நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கிய ஒரே வருடத்தில், மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கை பெற்றுள்ளார். சினிமா கவர்ச்சியை தாண்டி, அதிமுக, திமுக என மாறி மாறி இரு கட்சிகளின் ஆட்சிகளை கண்டு சலித்துப்போன மக்கள், புதியதொரு தலைவருக்காக காத்திருக்கும் நிலையில், விஜய் தான் சரியான நேரத்தில் அரசியலுக்கு வந்துள்ளதாக மக்கள் மத்திய்8இல் ஒரு கருத்து தற்போது அதிகரித்துள்ளது. எனவே, விஜய், அதிமுக – திமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல், தனித்து ஒரு கூட்டணி அமைத்தால், அந்த கூட்டணிதான் கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் என கூறப்படுகிறது.
அதிமுக மற்றும் திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகளும், தங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்காத இரு கட்சிகள் மீது அதிருப்தியில் உள்ளன. “தங்களுடைய வாக்கு சதவீதத்தையும் சேர்த்துதான் இந்த இரு கட்சிகளும் ஆட்சிக்கு வருகின்றன, ஆனால் அதிகாரத்தை பங்கிட மட்டும் மறுக்கின்றன” என்று கூட்டணி கட்சிகளுக்குள் அதிருப்தி நிலவி வருகிறது. குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவனுக்கு இந்த அதிருப்தி பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் தான், விஜய் தலைமையில் ஒரு மெகா கூட்டணி ஏற்பட இருக்கும் நிலையில், அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கிட்டத்தட்ட இணைந்துவிட்டதாகவே கூறப்படுகிறது. 40 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி என பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், வரும் ஜூலை 15-ஆம் தேதி காமராஜர் பிறந்தநாளில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அரசியல் விமர்சகர் இன்பா அவர்கள் சமீபத்தில் யூடியூப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, ஆகஸ்ட் 15-ஆம் தேதி, விஜய் கட்சியின் தலைமையில் உருவாகும் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
எந்த திராவிட கட்சுகளையும் கூட்டணியில் சேர்க்க கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருப்பதாகவும், அதனால், மதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் கூட இந்த கூட்டணியில் வர வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. அதேசமயம், கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த புதிய கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில், 50 வருடங்களுக்கும் மேலாக தமிழகத்தை ஆட்சி செய்து வந்த திராவிட கட்சிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வருவதாகவும், 2026 முதல் தமிழகத்தில் ஒரு புதிய கூட்டணி ஆட்சி அமைக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருவது மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.