இளைஞர்கள், பெண்கள், முதல் முறை வாக்காளர்கள் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் பெரும்பாலும் நடிகர் விஜய்க்கு செல்லும் என்றும், அதனால்தான் விஜய் கூட்டணி பற்றி எந்த கவலையும் இல்லாமல் இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக, திமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகள் எப்போதும் உண்டு. குறிப்பாக, ‘இரட்டை இலை’ சின்னத்திற்காகவே அதிமுகவுக்கு இன்றும் வாக்குகள் விழுந்து கொண்டிருக்கின்றன. அதேபோல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சிறுபான்மையினரின் வாக்குகள் மொத்தமாக திமுகவுக்குத்தான் உள்ளன. ஆனால், விஜய் வந்த பிறகு இந்த கணக்கு மாறிவிட்டது.
திமுகவின் கோட்டையாக கருதப்படும் வாக்குகளில்தான் விஜய் முக்கியமாகக் கை வைக்கிறார். குறிப்பாக, சிறுபான்மையினரில் 50% பேர் இந்த முறை விஜய்க்கு வாக்களிப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல், மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உட்பட சில சலுகைகள் செய்து கொடுத்தாலும், திமுகவின் மற்ற செயல்பாடுகளில் பெண்கள் அதிருப்தி அடைந்துள்ளதால், பெண்கள் வாக்குகள் பாதிக்கு மேல் விஜய்க்குத்தான் செல்ல இருக்கின்றன. முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் வாக்குகள் ஒட்டுமொத்தமாக விஜய்க்குத்தான் செல்லும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. இதுவரை முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் சீமானுக்கு வாக்களித்து வந்த நிலையில், சீமானின் வாக்குகள் பெரும் அளவில் சரியும் என்று கூறப்பட்டு வருகிறது.
மொத்தத்தில், விஜய் இந்த தேர்தலில் 15% வாக்குகள் வாங்கிவிட்டாலே அது மிகப்பெரிய வெற்றி என்றும், அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளையுமே, இரண்டு கூட்டணிகளையுமே பெரும்பான்மை அடைய விடாமல் விஜய் செய்துவிடுவார் என்றும், அதுதான் இந்த தேர்தலில் விஜய் செய்ய இருக்கும் சாதனையாகவும் கூறப்படுகிறது. விஜய்யை பொறுத்தவரை, இந்த முறை கூட்டணி இல்லாமல் தனித்துத்தான் போட்டியிடுவார் என்றும், தன்னால் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க முடியாது என்று அவருக்கு நன்றாக தெரியும் என்றும் சில அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இருந்தாலும், திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் பெரும்பான்மை பெறாமல் செய்ய முடியும் என்று அவர் அழுத்தமாக நம்புவதாகவும், தேர்தலுக்கு பின்னர் ஏதாவது ஒரு கூட்டணி நம்மை நம்பித்தான் ஆட்சி அமைக்க வேண்டிய நிலை வரும் என்றும், அப்போது நமது பேரத்தை தொடங்கலாம் என்றும் விஜய் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மொத்தத்தில், இன்னும் தேர்தல் 10 மாதங்களுக்கு மேல் இருக்கும் நிலையில், பல்வேறு வகையான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. விஜய், அதிமுக – பாஜக கூட்டணியில் சேருவார் என்றும், தனித்து போட்டியிடுவார் என்றும், தனியாக ஒரு கூட்டணி அமைப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதில் உண்மையாக நடப்பது எது என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை என்பதால், விஜய் அவராகவே இது குறித்த முடிவை தெரிவிக்கும் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.