பார்க்கத்தானே போற இந்தக் காளியோட ஆட்டத்த.. அதிமுக, திமுகவை எதிர்த்து விஜய்யால் ஒன்றுமே செய்ய முடியாது.. ஒரு சீட் கூட ஜெயிக்க மாட்டார்.. மணி

தமிழக அரசியல் வட்டாரத்தில், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், பத்திரிகையாளர் மணி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தனித்து போட்டியிட்டாலோ அல்லது ஒரு…

vijay vs mani

தமிழக அரசியல் வட்டாரத்தில், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், பத்திரிகையாளர் மணி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தனித்து போட்டியிட்டாலோ அல்லது ஒரு தனி கூட்டணி அமைத்தாலோ, அதிமுக – திமுக ஆகிய இரு பெரும் கூட்டணிகளை எதிர்த்து ஒன்றுமே செய்ய முடியாது என்றும், ஒரு சீட் கூட அவர் ஜெயிக்க மாட்டார் என்றும் மணி தெரிவித்துள்ளார்.

“தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக, திமுக ஆகிய இரண்டு கூட்டணிகள் தான் மாறி மாறி வெற்றி பெற்று வருகின்றன. குறிப்பாக, எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த பிறகு, கடந்த 50 ஆண்டுகளில் மூன்று தேர்தல்களில் மட்டும்தான் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதில் இரண்டு தேர்தலில் மெஜாரிட்டி, ஒரு தேர்தலில் மைனாரிட்டி என கூறிய அவர், அதிமுகதான் பெரும்பாலான தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது” என்று பத்திரிகையாளர் மணி சுட்டிக்காட்டினார்.

“தேர்தல் என்று வந்துவிட்டால், திமுக வேற லெவலில் இறங்கிப் பிரசாரம் செய்யும்; பல வித்தியாசமான வேலைகளை செய்யும். அவர்களை எதிர்த்து விஜய்யால் கண்டிப்பாக அரசியல் செய்ய முடியாது,” என்றும் மணி திட்டவட்டமாகக் கூறினார்.

வரும் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும், கடைசி நேரத்தில் பாஜகவை வெளியேற்றிவிட்டு அதிமுக ஒரு புதிய கூட்டணியை அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் அவர் தனது பேட்டியில் தெரிவித்தார்.

“விஜய் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை என்றால் அவருக்கு இரண்டு பக்கமும் சிக்கல் ஏற்படும். தமிழகத்தில் திமுக மீண்டும் ஜெயித்துவிட்டால், திமுக மற்றும் பாஜக ஆகிய இருவரையும் எதிர்த்து அவரால் அரசியல் செய்ய முடியாது. அந்த அளவுக்கு அவருக்கு டார்ச்சர் இருக்கும்,” என்றும் பத்திரிகையாளர் மணி கருத்து தெரிவித்தார்.

மேலும், “கடந்த ஒன்றரை வருடங்களில் விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து, பாஜகவை கொள்கை எதிரி என்று சொன்னாலும், அவர் பெரிய அளவில் பாஜகவை எதிர்க்கவில்லை. மத்திய அரசை எதிர்த்து அவரால் திமுக மாதிரி அரசியல் செய்ய முடியாது,” என்றும் அவர் கூறியுள்ளார்.

மொத்தத்தில், “விஜய் வரும் தேர்தலில் ஒரு சீட்டு கூட பெற முடியாது. அவரால் 10 முதல் 15 சதவீத வாக்குகளை மட்டுமே பிரிக்க முடியுமே தவிர, அதை சீட்டாக மாற்ற முடியாது,” என்றும் பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார். அவர் கூறியது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதைத் தேர்தல் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால் மணியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தவெக தொண்டர்கள், ‘பார்க்கத்தானே போற இந்தக் காளியோட ஆட்டத்த’ என்று பதிவு செய்து வருகின்றனர்.