’நீ சொன்னா நாங்க பயந்துருவோமா? ஈரான் சரணடைவதை தவிர வேறு வழியில்லை.. அடுத்த 2 நாட்கள் மிக மோசமானதாக இருக்கும்: டிரம்ப் எச்சரிக்கை

  ஈரான் மீது தாக்குதல் தொடுத்து, அங்கிருக்கும் 10-க்கும் மேற்பட்ட அணுசக்தி மையங்களை அழிக்க இஸ்ரேல் தயாராக இருப்பதாக அதிர்ச்சி தரும் செய்திகள் வந்துள்ளது. இந்த தாக்குதல்கள் மிகப்பெரிய கதிர்வீச்சு கசிவை ஏற்படுத்திவிடுமோ என்ற…

trump

 

ஈரான் மீது தாக்குதல் தொடுத்து, அங்கிருக்கும் 10-க்கும் மேற்பட்ட அணுசக்தி மையங்களை அழிக்க இஸ்ரேல் தயாராக இருப்பதாக அதிர்ச்சி தரும் செய்திகள் வந்துள்ளது. இந்த தாக்குதல்கள் மிகப்பெரிய கதிர்வீச்சு கசிவை ஏற்படுத்திவிடுமோ என்ற பயம் உலகம் முழுவதும் பரவியுள்ளது.

உலக சுகாதார அமைப்பு தெஹ்ரானின் அணுசக்தி தளங்களுக்கு அருகிலுள்ள இந்த தாக்குதல்கள், ஈரான் மட்டுமல்லாமல், பிராந்தியம் முழுவதும் சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் ஆரோக்கியத்தைச் பாதிக்கும் என்று கவலை தெரிவித்துள்ளது. WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தனது X பக்கத்தில், “வன்முறை அதிகரித்து உயிரிழப்புகள் கூடுவதும் மிகவும் கவலை அளிக்கிறது. குறிப்பாக, அணுசக்தி நிலையங்களுக்கு அருகிலுள்ள தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் என்னை மிகவும் பாதிக்கிறது” என்று கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ‘ஈரானின் முக்கிய அணுசக்தி மையமான நடான்ஸ் நிலையத்தில் ஏற்பட்ட சேதத்தால், கதிர்வீச்சு மற்றும் இரசாயனக்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், இன்று தனது நாட்டு விமானப்படை தெஹ்ரானில் உள்ள முக்கியமான உள்கட்டமைப்பு இலக்குகளை தாக்கும் என்று எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘ஈரான் முழுமையாக சரணடைய வேண்டும்” என்றும், ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றிலும் முடிவுக்கு வர வேண்டும்” என்றும் கூறியிருந்தார். இது வெறும் போர் நிறுத்த ஒப்பந்தத்தால் முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கனடாவில் நடந்த G7 உச்சி மாநாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு திரும்பிய டிரம்ப் செய்தியாளர்களிடம், “நான் வெறும் போர் நிறுத்தம் தேடவில்லை, அதைவிட சிறந்த ஒன்றைத்தான் தேடுகிறோம். ஒரு நிரந்தரமான முடிவு வேண்டும், போர் நிறுத்தம் மட்டும் போதாது” என்றார்.

நேற்றிரவு, இஸ்ரேல்-ஈரான் மோதலில் பதற்றத்தைத் தணிக்கக் கோரி G7 தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் கையெழுத்திட டிரம்ப் மறுத்துவிட்டார். முக்கிய காரணங்களுக்காக தான் சீக்கிரம் வாஷிங்டன் திரும்ப வேண்டும் என்று கூறி உச்சி மாநாட்டிலிருந்து அவர் வெளியேறினார்.

விமானத்திலிருந்து பேசிய டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்காக தான் திரும்புவதாக கூறியதை ஆவேசமாக மறுத்தார். மக்ரோனை “பப்ளிசிட்டி தேடுபவர்” என்றும், “நல்லவர்” ஆனால் “பெரும்பாலும் சரியாக செய்யாதவர்” என்றும் டிரம்ப் வர்ணித்தார்.

இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்த எண்ணம் இல்லை என்றும் ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் அடுத்த இரண்டு நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்றும் டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அமெரிக்கப் படைகளை தெஹ்ரான் தாக்கினால், அமெரிக்கா இஸ்ரேலின் போரில் இணைந்து தெஹ்ரான் மீது கடுமையாக தாக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

ஆனால் டிரம்ப் சொன்னா நாங்க பயந்துருவோமா? என்ற பாணியில் தான் இஸ்ரேல் ஈரானுக்கு பதிலடி கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.