தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்ற தேர்தல் என்பது ஒரு திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஐடி ஊழியர்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகள் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்திற்கு அதிகளவில் கிடைத்துள்ளதாக எக்சிட் போல் முடிவுகள் மற்றும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலால் அதிர்ச்சியடைந்துள்ள திமுக தரப்பு, ஐடி ஊழியர்களை நோக்கி “நீங்கள் எல்லாம் சாப்பாட்டில் உப்பு போட்டு சாப்பிடுகிறீர்கள் என்றால் அதற்கு கலைஞர் தான் காரணம்” என்ற ரீதியில் பேசி வருவது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதாக துக்ளக் ரமேஷ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:
ஒரு தனிமனிதன் தன் உழைப்பால் படித்து வேலைக்கு சென்றதை, ஏதோ ஒரு கட்சியின் கொடையாக சித்தரிப்பது நகைப்புக்குரியது மட்டுமல்ல, உழைக்கும் வர்க்கத்தை அவமதிக்கும் செயலாகவும் பார்க்கப்படுகிறது. ஐடி துறையின் வளர்ச்சியை பொறுத்தவரை, சென்னையை விட பெங்களூரு இன்று உலகளவில் மிகப்பெரிய ஐடி மையமாக திகழ்கிறது. கர்நாடகாவின் இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கும் கலைஞர்தான் காரணமா என்ற தர்க்கரீதியான கேள்வி இங்கே எழுகிறது.
அதேபோல், ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயடு அவர்கள் ஆட்சிக்காலத்தில் ஹைதராபாத் நகரில் ‘சைபராபாத்’ என்ற திட்டத்தின் மூலம் மிகப்பெரிய ஐடி முதலீடுகளை கொண்டு வந்தார். இந்தியாவின் பிற மாநிலங்களில் ஐடி துறை வளர்ந்ததற்கு அங்கிருந்த தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்கள் காரணம் என்றால், தமிழகத்தில் மட்டும் அது ஒரு தனிநபரின் சாதனையாக முன்னிறுத்தப்படுவது அரசியல் ‘உருட்டு’ என்றே விமர்சிக்கப்படுகிறது.
திமுகவினர் நீண்டகாலமாகவே “நீங்கள் இன்று படித்திருப்பதற்கு பெரியாரும், அண்ணாவும் தான் காரணம்” என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். சமூக நீதியில் அவர்களின் பங்களிப்பு இருந்தாலும், ஒரு மாணவனின் கல்வி என்பது அவனது குடும்பத்தின் அர்ப்பணிப்பு மற்றும் தனிப்பட்ட முயற்சியால் கிடைப்பதாகும். தற்போது அதே பாணியில் ஐடி வேலைவாய்ப்பையும் கட்சி கணக்கில் சேர்ப்பது, இன்றைய விழிப்புணர்வு கொண்ட இளைஞர்களிடம் எடுபடாது என்பதை அவர்கள் உணரவில்லை.
இத்தகைய பழைய காலத்து அரசியல் தர்க்கங்கள், தற்கால தொழில்நுட்ப யுகத்தில் வாழும் இளைஞர்களுக்கு சிரிப்பையே வரவழைக்கின்றன. தவெக தலைவர் விஜய், இந்த தேர்தலை ‘திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையிலான நேரடிப் போட்டி’ என்று அறிவித்து, இளைஞர்களுக்கான பிரத்யேக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். குறிப்பாக மாணவர்களுக்கு வட்டியில்லாக் கடன் மற்றும் வேலைவாய்ப்பு உத்தரவாதம் போன்ற திட்டங்கள் இளைஞர்களை அவர் பக்கம் ஈர்த்துள்ளன. இதனால் திமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியான இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவு சரிந்துள்ளதோ என்ற அச்சம் ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த அரசியல் நெருக்கடியின் விளைவாகவே, திமுக தலைவர்கள் அநாகரிகமான முறையில் வாக்காளர்களை விமர்சித்து வருவதாக தெரிகிறது. முடிவாக, ஒரு ஜனநாயக நாட்டில் வாக்காளர்கள் தங்கள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்க உரிமை உண்டு. ஐடி ஊழியர்கள் விஜய்க்கு வாக்களித்தார்கள் என்பதற்காக அவர்கள் உண்ணும் உணவை கூட அரசியலாக்குவது ஒரு முதிர்ந்த அரசியலுக்கு அழகல்ல.
வாரிசு அரசியல் மற்றும் ஊழலுக்கு எதிராக தவெக முன்வைக்கும் ‘உத்தரவாதம்’ இளைஞர்களிடையே ஒரு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது. இத்தகைய அபத்தமான பேச்சுகள் திமுகவுக்கு ஆதரவை தேடித்தருவதற்கு பதிலாக, நடுநிலை வாக்காளர்களை மேலும் அக்கட்சியிடமிருந்து விலகவே செய்யும் என்பதே நிதர்சனம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
