விஜய் ஒரு ஸ்பாயிலர்.. எல்லா கட்சி ஓட்டையும் பிரிக்கிறார்.. ஆனால் அவர் ஒரு பந்தில் சிக்ஸர் அடிக்க வேண்டும்.. ஃபோர் அடித்தால் கூட வேலைக்கு ஆகாது: ரங்கராஜ் பாண்டே

  நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த பரபரப்பான விவாதம் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரபல அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளருமான ரங்கராஜ் பாண்டே சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில்,…

vijay rangaraj

 

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த பரபரப்பான விவாதம் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரபல அரசியல் விமர்சகரும், ஊடகவியலாளருமான ரங்கராஜ் பாண்டே சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், விஜய் ஒரு ‘ஸ்பாய்லர்’ என்றும், அவர் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் வாக்குகளையும் பெறுவார் என்றும், ஆனால் அதே நேரத்தில் அவருக்கு ஒரே பந்தில் சிக்ஸர் அடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது; பவுண்டரி அடித்தால் கூட அவர் தோல்விதான் அடைவார் என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஏற்கனவே, பல அரசியல் விமர்சகர்கள் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தான் ‘ஆட்டநாயகன்’ என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். விஜய் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பாரா என்பதை தாண்டி, அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் இருந்து வீழ்த்துவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலின் முடிவு ஒன்று விஜய் ஜெயித்து ஆட்சி அமைப்பார், அல்லது தொங்கு சட்டசபை அமைய காரணமாக இருப்பார் என்றுதான் பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சூழலில்தான் ரங்கராஜ் பாண்டே தனது பேட்டியில், “விஜய் தான் சந்திக்கும் முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வராததற்கு ஒரே காரணம், முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடிக்க முடியாது; 10 முதல் 15 சதவீதம் வாக்குகள் மட்டுமே வாங்க முடியும் என்பதால் தான் அவர் பின்வாங்கினார். அதேபோன்ற ஒரு நிலைதான் தற்போது விஜய்க்கும் உள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “விஜய், சீமான் போல் தோல்வி அடைந்தாலும் அடுத்தடுத்த தேர்தல்களை சந்திக்கும் அளவுக்கு பொறுமை கிடையாது. இந்த தேர்தலிலேயே அவர் ஒன்று ஜெயித்து ஆட்சியில் அமர வேண்டும், அல்லது 20 அல்லது 30 தொகுதிகளில் வெற்றி பெற்று 2031 அல்லது 2036 ஆம் ஆண்டு தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம் என்ற அளவுக்கு அவருடைய நிலை இல்லை. ஒருவேளை தோல்வி அடைந்தால், அவர் சிரஞ்சீவி மாதிரி அரசியலில் இருந்து விலகிவிடுவார்,” என்றும் கூறப்பட்டு வருகிறது.

எனவே, தற்போது 2026 ஆம் ஆண்டு தேர்தலை பொருத்தவரை, விஜய்க்கு ஒரே ஒரு பந்துதான் உள்ளது. ஆனால், அதில் அவர் சிக்ஸர் அடித்து ஆட்சியில் அமர்ந்தே ஆக வேண்டும். பவுண்டரி அடித்தால் கூட அவர் தோல்வியடைந்துவிடுவார். ஒருவேளை தோல்வியடைந்துவிட்டால், அவர் தொடர்ச்சியாக அரசியலில் இருப்பாரா என்பது சந்தேகம்தான் என்றும் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

ஆனால், அதே நேரத்தில் விஜய் ஆட்சி அமைக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும், ஏனெனில் அவர் கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளின் வாக்குகளையும் பிரிக்கிறார் என்றும் அவர் கூறினார். திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் என அனைத்து கட்சிகளின் வாக்குகளும் ஒரு சில சதவீதங்கள் விஜய்க்கு செல்வதால், விஜய் வெற்றி பெறவும் வாய்ப்பு உண்டு. ஆனால், எதையும் இப்போது உறுதியாக சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், அதிமுக கூட்டணிக்கு விஜய் செல்ல மாட்டார் என்பது இன்னும் உறுதி இல்லை என்றும், ஒருவேளை பாஜக இல்லாத அதிமுக கூட்டணியில் அவர் முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் செல்லலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. மொத்தத்தில், வரும் டிசம்பர் மாதத்திற்கு பின்னரே, பாஜக இல்லாத அதிமுக கூட்டணியில் விஜய் செல்வாரா? அல்லது தனித்து போட்டியிடுவாரா? என்பது உறுதியாக தெரியும் என்றும் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.