பொதுமக்களின் பயணத்தை எளிதாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கட்டப்பட்டு வந்த லக்னோவின் பிருஷ்ண நகர் – கேசரி கேரா மேம்பாலம், எங்குமே செல்லாமல், நடுவழியில் ஒரு கட்டிடத்தின் சுவருடன் முட்டி நின்றது. சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பரவிய ஒரு காணொளி, கட்டுமானத்தில் உள்ள அந்த மேம்பாலம் ஒரு கட்டிடத்தில் நேராக மோதி நிற்பது போல் காட்டியது. பாலத்தின் இரும்பு கம்பிகள் நேரடியாக கட்டிடத்தின் சுவருடன் இணைக்கப்பட்டு, பாலம் அந்த கட்டிடத்தில் கட்டப்பட்டிருப்பது போல தோன்றிய இந்த வினோத காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விசித்திரமான காட்சி இணையத்தில் வேகமாகப் பரவி, பலர் இதை “உலகின் எட்டாவது அதிசயம்” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டனர். ஸ்டாண்ட்-அப் காமெடியன் தருண் லக்னோவி பகிர்ந்த இந்த மேம்பால காணொளி இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
ஆனால், இந்த வைரல் காட்சிக்குப் பின்னால் பல மாதங்களாக திட்டத்தை பெரிய அளவில் முடக்கிய ஒரு தீவிர பிரச்சனை மறைந்திருந்தது. அது ஒரு நிலத்தகராறு. இந்த தகராறால்தான், பாலத்தின் ஒரு பகுதி காற்றில் தொங்கி கொண்டிருந்தது.
இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல ஆண்டுகளாக தினசரி கடுமையான போக்குவரத்து நெரிசலை சந்தித்து வந்தனர். கிருஷ்ணாநகர் மற்றும் கேசரிகேடா இடையேயான ரயில்வே கிராசிங் ஒரு நாளைக்கு 60 முறைக்கும் மேல் மூடப்படுவதால், ரயில்கள் கடந்து செல்லும்போது வாகன ஓட்டிகள் 15-20 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இ
இந்தத் தொடர் சிரமத்தை தீர்க்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். பாதுகாப்புத்துறை அமைச்சரும் லக்னோ நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜ்நாத் சிங், இந்த திட்டத்திற்கு மாநில அரசு மற்றும் ரயில்வே துறையின் ஒப்புதலை பெற உதவினார்.
இரண்டு வழித்தடங்களை கொண்ட, சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த ரயில்வே மேம்பாலத்திற்கு ரூ.74 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. கிருஷ்ணாநகரின் போக்குவரத்து பூங்கா அருகே உள்ள இந்திரலோக் காலனியுடன் கேசரிகேடாவை இது இணைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு ஜூலை 17 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, 2024 பிப்ரவரியில் பணிகள் தொடங்கின. அறிக்கையின்படி, 75 சதவீத பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.
ஆனால் கட்டுமான பணி கிருஷ்ணாநகர்-கேசரிகேடா சந்திப்பை அடைந்தபோதுதான் முக்கிய பிரச்சினை ஏற்பட்டது. மேம்பாலத்தின் பாதையில் வீடுகளும் கடைகளும் நேரடியாக அமைந்திருந்தன. அவற்றின் உரிமையாளர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படாததே இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணமாகும்.
பாதிக்கப்படாத பகுதிகளில் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்ற நிலையில், இந்த நிலப்பிரச்சனை காரணமாக கட்டிடப் பகுதி மட்டும் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக தீர்க்கப்படாமல் இருந்தது. இதனால்தான் மேம்பாலம் ஒரு குடியிருப்பு கட்டிடத்துடன் இணையும் காணொளிகளும் படங்களும் இணையத்தில் வேகமாக பரவின.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்கப் பொதுப்பணித் துறை தலையிட்டது. ஜூன் 28 அன்று, ஆறு பேர் கொண்ட குழு, 31 வெவ்வேறு நபர்களுக்குச் சொந்தமான நிலத்தை அளவீடு செய்தது. விவசாய நிலத்திற்கான ‘சர்க்கிள் ரேட்’ ஐ விட இரண்டு மடங்கு இழப்பீடு கணக்கிடப்பட்டது. அதன்படி, ஒரு சதுர மீட்டருக்கு ₹7,240 வழங்கப்படும். எனவே இந்த பிரச்சனை தற்போது தீர்க்கப்பட்டு விட்டதால் விரைவில் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு பாலத்தின் பணிகள் நிறைவு செய்யப்படும் என தெரிகிறது.
ஆனாலும் கட்டிடத்தை முழுவதுமாக இடித்து, இடிபாடுகளை அகற்ற சுமார் ஏழு முதல் எட்டு நாட்கள் ஆகும் என்றும், இந்த இடிப்புப் பணிகள் முடிந்தவுடன், மேம்பாலப் பணிகள் விரைவாக முடிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.