ஒரு காலத்தில் காதல் தோல்விகள், தொழில் சார்ந்த நிச்சயமற்ற தன்மைகளால் தவித்துக்கொண்டிருந்த பொறியியல் பட்டதாரியான அபூர்வா முகிஜா என்ற இளம்பெண் இன்று கோடிகளில் சம்பாதிக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.
ஆன்லைனில் கலேஷி அவுரத் (Kaleshi Aurat) மற்றும் தி ரெபெல் கிட் (The Rebel Kid) எனப் பலரும் அறியும் இவர், இப்போது டிஜிட்டல் உலகின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார். ஆச்சரியப்படும் வகையில், இவரது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் ஒவ்வொன்றும் ரூ. 25 லட்சம் வரை சம்பாதித்து தருகின்றன.
டெல்லியை சேர்ந்த 23 வயதான இந்த பெண், தனது தனித்துவமான நகைச்சுவை உணர்வு மற்றும் யதார்த்தமான, ரசிக்கக்கூடிய பாணியால், வேகமாக வளர்ந்து வரும் உள்ளடக்க உருவாக்கும் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார்.
2001 ஆம் ஆண்டு ஜூலை 28 அன்று ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த அபூர்வாவின் ஆரம்ப வாழ்க்கை மிகவும் எளிமையாகவே இருந்தது. டெல்லியில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், டிபிஎஸ் பானிபட்டில் படித்து, பின்னர் ஜெய்ப்பூரில் கணினி அறிவியல் பிரிவில் பி.டெக் பட்டம் பெற்றார். பட்டப்படிப்பு முடிந்ததும், டெல் நிறுவனத்தில் ஒரு கார்ப்பரேட் வேலையில் சேர்ந்தார். ஆனால், வழக்கமான காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலான வேலை தனக்கு பொருத்தமில்லை என்பதை அவர் விரைவிலேயே உணர்ந்தார்.
2019-ல், அபூர்வாவுக்கு ஏற்பட்ட காதல் தோல்வி மற்றும் வேலையில் ஏற்பட்ட அதிருப்தி ஆகியவை அவரை முதன்முதலில் இன்ஸ்டாகிராமின் பக்கம் இழுத்தன. அன்றாட நிகழ்வுகளை நகைச்சுவையுடன் சற்று மிகைப்படுத்தி பதிவு செய்த அவரது குறும்பான வீடியோக்கள், மிக விரைவிலேயே சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின. வெளிப்படையான பேச்சு, துள்ளலான வசனங்கள், உறவுகள், சமூகம், மற்றும் வயது வந்தோர் வாழ்க்கை குறித்த அவரது அஞ்சாத கருத்துக்கள், இளம் ரசிகர்களை அவருக்குப்பெற்றுத் தந்தன.
அபூர்வாவின் ஆன்லைன் உள்ளடக்கங்கள் Gen Z பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. அவரது ரீல்ஸ்கள், பெரும்பாலும் நையாண்டிக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் ஊசலாடின. அவை வெறும் நகைச்சுவையாக மட்டுமல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவும் இருந்தன. 2025 ஆம் ஆண்டுக்குள், அவரது இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்திற்கும் அதிகமாகவும், யூடியூப் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 10 லட்சத்திற்கும் அதிகமாகவும் உயர்ந்தது.
பிரபலம் அடைந்ததோடு அபூர்வா நின்றுவிடவில்லை; அதை ஒரு வெற்றிகரமான வணிகமாக மாற்றினார். நெட்பிளிக்ஸ், அமேசான், மெட்டா, நைக், கூகிள், ஒன்பிளஸ் போன்ற உலகின் முன்னணி நிறுவனங்கள் உட்பட 150-க்கும் மேற்பட்ட பிராண்டுகளுடன் அவர் இணைந்து பணியாற்றியுள்ளார். அவரது கட்டண பட்டியல், இன்ஃப்ளூயன்சர் துறையில் உள்ள பலருக்கும் வியப்பை ஏற்படுத்துகிறது. ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்கு ரூ. 2 லட்சம் வரையிலும், ஒரு ரீலுக்கு ரூ. 20-25 லட்சம் வரையிலும் அவர் சம்பாதிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக வலைத்தளங்களைத் தாண்டி அவரது வளர்ச்சி வேகமெடுத்தது. 2023-ல் வெளியான ‘Who’s Your Gynac’ என்ற வெப் சீரிஸ் மூலம் நடிகையாக அறிமுகமான அபூர்வா, ‘Pakki Baat’ என்ற தொடரிலும் நடித்தார். பிரபல ஆடை வடிவமைப்பாளர் தருண் தஹிலியானிக்காக ஃபேஷன் ஷோக்களில் ராம்ப் வாக் சென்றதுடன், கரண் ஜோஹர் தொகுத்து வழங்கிய பிரபலமான ரியாலிட்டி ஷோவான ‘தி ட்ரைட்டர்ஸ்’ நிகழ்ச்சியிலும் பங்கேற்று, சமூக ஊடகங்களுக்கு அப்பாலும் தனது பிரபலத்தை அதிகரித்தார்.
அபூர்வாவின் சொத்து மதிப்பு ரூ 41 கோடி வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவரது பெரும்பாலான வருமானம் பிராண்ட் ஒப்பந்தங்கள் மற்றும் ஸ்பான்சர் செய்யப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்துதான் கிடைக்கிறது என்பது தெளிவாகிறது. இருப்பினும், இந்த புள்ளிவிவரங்களை ஊடகங்கள் உறுதிப்படுத்தவில்லை.
அபூர்வாவின் தாயார் ஒரு ஆசிரியர், சமூக எதிர்பார்ப்புகளுக்கு எதிராகத் தனது நிலைப்பாட்டை எடுத்த ஒரு வழக்கத்திற்கு மாறானவர். அவரது தந்தை அரசு ஊழியr மற்றும் அவரது இளைய சகோதரர் அபூர்வாவின் சவாலான தொழில் பயணத்தில் முழு ஆதரவு அளித்து வருகிறார்.
பல பிரபலங்களை போலவே, அபூர்வாவின் வளர்ச்சியும் சர்ச்சைகள் இல்லாமல் இல்லை. 2025 ஆம் ஆண்டில், நகைச்சுவை நடிகர் சமய் ரைனா தொகுத்து வழங்கிய ஒரு யூடியூப் நிகழ்ச்சியில் அவர் கூறிய கருத்துகள் தொடர்பாக மும்பை மற்றும் அசாமில் அவருக்கு எதிராக ஒரு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டபோது அவர் ஒரு பெரிய சிக்கலில் சிக்கினார். அவரது தாயாருக்கு அச்சுறுத்தல்கள் வந்தபோது இந்த சர்ச்சை மேலும் தீவிரமடைந்தது. இந்த விவகாரம் குறித்து அபூர்வா பின்னர் பகிரங்க மன்னிப்பு கோரினார்.
இது தவிர, இன்ஃப்ளூயன்சர் உர்ஃபி ஜாவேத்துடன் ஏற்பட்ட அவரது பிரபலமான மோதல் மற்றும் ஒரு பல்கலைக்கழக நிகழ்ச்சியின்போது மாணவர்களுடன் ஏற்பட்ட சூடான வாக்குவாதம் போன்ற பிற சம்பவங்களும் தலைப்புச் செய்திகளாகி, ஆன்லைன் விமர்சனங்களை ஈர்த்தன.
சில சர்ச்சைகள் இருந்தாலும் அபூர்வா முகிஜாவின் இந்த அசுர வளர்ச்சி, பல இளம் தலைமுறையினருக்கு ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.