நேற்று அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து, சமீபகால வரலாற்றில் மிகப்ப பெரிய காப்பீட்டு இழப்பீடுகளை கோரும் சம்பவமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, 2009-ல் மாண்ட்ரீல் மாநாட்டில் கையெழுத்திட்டதன் விளைவாக, விமான விபத்துகளுக்கான காப்பீட்டு விதிகள் மிகவும் தெளிவாக உள்ளன. இந்த AI 171 விபத்தினால் ₹1,500 கோடிக்கும் அதிகமான காப்பீட்டு இழப்பீடு ஏற்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் 240க்கும் மேற்பட்ட விமான பயணிகளும் பணியாளர்களும் உயிரிழந்ததுடன், விமானமும் முழுமையாக சேதமடைந்தது. இதனால், காப்பீட்டு இழப்பீட்டு பொறுப்பு உள்நாட்டு மற்றும் சர்வதேச காப்பீட்டுச் சந்தைகளை சார்ந்துள்ளது. இதில், விமானம் மோதிய அருகிலுள்ள மருத்துவ விடுதிக்கு ஏற்பட்ட சேதமும் அடங்கும்.
முழுமையாக சேதமடைந்த போயிங் 787-8 ரக விமானம், அதன் வயது அடிப்படையில் சுமார் ₹650–700 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மாண்ட்ரீல் மாநாட்டின்படி, உயிரிழந்த ஒவ்வொரு பயணியின் குடும்பத்திற்கும் சுமார் ₹1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 240க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் என்பதால், இது ₹240 கோடிக்கு மேல் இழப்பீடாக இருக்கலாம்.
மொத்த இழப்பீட்டுத் தொகை இறுதித் தீர்வுகள் மற்றும் சட்ட கோரிக்கைகளை பொறுத்து ₹1,000 முதல் ₹1,500 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஏர் இந்தியாவின் முழு விமான படைக்கான காப்பீட்டுத் தொகை ₹8,000–10,000 கோடி ஆகும், இதற்கான ஆண்டு பிரீமியம் சுமார் ₹250 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த விபத்து, உலகளாவிய விமான காப்பீட்டுச் சந்தையில், குறிப்பாக இந்தியாவில் பெரிய ரக விமானங்களை இயக்கும் நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும், மேலும் காப்பீட்டு பிரீமியங்கள் உயரவும் வாய்ப்புள்ளது. இந்த காப்பீட்டுக் கோரிக்கைகள் விரைவாக செயலாக்கப்படும் என்று அரசு எதிர்பார்க்கிறது.