அம்மாவுக்கு டீ கொடுக்க வந்தான், இப்போது வெறும் எலும்பு கூடு தான் மிஞ்சியுள்ளது. விமான விபத்தால் இறந்த மகன்.. துயரத்தில் தந்தை..

  அகமதாபாத் அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை பிரிவுக்கு வெளியே, இன்று நடமாடக்கூட இடமில்லை. குஜராத்தின் பாடன், பனஸ்கந்தா பகுதிகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் வந்த நூற்றுக்கணக்கான உறவினர்கள், தங்கள் அன்புக்குரியவர்களின் உடல்களை பெற்றுக்கொண்டு வீடு…

boy

 

அகமதாபாத் அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை பிரிவுக்கு வெளியே, இன்று நடமாடக்கூட இடமில்லை. குஜராத்தின் பாடன், பனஸ்கந்தா பகுதிகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் வந்த நூற்றுக்கணக்கான உறவினர்கள், தங்கள் அன்புக்குரியவர்களின் உடல்களை பெற்றுக்கொண்டு வீடு திரும்புவதற்காக, சோகத்துடன் காத்திருக்கிறார்கள்.

நேற்று லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இதில் 241 பயணிகள் பரிதாபமாக உயிரிழக்க, ஒருவர் மட்டும் அதிசயமாக உயிர்தப்பினார். இந்த விபத்தில் பலியான 250க்கும் மேற்பட்டோரின் உடல்கள், இந்த மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகள், பிரேத பரிசோதனை பணிகளை விரைந்து முடித்து, குடும்பங்களின் துயரத்தை குறைக்க 80 மருத்துவர்களை நியமித்துள்ளனர். ஆனால், இதுவரை வெறும் ஐந்து குடும்பங்களுக்கு மட்டுமே DNA மாதிரிகள் ஒத்துப்போய், உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மற்ற அனைவருக்கும் காத்திருப்புதான் மிஞ்சுகிறது.

அப்படி ஒரு துயரத்தில் ஆழ்ந்திருக்கிறது பட்னி குடும்பம். சுரேஷ் பாய் பட்னியால் கண்ணீரை அடக்க முடியவில்லை. இந்த விபத்தில் தனது 15 வயது மகன் ஆகாஷை இழந்த அவர், அவரது மனைவி 50 சதவீதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

“என் மகன் ஆகாஷின் உடல் எலும்பு கூடாக உள்ளது,. சில எலும்புகள் மட்டுமே எஞ்சியுள்ளன. அதை கூட நான் எப்போது பெறுவேன் என்று தெரியவில்லை,” என்று கதறுகிறார் பட்னி.

எட்டாம் வகுப்பு மாணவனான ஆகாஷ், மதிய உணவு கொடுக்க தன் அம்மாவின் தேநீர் கடைக்கு வந்திருக்கிறான். மருத்துவ கல்லூரிக்கு வெளியே உள்ள அவர்களின் தேநீர் கடையில் ஓய்வெடுத்து கொண்டிருந்தபோதுதான், விபத்துக்குள்ளான விமானத்தின் ஒரு பகுதி சில மீட்டர்கள் தொலைவில் வந்து விழுந்துள்ளது. ஆகாஷ் சுதாரிப்பதற்குள் தீப்பிழம்பு அவனை சூழ்ந்துள்ளது. மகனை காப்பாற்ற முயன்ற தாய் சீதா பென், கை கால்களில் தீக்காயமடைந்துள்ளார்.

“ஆகாஷ் பற்றி நான் அவளிடம் எப்படிச் சொல்வேன்? அவள் மருத்துவமனை படுக்கையிலேயே இறந்துவிடுவாள். மருத்துவர்கள் அவளை காப்பாற்ற முடியும் என்று எனக்கு நம்பிக்கை தருகிறார்கள்,” என்று பட்னி பேட்டியில் வேதனையுடன் கூறினார்.

இன்னொரு பக்கம் பிரகலாத் பாய் சோர்வுடன் நேற்று இரவு முதல் தன் மனைவி சர்லா மற்றும் மகள் ஆத்யாவை தேடி, மருத்துவமனை மருத்துவமனையாக அலைந்து கொண்டிருக்கிறார்.

“சர்லா எனக்கு தினமும் ரொட்டி செய்து கொடுப்பார். எனது மகள் ஆத்யா அவருடன் வந்திருந்தாள். விமானம் மெஸ்ஸில் மோதியதிலிருந்து எனக்கு அவர்களை பற்றிய எந்த தகவலும் இல்லை,” என்று அவர் கூறுகிறார். “நான் இப்போது எனது இரத்த மாதிரியை இங்கு கொடுத்துள்ளேன். யாருடன் பொருந்துவார்கள் என்று எனக்கு தெரியவில்லை,” என்று விரக்தியுடன் பிரகலாத் கூறினார் . இந்த விபத்து ஏற்படுத்திய இழப்பின் வலி, மருத்துவமனை வளாகம் முழுவதும் எதிரொலிக்கிறது.