AI என்ற செயற்கை நுண்ணறிவு துறையின் தந்தை என்று அழைக்கப்படும், கூகுளின் முன்னாள் ஆராய்ச்சியாளர் ஜெஃப்ரி ஹின்டன், AI எப்படி மனிதர்களின் வேலைகளை பறிக்கும் என்பது பற்றி தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவர் என்ன சொல்கிறார் என்றால், “சீக்கிரமே AI பல வேலைகளில் மனிதர்களைவிட சிறப்பாகச் செயல்படும். இதனால் நிறைய பேருக்கு வேலை போயிடும்” என்று எச்சரித்துள்ளார்.
ஆனால், சில வேலைகள் பாதுகாப்பானவை என்றும், பிளம்பிங் ஒரு நல்ல தேர்வு என்றும் ஹின்டன் குறிப்பிட்டுள்ளார். பிளம்பிங் மட்டுமல்ல மர ஆசாரி உள்பட உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளை செய்ய இயந்திரங்களுக்கு இப்போதைக்கு முடியாது என்று அவர் நம்புகிறார். மேலும் நிதி ஆலோசகர்கள், இசைக் கலைஞர்கள், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள், சமூகப் பணியாளர்கள், போன்ற பணிகளும் AI செய்ய முடியாத வேலைகளாக கருதப்படுகிறது.
மேலும் “இயந்திரங்கள் உடல்ரீதியான வேலைகளை நம்மள மாதிரி செய்யறதுக்கு ரொம்ப காலம் ஆகும். அதனால, ஒரு பிளம்பர் போன்ற வேலைகளில் இருப்பது பாதுகாப்பானது. கடந்த காலத்துல, புது டெக்னாலஜி வந்தப்ப வேலை இல்லாமை வரல. புது வேலைகள் உருவானுச்சு. உதாரணத்துக்கு ஏ.டி.எம். வந்தப்ப, நிறைய வங்கி ஊழியர்கள் வேலை இழக்கல, அவங்க இன்னும் சுவாரஸ்யமான வேலைகளைச் செய்ய ஆரம்பிச்சாங்க.”
“ஆனா, இப்போ நிலைமை வேற. இது தொழில் புரட்சி காலத்துல இயந்திரங்கள் வந்த மாதிரி. அப்படித்தான் இப்போ நீங்க பள்ளம் தோண்டும் வேலையை செய்ய முடியாது. ஏன்னா, இயந்திரம் உங்களை விட நல்லா பள்ளம் தோண்டும். சாதாரண அறிவார்ந்த வேலைகளுக்கு, AI எல்லாரையும் மாத்திடும்னு நினைக்கிறேன். நான் ஒரு கால் சென்டர்ல வேலை பார்த்தா, எனக்கு பயமா இருக்கும். இது ஏற்கனவே நடக்க ஆரம்பிச்சிடுச்சுனு நினைக்கிறேன்,” என்று ஜெஃப்ரி ஹின்டன் விளக்கினார்.
AI பிதாமகர் மேலும் கூறுகையில், சமீபத்தில் படித்த பல பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பது கடினமாக இருப்பதாக ஒரு கட்டுரையை பார்த்தேன். பிரபல நிறுவனங்கள் வழக்கமாக பட்டதாரிகள் செய்யும் வேலைகளுக்கு AI-ஐ பயன்படுத்த தொடங்கியதே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று அவர் விளக்கினார். இந்த புதிய தொழில்நுட்பம் முந்தையவற்றிலிருந்து மிகவும் வித்தியாசமானது என்றும் அவர் கூறினார். எதிர்காலத்தில், மிகவும் சிறப்பான அல்லது மேம்பட்ட திறன்கள் உள்ளவர்கள் மட்டுமே AI-ஆல் வேலை இழக்காமல் தப்பிக்க முடியும் என்றும் ஹின்டன் தெரிவித்தார்.
சிக்னல்ஃபயர் (SignalFire) வெளியிட்ட சமீபத்திய அறிக்கை ஒன்று, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், புதிய பட்டதாரிகளை குறைவாகவே பணியமர்த்துவதாக கூறுகிறது. AI-ன் பயன்பாடு அதிகரிப்பதே இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். மெட்டா மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களில், புதிய பட்டதாரி பணியமர்த்தல்களின் எண்ணிக்கை 2023 முதல் 2024 வரை 25% குறைந்ததாகவும், 2024-ல் அவர்களது புதிய பணியமர்த்தல்களில் வெறும் 7% மட்டுமே புதிய பட்டதாரிகள் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.