தொடங்கியது முத்தமிழ் முருகன் மாநாடு… பழனியில் குவியும் பக்தர்கள்… ஒரு லட்சம் பேருக்கு உணவு ஏற்பாடு…

Published:

இந்து சமய அறநிலைத்துறை சார்பாக உலக முத்தமிழ் முருகன் மாநாடு அருள்மிகு தண்டாயுதபாணி சாமி திருக்கோயில் பழனியில் இன்று ஆகஸ்ட் 24 மற்றும் ஆகஸ்ட் 25 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இன்று இந்த நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. இன்றும் நாளையும் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டை காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

முத்தமிழ் முருகன் மாநாட்டின் நோக்கம் என்னவென்றால் உலக நாடுகளில் திருமுருக வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. இந்தியா, இலங்கை, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மொரிஷியஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, கன்னடா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் தனித்துவம் பெற்ற வழிபாடாக திருமுருக வழிபாடு சிறந்து விளங்குகிறது. ஆகவே உலகம் முழுவதும் இருக்கும் முருக பக்தர்களையும் சிந்தனையாளர்களையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு இந்திய சமய அறநிலையத்துறை இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த மாநாட்டின் குறிக்கோள்கள் என்னவென்றால் முருக வழிபாட்டு உள்ளுறை நெறிகளை உலகெங்கிலும் பரப்புதல், முருகன் அடியார்களை உலகளாவிய அளவில் ஒருங்கிணைத்தல் போன்றவை ஆகும். இந்த மாநாட்டிற்காக மொத்தமாக 38 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆதீனங்களின் சிறப்புரை, முருகனைப் பற்றிய பாடல்கள், நடனம், நாடகம், மங்கல இசை என அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஐந்து அரங்குகளில் ஆய்வு கட்டுரைகள் மீது விவாதமும் நடைபெற உள்ளது. அதற்காக 1300 கட்டுரைகள் பலரால் அனுப்பப்பட்டுள்ளது. இதில் திருவாடுதுறை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், பேரூராதீனம், குரு மகா சன்னிதானம், சிரவை ஆதீனம், மதுரை ஆதீனம், தருமபுரி ஆதீனம் உள்ளிட்ட 15 ஆதீனங்கள் மற்றும் 30 ஆன்மீக சொற்பொழிவாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

இது தவிர 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர். 3D வடிவில் முருகனை அருகில் இருந்து தரிசனம் செய்யும் வகையிலும் நூறு பேர் அமர்ந்து பார்க்கும் வகையிலும் அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5000 பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மாநாடு மற்றும் கண்காட்சிக்கு வந்து செல்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும் என்பதால் கலந்து கொள்ளும் அனைவருக்கும் உணவுகள் ஏற்பாடு மற்றும் அனைவருக்கும் 200 கிராம் அளவிலான பஞ்சாமிர்தம், குங்குமம், விபூதி, லேமினேஷன் செய்யப்பட்ட முருகன் போட்டோ வழங்க பிரத்யேக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டிற்காக மக்கள் வந்து செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. கூட்டம் அதிகமாக இருப்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக நடத்தப்படும் முதல் பெரிய மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...