இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் வெறும் 90 ரூபாய்க்கு ஒரு வீட்டை வாங்கி 4.10 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யவுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இத்தாலி நாட்டில் உள்ள சிசிலி என்ற பகுதியில் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வீடுகளை அந்நாட்டு அரசு ஏலம் விட முடிவு செய்தது. ஒரு யூரோ ஒரு வீடு என்ற திட்டத்தின் கீழ் ஏலம் விடப்பட்ட இந்த வீட்டை அமெரிக்காவில் வாழும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் ஏலம் எடுத்தார்.
அதனை அடுத்து 750 சதுர அடி கொண்ட வீடு அவரது பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டது. அந்த வீட்டில் மின்சாரம் தண்ணீர் போன்ற எந்த வசதிகளும் இல்லாமல் இருந்தது. இருப்பினும் வெறும் 90 ரூபாய்க்கு அந்த வீட்டை வாங்கி அந்த பெண் சிறப்பாக திட்டமிட்டு புனரமைக்க முடிவு செய்தார். அந்த வீட்டில் அருகில் உள்ள வீட்டையும் அவர் ரூபாய் 27 லட்சத்திற்கு வாங்கி இரண்டையும் இணைத்து 3000 சதுர அடி வீடாக மாற்றி புனரமைத்தார். இதற்காக அவர் 2.35 கோடி செலவு செய்தார் என்பதும் இரண்டு ஆண்டுகள் காலம் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு வீடுகளும் ஒன்றாக சேர்த்து புனரமைக்கப்பட்ட பின் அந்த வீடு தற்போது நான்கு படுக்கை அறைகள், நான்கு குளியல் அறைகள், சமையலறை, டைனிங் அறை ஆகியவை கொண்ட ஒரு பெரிய பங்களாவாக மாறியது. இந்த நிலையில் தற்போது இந்த வீட்டின் மதிப்பு ரூபாய் 4.10 கோடியாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த வீட்டை தற்போது தான் விற்கப்போவதில்லை என்றும் இன்னும் கூடுதல் விலைக்கு கிடைத்தால் விற்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். வெறும் 90 ரூபாய்க்கு வீடு வாங்கி அதை புத்திசாலித்தனமாக புணரமைத்து தற்போது நான்கு கோடிக்கும் அதிகமாக உள்ள வீடாக மாற்றி உள்ள அந்த பெண்ணிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.