2.25 லட்சம் சம்பளத்தை உதறச் சொன்ன அப்பா.. ஐஐடி-யின் இயக்குநராக காமகோடி உயர்ந்த சரித்திரம்

By John A

Published:

என்னதான் பல லட்சம் சம்பளம் வாங்கினாலும் அந்த வேலை மனதிற்கு விருப்பமாக இல்லையெனில் ஒரு ஆர்வமே இருக்காது. ஆனால் அதே வேளையில் ஒரு அளவான சம்பளத்தில் மனதிற்குப் பிடித்த ஒரு வேலையைச் செய்யும் போது அதில் கிடைக்கும் ஆத்மார்த்தமான திருப்திக்கு அளவே கிடையாது. அப்படி தான் பணிபுரிந்த 2.25 சம்பளம் தரும் ஐடி நிறுவன வேலையை உதறி இன்று இந்திய மொழில்நுட்பக் கழகம், மெட்ராஸ்-ன் இயக்குநராக உயர்ந்திருப்பவர்தான் பேராசிரியர் காமகோடி.

காமகோடியைப் பற்றி தெரியாத பொறியியல் மாணவர்களே இருக்க முடியாது. பலருக்கும் உந்து சக்தியாக விளங்கிக் கொண்டிருப்பவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணிப்பொறி அறிவியலில் பட்டம் பெற்றவர் காமகோடி பின் முதுகலைப் படிப்பாக ஐஐடி மெட்ராஸில் அதே கணினி அறிவியல் பொறியியல் துறையில் பயின்றவர் பின் முனைவர் பட்டமும் பெற்றார். தன்னுடைய அசாத்திய கல்வித் திறமையின் காரணமாக அவருக்கு ஐடி துறைகளில் பணிவாய்ப்பு தேடி வந்தது.

ஆனால் அவரது தந்தைக்கு தன் மகன் ஒரு பேராசிரியராக வர வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. இதற்காகவே தனது மகனின் வேலை போக வேண்டும் என்று கொள்வாராம். தனது விருப்பத்தை காமகோடியிடம் கூறியபோது, தந்தையின் விருப்பத்தை அறிந்து மாதம் ரூ. 2.25 லட்சம் பெற்றுக் கொண்டிருந்த ஐடி வேலையை உதறி ஐஐடி-யில் பேராசிரியராக ரூ. 23,000 சம்பளத்தில் பணியில் சேர்ந்தார். ஐஐடி மெட்ராஸில் கணினி அறிவியல் துறையின் தலைவராகவும், சக்தி மைக்ரோபிராசசர் என்னும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நுண்செயலியின் தயாரிப்புக் குழுவின் தலைவராகவும் இருந்தார்.

டிஎன்பிஎஸ்சி எழுதுறீங்களா? புதிய தலைவர் பிரபாகர் ஐ.ஏ.எஸ். சொன்ன குட் நியூஸ்

மேலும் கணினி அறிவியல் & பொறியியல் பற்றி மாணவர்கள் எளிதாக அறிந்து கொள்ளும் பொருட்டு சில நூல்களையும் எழுதியிருக்கும் காமகோடி இந்திய தொழில்நுட்பக் கழகம்,மெட்ராஸ் கல்வி மையத்தின் இயக்குநராக கடந்த 2022-ல் பதவி உயர்வு பெற்றார். தேசிய பாதுகாப்பு மன்றத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் உள்ள காமகோடி இன்று பொறியியல் பயிலும் மாணவர்களின் இன்ஸிபிரேஷனாக உள்ளார்.

தான் கற்ற கல்வி தனக்கு மட்டும் பயன்படக் கூடாது என்ற அவரது தந்தையின் உயர்ந்த எண்ணத்தால் தனது மகனை பேராசிரியராக்கியதால் தான் இன்று பல்லாயிரம் பொறியியல் மாணவர்களை உருவாக்கும் உயர்ந்த பொறுப்பில் அங்கம் வகிக்கிறார் காமகோடி. இன்று இவரது அயராத பணியினால் நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனங்களில் முதலிடத்தில் உள்ளது ஐஐடி மெட்ராஸ்.