என் இதயத்தில் நீ என்றும் அழியாத ஓவியம்.. காதலியின் பிணத்திற்கு தாலி கட்டிய இளைஞர்.. நிஜமானது சினிமா காட்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தில், ஒரு இளைஞன் தனது காதலியின் பிணத்திற்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட சம்பவம், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலி உயிருடன் இருக்கும்போது…

dead body

உத்தரப் பிரதேச மாநிலம் மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தில், ஒரு இளைஞன் தனது காதலியின் பிணத்திற்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட சம்பவம், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலி உயிருடன் இருக்கும்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், சோகமயமான சூழலில் நடந்த இந்த திருமணம், இதுவரை யாரும் கண்டிராத ஓர் உன்னதமான அன்பின் அடையாளமாக பதிவாகியுள்ளது. பல சினிமாக்களில் ஹீரோ, இறந்த ஹீரோயின் கழுத்தில் தாலி கட்டும் காட்சியை பார்த்துள்ள நிலையில் ஒரு உண்மையான சம்பவமாக நடந்துள்ளது.

நிச்லாவுல் பகுதியில் நடந்த இந்த மனதை உருக்கும் சம்பவத்தில், காதலியின் மறைவால் நிலைகுலைந்த அந்த இளைஞன், இறுதிச்சடங்குகளுக்கு முன்னதாகவே அவளை திருமணம் செய்ய வலியுறுத்தினார். வீட்டின் உரிமையாளரின் மகளான அப்பெண், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது உடல் இறுதிச் சடங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு வந்த காதலன், “நான் அவளை என் மணப்பெண்ணாக்குவேன் என்று அவளுக்கு வாக்குறுதி அளித்தேன், அதை நான் நிறைவேற்றுவேன்” என்று உருகி பேசியுள்ளார்.

துக்கக் குரல்கள் சூழ்ந்திருக்க, அர்ச்சகர் வரவழைக்கப்பட்டு, வேத மந்திரங்கள் ஓதப்பட்டன. நடுங்கும் கைகளால் அந்த இளைஞன், தன் காதலியின் நெற்றியில் சிந்துார் இட்டு அவளை தன் மனைவி ஆக்கிக்கொண்டான். வழக்கமான திருமண பாடல்களுக்கு பதிலாக, கூடியிருந்தவர்களின் கண்ணீர் மட்டுமே அங்கே ஒலித்தது. ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்த பெண்ணின் குடும்பத்தினர், இருவருக்கும் இடையே இருந்த ஆழமான காதலை புரிந்துகொண்டு, இளைஞனின் உணர்ச்சிகரமான வேண்டுகோளை ஏற்றுக்கொண்டனர்.

இது ஒரு கொண்டாட்டம் அல்ல, ஒரு வாக்குறுதி நிறைவேற்றப்பட்ட நிகழ்வு” என்று உள்ளூர்வாசி ஒருவர் குரல் தழுதழுக்கக் கூறினார். இப்படியொரு நிகழ்வை இதற்கு முன் பார்த்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இருவரும் ஒரு கடையில் பணிபுரிந்தபோது காதலித்ததாகவும், ஆரம்பத்தில் பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், பின்னர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. திருமணம் செய்வதற்கான திட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், இந்தப் பெண் திடீரென மரணமடைந்துள்ளார். இது தற்கொலை என்று காவல்துறை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், மரணத்திற்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

நிச்லாவுல் காவல் நிலைய அதிகாரி அகிலேஷ் வர்மா, இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இறுதியில், அந்த இளைஞன் தன் காதலியின் கணவனாக, அவளது இறுதி சடங்குகளை தொடங்கியபோது, அங்கிருந்த பலரும் கண்ணீர் சிந்தினர். நிறைவேறாத கனவுகளின் துயரத்தில், அவள் ஒரு சுமங்கலியாக சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார்.