கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் டக்குமுக்கு டிக்கு தாளம்.. தவறான பதில் கூறிவிட்டு அதை சமாளிக்க அடுத்தடுத்து பொய் பேசும் AI சாட்போட்..

  பயனர்களுக்கு உதவும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட மெட்டாவின் வாட்ஸ்அப் AI பாட், அவர்களின் நம்பிக்கையை எப்படி இழந்தது என்பது ஒரு பரபரப்பான கேள்வியாக மாறியுள்ளது. பாரி ஸ்மெத்ஹர்ஸ்ட், இங்கிலாந்தின் ஒரு ரயில்வே நிறுவனத்தின் வாடிக்கையாளர்…

ai

 

பயனர்களுக்கு உதவும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட மெட்டாவின் வாட்ஸ்அப் AI பாட், அவர்களின் நம்பிக்கையை எப்படி இழந்தது என்பது ஒரு பரபரப்பான கேள்வியாக மாறியுள்ளது.

பாரி ஸ்மெத்ஹர்ஸ்ட், இங்கிலாந்தின் ஒரு ரயில்வே நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை எண்ணை வாட்ஸ்அப் AI பாட்டிடம் கேட்டபோது, அவருக்குக் கிடைத்தது 200 கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் ஒரு அறிமுகமற்றவரின் தொலைபேசி எண். இதைவிட அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், தவறு குறித்து பாட்டிடம் கேட்டபோது, அது பொய் சொல்ல ஆரம்பித்தது; அதுமட்டுமல்ல, தொடர்ந்து பொய்களைக் கூறியது.

வாட்ஸ்அப்பில் உள்ள மெட்டாவின் AI உதவியாளர், விரைவான பதில்களையும், அவசர தொடர்பு எண்களையும் வழங்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படும்போது, அப்பாவியான தனிநபர்களின் ரகசிய தொலைபேசி எண்களை பகிர்ந்துகொண்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த தவறு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, சாட்பாட் தந்திரமாக நழுவியதும், தவறான தகவல்களை வழங்கியதும், இறுதியாக தன்னையே முரண்படுத்தி கொண்டதும், தனியுரிமை, பொறுப்புக்கூறல் மற்றும் பொது பயன்பாட்டுக்கான AI கருவிகளின் நம்பகத்தன்மை குறித்து பெரும் கவலைகளை எழுப்பியுள்ளது.

பாரி ஸ்மெத்ஹர்ஸ்ட் பயணம் செய்யும் ரயில் வரவில்லை. அதனால், அவர் ‘டிரான்ஸ்பெனினை எக்ஸ்பிரஸ்’ நிறுவனத்தை தொடர்புகொள்ள விரும்பினார். எளிமையான ஒரு உதவி எண் கிடைக்கும் என்று எதிர்பார்த்து, வாட்ஸ்அப் AI பாட்டை அணுகினார். ஆனால், பாட் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் ஜேம்ஸ் கிரே என்ற சொத்து நிர்வாகியின் தனிப்பட்ட தொலைபேசி எண்ணை கொடுத்தது. இவருக்கும் ரயில்வே நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஸ்மெத்ஹர்ஸ்ட், அந்த எண்ணை பார்த்ததும் முதலில் தான் மிகவும் குழப்பமடைந்ததாகவும், அந்த எண் சம்பந்தமில்லாததாக இருந்தபோதிலும், பாட் அதை நம்பிக்கையுடன் கொடுத்தது. அவர் மீண்டும் கேள்வி கேட்டபோது, பாட்டின் பதில்கள் நழுவி கொண்டிருப்பதிலிருந்து முரண்படுவதாக மாறின. முதலில், அது “அது பகிரப்பட்டிருக்கக் கூடாது” என்று ஒப்புக்கொண்டது. பின்னர் “சரியான தகவலைக் கண்டறிவதில் கவனம் செலுத்துவோம்…” என்று திசைதிருப்பியது. பிறகு, அந்த எண் “கற்பனையானது” என்றும் “யாருடனும் தொடர்புடையது அல்ல” என்றும் கூறியது.
இறுதியாக, அந்த எண் “உருவாக்கப்பட்டது” என்றும் “தரவுத்தளத்திலிருந்து எடுக்கப்படவில்லை” என்றும் கூறி மீண்டும் தனது நிலையை மாற்ற முயற்சித்தது.

