மேற்கு வங்க மாநிலத்தில் சட்டக் கல்லூரி மாணவி ஒருவர், அதே கல்லூரியை சேர்ந்த மாணவர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, குரங்குக்கு டீ, பிஸ்கட் கொடுக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் நீங்காத நிலையில், தற்போது சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே கல்லூரியில் படித்து முடித்த ஒரு மாணவர் மற்றும் படித்துக்கொண்டிருக்கும் இரண்டு மாணவர்கள் சேர்ந்து, பல மணி நேரம் அந்த மாணவியை ஒரு அறையில் அடைத்து பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோவும் எடுத்து மிரட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு மூவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி என்பதும் தெரியவந்துள்ளது. அந்த நபர் சட்டக் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, தற்போது வழக்கறிஞராகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். இருந்தபோதிலும், அவர் இன்னும் கல்லூரிக்கு அடிக்கடி வந்து கொண்டிருப்பதாகவும், தனது ஆதிக்கத்தை செலுத்தி கொண்டிருப்பதாகவும் முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அந்த நபருடன் சேர்ந்து, இரண்டாம் ஆண்டு படிக்கும் இரண்டு சட்டக் கல்லூரி மாணவர்களும் இந்த பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குரங்குக்கு டீ, பிஸ்கட் கொடுக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு கீழ் நெட்டிசன்கள் ஆவேசத்துடன் பதிலளித்து வருகின்றனர். “உங்கள் மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நீங்கள் இங்கு சாவகாசமாக உட்கார்ந்து குரங்குக்கு பிஸ்கட் கொடுத்து கொண்டிருக்கிறீர்களே?” என்ற விமர்சன கருத்துகள் பதிவாகி வருகின்றன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால், அதே நேரத்தில் ஒரு சிலர் இந்த புகைப்படம், சட்டக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதற்கு முன்பே எடுக்கப்பட்டது என்றும், இதை மாணவியின் பலாத்காரத்துடன் ஒப்பிட்டு முதல்வரையும், அரசையும் குறை சொல்வது பொருந்தாதது என்றும் கூறி வருகின்றனர்.