வீட்டில் ஒரு மழலைப்பட்டாளம்.. மனைவியின் ஆசை 20 குழந்தைகள்.. கணவரோ 3 போதும் என்றார்.. கடைசியில் நடந்தது என்ன?

  இன்றைய நவீன உலகில் ஒரே ஒரு குழந்தையை பெற்று அதனை சீராக வளர்ப்பது என்பதே ஒரு பெரிய சவால்தான். குழந்தை வளர்ப்பின் பெரும்பான்மையான சுமை இன்னும் பெண்களின் மீதுதான் விழுகிறது. ஆனாலும் வெகு…

babies

 

இன்றைய நவீன உலகில் ஒரே ஒரு குழந்தையை பெற்று அதனை சீராக வளர்ப்பது என்பதே ஒரு பெரிய சவால்தான். குழந்தை வளர்ப்பின் பெரும்பான்மையான சுமை இன்னும் பெண்களின் மீதுதான் விழுகிறது. ஆனாலும் வெகு அரிதாக ஒருசிலர் பெரிய குடும்பம் வேண்டும் என்று இன்னும் ஆசைப்படுகிறார்கள். திருமணத்திற்கு முன்பே, எத்தனை குழந்தைகள் வேண்டும் என்று கணவன் மனைவி இருவரும் திட்டமிடுகிறார்கள். அதில் ஒவ்வொரு தம்பதிக்கும் ஒவ்வொரு விருப்பம் இருக்கும்.

அமண்டாவின் கதை அப்படித்தான் தொடங்கியது. அவருக்கு 20 குழந்தைகள் வேண்டும் என ஆசை. ஆனால் அவரது கணவரோ மூன்று குழந்தைகள் போதும் என்றார். கடைசியில், இருவரும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். ஆச்சரியப்படும் விதமாக, அவர்களுக்கு 12 குழந்தைகள் பிறந்தன! இப்போது அவர்கள் இந்த முடிவால் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

அமண்டா எதிர்பார்த்த அளவுக்கு பெரிய குடும்பமும் இல்லை, அவரது கணவர் நினைத்த அளவுக்கு சிறிய குடும்பமும் இல்லை. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவர்களுக்கு பிறந்த 12 குழந்தைகளில் நான்கு முறை இரட்டை குழந்தைகள் பிறந்து இருக்கிறார்கள். மூன்றாவது முறை இரட்டைக் குழந்தைகள் பிறந்தபோது, ஒரு குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. அடுத்த முறை இரட்டை குழந்தைகள் ஆரோக்கியமாக பிறந்தபோதுதான் அந்தத் தம்பதிக்கு நிம்மதி கிடைத்தது.

டிக்டாக்கில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், அமண்டா தனது குடும்ப கதையை பகிர்ந்து கொண்டார். இதில் கவனிக்க வேண்டியது, அவருக்கும், அவரது கணவருக்கும் இடையே இருந்த ஒரு நல்ல புரிதல் தான்.

இவ்வளவு பெரிய குடும்பத்தை நடத்துவதற்கு நிறைய செலவாகும். ஆனால், அதை நிர்வகிக்கப் பல வழிகளில் செயல்படுவதாக அமண்டா கூறுகிறார். கணவர் மட்டுமல்லாமல், குழந்தைகளின் தாத்தாவும் பணம் கொடுத்து உதவுகிறார். அமண்டாவின் அப்பாவும் தன் வீட்டின் அடித்தளத்தில் ஒரு அலுவலகத்தை வாடகைக்கு விட்டு அந்த வாடகை பணத்தை நீயே வைத்து கொள் என கூறிவிட்டாராம்.

அமண்டாவின் கூற்றுப்படி, குடும்பத்தின் செலவுகளும், கல்விச் செலவுகளும் சமாளிக்கக்கூடியதாகவே இருக்கின்றன. மாதந்தோறும் மளிகைப் பொருட்களுக்கு சுமார் இந்திய மதிப்பில் 2.32 லட்சம் ரூபாய் செலவாகிறது. 12 குழந்தைகளும் 10 வயதுக்குட்பட்டவர்கள், வீட்டில் இருந்தே படிக்கிறார்கள். பெரிய குழந்தைகள் சின்ன குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுப்பதால் கல்வி செலவு மிச்சம்.

இந்த குடும்பத்திற்கு 15 பேர் பயணிக்கக்கூடிய ஒரு வேன் இருக்கிறது. இதனால் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சௌகரியமாக பயணம் செய்ய முடிகிறது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்தும் சில நிதியுதவியும் அவ்வப்போது கிடைக்கிறது.

ஆனால் அதே நேரத்தில் அமண்டா சமூக வலைத்தளங்களின் விமர்சனங்களில் இருந்து தப்பவில்லை. டிக்டாக்கில், அமண்டா தங்கள் வாழ்க்கையின் சில பகுதிகளை பகிரும்போது, பயனர்கள் பல வித்தியாசமான கேள்விகளை கேட்கிறார்கள். ஒருவர், “இனி சீக்கிரமே ஒரு பள்ளி பஸ் வாங்க வேண்டியிருக்கும்!” என்று கேலி செய்தார். குடும்பத்தை உருவாக்க சொன்னா, ஒரு கிராமத்தை உருவாக்கி வச்சிருக்காங்க என இன்னொருவர் கேலி செய்தார். உங்க வீட்டில் எத்தனை டிவி இருக்கிறது?” என்று ஒருவர் கேள்வி கேட்டார்.

ஆனால் அதே நேரத்தில், பலர் இவ்வளவு பெரிய குடும்பத்தை அவர்கள் நிர்வகிக்கும் விதத்தை பாராட்டி, ஆதரவு தெரிவித்துள்ளனர்.