AI பாட்டின் இந்தத் துரிதமான பின்வாங்கல் மற்றும் வெளிப்படையான பொய்களே ஸ்மெத்ஹர்ஸ்டை அதிகம் கவலை கொள்ள செய்தன. “அவர்கள் அந்த எண்ணை உருவாக்கியிருந்தால், அது ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால், அது அணுகக்கூடிய சில தரவுத்தளத்திலிருந்து தவறான எண்ணை எடுத்ததுதான் மிகவும் கவலை அளிக்கிறது,” என்றார் அவர்.

மேலோட்டமாகப் பார்த்தால், இது ஒரு தொழில்நுட்ப கோளாறாக தோன்றலாம். ஆனால், இந்த சம்பவம், போதிய பாதுகாப்பு இல்லாமல் பொதுமக்களிடம் வெளியிடப்படும் ஜெனரேடிவ் AI கருவிகளை சுற்றியுள்ள ஆழமான மற்றும் முறையான அபாயங்களை வெளிப்படுத்துகிறது.

தவறை ஒப்புக்கொண்டு நிறுத்துவதற்கு பதிலாக, பாட் அதை மறைக்க முயன்றது. இதன் மூலம் விளக்கங்களை உருவாக்கும்போது அவற்றின் வரம்புகளை வெளிப்படுத்தின. இதை ‘AI மாயத்தோற்றம் என்று குறிப்பிடுவதுண்டு. ஸ்மெத்ஹர்ஸ்டின் அனுபவம் ஒரு தொழில்நுட்ப கோளாறு மட்டுமல்ல; AI அமைப்புகள் நிச்சயமற்ற நிலையில் இருக்கும்போது எவ்வாறு ஏமாற்றும் விதமாக செயல்பட முடியும் என்பதற்கான ஓர் உதாரணம் இது.

இதுகுறித்து ஒரு மெட்டா செய்தித் தொடர்பாளர் கூறியபோது, வாட்ஸ்அப் AI உதவியாளர் “சில சமயங்களில் தவறான தகவல்களை வழங்கலாம்” என்றும், தங்கள் குழு “அதை மேம்படுத்தி வருகிறது” என்றும் ஒப்புக்கொண்டார். தவறாக பகிரப்பட்ட எண், சரியான உதவி எண்ணுடன் ஒரு குறிப்பிட்ட ஒற்றுமையை கொண்டிருந்தது என்றும், இது ஒரு தற்செயலான பொருத்தம், வேண்டுமென்றே செய்யப்பட்ட மீறல் அல்ல என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இது எண்ணின் தோற்றத்தை விளக்கினாலும், AI ஏன் பயனரை தவறாக வழிநடத்த முயன்றது அல்லது இது மீண்டும் நிகழாமல் தடுக்க மெட்டா என்ன செய்யப் போகிறது என்பதை விளக்கவில்லை.

இந்த நிலையில் வாட்ஸ் அப் AIயால் யாருடைய எண் பகிரப்பட்டதோ அந்த சொத்து நிர்வாகி ஜேம்ஸ் கிரே, இந்த சம்பவத்தால் தனக்கு ஒரே ஒரு அழைப்பு மட்டுமே வந்ததாக உறுதிப்படுத்தினார். ஆனால், பாட் அடுத்து எத்தனை முறை தன்னுடைய எண்ணை பயன்படுத்தும் என்பது குறித்து அவர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார்.

“என் எண்ணை இப்படி பெற முடிந்தால், அடுத்த முறை வங்கி விவரங்களையோ அல்லது கடவுச்சொற்களையோ வெளிப்படுத்துவதை தடுப்பது எது?” என்று கிரே கேள்வி எழுப்பினார்.

பயனர்கள் இதிலிருந்து என்ன கற்றுக்கொள்ள வேண்டும்?

AI கருவியிலிருந்து வரும் தொடர்பு தகவலை மீண்டும் ஒருமுறை சரிபார்க்கவும்.

AI சாட்பாட்கள் தரவை எப்படி செயலாக்குகின்றன, சேமிக்கின்றன என்பதை புரிந்துகொள்ளாதவரை, முக்கியமான கேள்விகளை அவற்றுடன் பகிர்வதை தவிர்க்கவும்.