அவள் பின்னால் வந்து நிற்கிறார்.

அவரைப் பார்த்ததும் ராதை, எனக்கு முதுமைப் பருவம் நெருங்கிடுச்சி. இந்தக் குழலோசையைக் கேட்டபடியே நான் உயிரை விட வேண்டும் என்கிறாள். அவள் இறக்கும் வரை கண்ணன் குழலோசை இசைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

அவளது இறப்பிற்குப் பிறகு இந்தப் புல்லாங்குழல் அவளுக்கு மட்டும் தான் உரியது என்று உடைத்தெறிந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதன்பிறகு ராதையின் மீது கொள்ளைப் பிரியம் இருந்த காரணத்தால் தன்னோட பெயரைச் சொல்லும் போதெல்லாம் ராதையின் பெயரையும் சேர்த்தே சொல்ல வேண்டும் என்கிறார். அப்படி வந்தது தான் ராதாகிருஷ்ணன் என்ற பெயர்.

மேலும் உங்களுக்காக...