மூளையில் காயமா? இனி CT ஸ்கேன் தேவையில்லை.. 18 நிமிடத்தில் நோயை கண்டறியலாம்.. அபாரமான டெக்னாலஜி..!

  தலையில் அடிபட்டு, லேசான மூளை அதிர்ச்சி ஏற்பட்டவர்களுக்கு இனி CT ஸ்கேன் எடுக்க வேண்டியதில்லை! உலக அளவில் முன்னணி சுகாதார நிறுவனமான அபோட் (Abbott), இதை கண்டறியும் புதிய ஆய்வக அடிப்படையிலான இரத்த…

brain

 

தலையில் அடிபட்டு, லேசான மூளை அதிர்ச்சி ஏற்பட்டவர்களுக்கு இனி CT ஸ்கேன் எடுக்க வேண்டியதில்லை! உலக அளவில் முன்னணி சுகாதார நிறுவனமான அபோட் (Abbott), இதை கண்டறியும் புதிய ஆய்வக அடிப்படையிலான இரத்த பரிசோதனையை அறிமுகப்படுத்தியுள்ளது. அபோட்டின் Alinity i மற்றும் Architect i1000SR போன்ற நவீன ஆய்வக கருவிகளில் இந்த பரிசோதனையை மேற்கொள்ளலாம். இந்த கருவிகள் ஏற்கெனவே அப்போலோ மருத்துவமனை, ஹைதராபாத், நியூபெர்க் சுப்ராடெக் போன்ற பெரிய மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் பயன்பாட்டில் உள்ளன.

இந்த புதிய இரத்த பரிசோதனையின் சிறப்பு என்னவென்றால், வெறும் 18 நிமிடங்களுக்குள் நம்பகமான முடிவுகளை வழங்கிவிடும். இதனால் மருத்துவர்கள், மூளை காயத்தை மிக விரைவாக மதிப்பிட முடியும். லேசான மூளைக்காயம் உள்ளவர்களுக்கு உடனே முன்னுரிமை அளித்து சிகிச்சையளிக்க இது மிகவும் உதவும். முக்கியமாக, இந்த பரிசோதனையால் CT ஸ்கேன் தேவையை சுமார் 40% வரை குறைக்க முடியும் என்கிறார் அபோட் இந்தியா பொது மேலாளர் ரவி சின்ஹா.

இதன் மூலம், மருத்துவமனைகளில் காத்திருக்கும் நேரம் குறைவதோடு, நோயாளிகள் தேவையற்ற கதிர்வீச்சுக்கு ஆளாகுவதும் தவிர்க்கப்படும். CT ஸ்கேன் எடுப்பதற்கான பெரிய செலவும் தவிர்க்கப்படும். இரத்தத்தில் உள்ள UCH-L1 மற்றும் GFAP எனப்படும் இரண்டு குறிப்பிட்ட புரதங்களின் அளவை இந்த பரிசோதனை கண்டறிகிறது. இவை மூளை காயத்துடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நவீன பரிசோதனை, சிகிச்சை முறைகளை எளிதாக்கி, நோயாளிகளுக்கும், ஒட்டுமொத்த சுகாதார அமைப்புக்கும் பெரிதும் பயனளிக்கும். குறிப்பாக, CT ஸ்கேன் வசதிகள் குறைவாக உள்ள கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். “இந்த இரத்தப் பரிசோதனை மூலம், அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகள் செலவிடும் நேரம் குறையும். இதனால் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் மன அழுத்தம் குறையும். சரியான நேரத்தில், துல்லியமான கண்டறிதல் மூலம் நீண்டகால ஆரோக்கிய விளைவுகளை உறுதிசெய்ய முடியும்,” என்கிறார் ரவி சின்ஹா.

தலையில் ஏற்படும் ஒரு சிறு அடி, மோதல் அல்லது அதிர்வு கூட மூளைக் காயத்தை ஏற்படுத்தலாம். இது தற்காலிகமாகவோ அல்லது நீண்ட காலத்திற்கோ ஆபத்தான விளைவுகளை உண்டாக்கலாம். இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு சுமார் ஒரு மில்லியன் மக்கள் இத்தகைய காயங்களால் பாதிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மூளை காயத்தால் பாதிக்கப்பட்டவர்கள், நினைவாற்றல், உடல் அசைவுகள், பார்வை, செவிப்புலன் போன்ற உணர்வுத் திறன்கள், மற்றும் உணர்ச்சி நிலைகளில் பாதிப்புகளை சந்திக்க நேரிடும். ஒருமுறை மூளை காயம் ஏற்பட்டவர்களுக்கு, கணுக்கால் சுளுக்கு அல்லது தசைநார் கிழிந்தவர்களுக்கு மீண்டும் காயம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதை போலவே, அடுத்தடுத்து காயம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

CT ஸ்கேன் போன்ற வழக்கமான முறைகளில் உள்ள காத்திருப்பு நேரம், கதிர்வீச்சு வெளிப்பாடு, மற்றும் சில இடங்களில் உள்ள வசதி பற்றாக்குறை போன்ற சவால்களுக்கு, அபோட்டின் இந்த TBI இரத்த பரிசோதனை ஒரு சிறந்த மாற்று வழியாகும்.