அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்கு நடிகர் விஜய் வரத் தயங்குவதாக கேட்கப்படும் கேள்விக்கு, அவரை எப்படி கூட்டணிக்கு வரவழைக்க வேண்டும் என்பது அமித்ஷாவுக்கு தெரியும்” என்று தமிழா பாண்டியன் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை, விஜய்தான் தேர்தல் முடிவை நிர்ணயிப்பவர் என்று அரசியல் நோக்கர்கள் கணித்து வருகின்றனர். அ.தி.மு.க. கூட்டணியில் விஜய் சேர்ந்துவிட்டால், நிச்சயம் அ.தி.மு.க. – விஜய் கூட்டணி ஆட்சியை பிடித்துவிடும் என்றும் அரசியல் விமர்சகர்களால் கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், விஜய் தனியாக ஒரு கூட்டணி அமைத்தால், அ.தி.மு.க. கூட்டணி, விஜய் கூட்டணி, தி.மு.க. கூட்டணி என மூன்று கூட்டணிகளில் யார் வேண்டுமானாலும் ஆட்சியை பிடிக்கலாம் என்றும், எதையுமே உறுதியாக சொல்ல முடியாது என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்கு விஜய்யை அழைத்து வர பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், துணை முதல்வர் பதவி உள்பட சில முக்கிய அமைச்சர் பதவிகளையும் தர அ.தி.மு.க. தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக தன்னை கருதி கொண்டிருக்கும் விஜய், அ.தி.மு.க. கூட்டணிக்கு கண்டிப்பாக செல்ல மாட்டார் என்றும், குறிப்பாக பாஜக இருக்கும் கூட்டணிக்கு செல்ல மாட்டார் என்றும் பரவலாக பேசப்படுகிறது.
இருப்பினும், தமிழா பாண்டியன், “விஜய்யை எப்படி அழைத்து வரவேண்டும் என்பது அமித்ஷாவுக்கு தெரியும். அவர் அரசியலை கரைத்து குடித்தவர். அதனால், கண்டிப்பாக அவர் விஜய்யை அழைத்து வந்துவிடுவார்” என்று உறுதியாகக் கூறியுள்ளார்.
ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் இதை மறுத்து வருகின்றனர். “அமித்ஷா படித்த பள்ளியில் விஜய் ஹெட்மாஸ்டராக இருப்பவர். அமித்ஷாவை விட அரசியல் எப்படி செய்ய வேண்டும் என்பது விஜய்க்குத் தெரியும். அமித்ஷாவின் மிரட்டலுக்கெல்லாம் விஜய் பயப்பட மாட்டார்!” என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.
விஜய்யை எந்த ஒரு காரணத்தையும் சொல்லி பயமுறுத்த முடியாது என்றும், அவர் மிகவும் சரியாக வருமான வரி கட்டி வருகிறார் என்றும், எனவே அவர் மீது எந்தவித பெரிய குற்றச்சாட்டையும் சுமத்த முடியாத நிலையில், எந்தவித ஊழல் குற்றச்சாட்டையும் சுமத்த முடியாத நிலையில் எப்படி அமித்ஷா பயமுறுத்துவார் என்றும், அதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்றும் தமிழக வெற்றி கழகத்தினர் கூறி வருகின்றனர்.
இருப்பினும், விஜய் என்ன முடிவெடுப்பார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.