நம் முன்னோர்கள் எதை செய்தாலும் ஒரு காரணத்தோடு தான் செய்து வந்துள்ளனர். அவர்களின் பல செயல்களுக்கு நமக்கு சரியான காரணங்கள் புரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதனால் அவர்கள் பின்பற்றி வந்த பல வழிமுறைகளை நாம் கைவிட்டு விட்டோம்.
நம் முன்னோர்கள் வீட்டில் கண் திருஷ்டியை அழிக்கவும், விஷ ஜந்துக்களை நீக்க பயன்படுத்திய பொருள் தான் ஆகாச கருட கிழங்கு. இன்றளவும் பலரும் வீட்டின் முன் ஒரு நூலில் கட்டிப்போட்டு வைத்திருப்பார்கள். ஆனால் அதன் மகத்துவம் என்ன அதை ஏன் கட்டி வைத்தார்கள் என்ற பின்னணி நம்மில் பலருக்கு தெரியாமலேயே அதை செய்து வருகின்றோம்.
ஆகாசகருட கிழங்கு ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட்டால் அதை சுற்றியுள்ள காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொண்டு, கிழங்கிலிருந்து கொடி தழைக்க ஆரம்பிக்கும். அப்படி அந்த கிழங்கு வெகு விரைவாக தழைத்துவிட்டால் வீட்டில் சுபிட்சமாகி விடும்.
வீட்டில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதன் காரணமாக தான் நுண்கிருமிகளின் வளர்ச்சி அதிகரித்து நோய்களை உருவாக்குகிறது. ஈரப்பதத்தை நீக்கத்தான் அவ்வப்போது சாம்பிராணி புகை போடுகிறோம்.
இந்த ஆகாச கருடன் கிழங்கு 24 மணி நேரமும் இந்த வேலையை செய்து நம்மை நோயிலிருந்து பாதுகாக்கிறது. ஆகாச கருட கிழங்கு ஒரு கருடனுக்குச் சமமாகும். அதாவது கருடன் இருக்கும் இடத்தில் விஷ ஜந்துக்கள் நெருங்காது. அப்படியே வந்தாலும் அதன் விஷம் பங்கப்படும்.
அப்படி தான் இந்த ஆகாச கிழங்கு வைத்திருக்கும்,ம் வீட்டில் விஷ ஜந்துக்கள் வராது. அதே போல் எதிரிகளால் ஏவப்படும் பில்லி, சூனியம், ஏவல், செய்வினை போன்ற கெட்ட சக்திகள் அணுகாது. அதையும் மீறி அந்த சக்தி வந்தால் ஆகாச கருடன் தன் உயிரைக் கொடுத்து நம்மை காக்கும்.
அதாவது கெட்ட சக்தி அதிகமாக இருப்பின் அதை அழிக்கும். கிழங்கு அந்த கெட்ட சக்திக்கு தன்னை பலியிட்டு, நம்மைக் காக்கும். அதிக கெட்ட சக்திகளை எதிர்கொண்ட ஆகாச கருட கிழங்கு கருகி அழுகிவிடும். அப்படி அழுகிப் போயிருந்தால் அதை வீட்டிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு, வீட்டில் பூஜை செய்து வேறொரு ஆகாச கருடன் கிழங்கை கட்டிவிடுங்கள். ஆகாச கருடனைக் கண்டாலே கடும் விஷத்தன்மை உடைய பாம்புகள் கூட ஓடி விடும்.