உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்திருக்கிறது. தங்கள் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்தார்கள் என்பதற்காக, 1 வயது மற்றும் 5 வயதுடைய தனது இரண்டு பிஞ்சு குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 25 வயதுப் பெண் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட முஸ்கான் என்ற அந்த பெண், சம்பவத்தின்போது தனது குழந்தைகளான அர்ஹான் மற்றும் அனயாவுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவர், குழந்தைகளுக்கு தேநீர் மற்றும் பிஸ்கட்களில் விஷத்தை கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த கொடூர சம்பவம் நடந்தபோது, குழந்தைகளின் தந்தை வசீம் அகமது வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருந்தார்.
குழந்தைகள் மயக்கமடைந்ததும், முஸ்கான் பக்கத்து வீட்டார்களை அணுகி, அவர்கள் திடீரென “மயங்கி விழுந்துவிட்டனர்” என்று கூறியுள்ளார். ஆனால், அவரது முரண்பாடான பேச்சு அக்கம் பக்கத்தாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. உடனடியாக அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தைகள் அருகிலுள்ள சமூக சுகாதார மையத்திற்கு விரைந்து கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அங்கு மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் வர்மா தெரிவிக்கையில், குழந்தைகளின் உடலில் வெளிப்படையாக எந்த காயங்களும் இல்லை. பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது, அறிக்கைக்காக காத்திருக்கிறோம். மேலும் பகுப்பாய்விற்காக உடல் உறுப்புகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன,” என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் இறந்த குழந்தைகளின் தாயிடம் விசாரணை செய்தபோது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் தனது கணவரின் உறவினரான 25 வயது ஜுனைத் அகமதுடன் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். ஜுனைத்துடன் புதிய வாழ்க்கையை தொடங்குவதற்கு தனது குழந்தைகளை ஒரு தடையாகவே முஸ்கான் கருதியுள்ளார். மேலும் இருவரும் ஓடிவிட திட்டமிட்டிருந்தனர். இந்த திட்டத்திற்காக ஜுனைத்தான் உள்ளூர் மருந்து கடையில் இருந்து விஷத்தை வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்து கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 103 (கொலை) மற்றும் 123 (விஷத்தால் காயம் ஏற்படுத்துதல்) கீழ் முஸ்கான் மற்றும் ஜுனைத் இருவர் மீதும் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. முஸ்கான் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஜுனைத் தலைமறைவாக உள்ளார்.
காவல்துறை மேலும் தெரிவிக்கையில், முஸ்கானின் கணவர் வசீம் ரூர்கலி கிராமத்தை சேர்ந்தவர் என்றும், முஸ்கான் ஃபிரோசாபாத்தில் உள்ள கேரியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. வசீம் சண்டிகரில் வேலை காரணமாக அடிக்கடி வெளியூர் சென்றதுதான், முஸ்கானும் ஜுனைத்தும் நெருங்கி பழகி, அவர்களின் உறவு ஆழமடைய காரணமாக அமைந்தது என்று உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர்.