யூடியூபில் அசல் இல்லாத மற்றும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் வீடியோக்களுக்கு ஜூலை 15 முதல் வருவாய் இல்லை என்ற புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
புதிய கொள்கையின்படி, பார்வையாளர்களுக்கு எந்த மதிப்பையும் வழங்காத அல்லது மிக குறைந்த மதிப்பையே தரும் வீடியோக்களை நீக்குவதில் யூடியூப் அதிக கவனம் செலுத்தும். அதேபோல் இனிமேல் அசல் மற்றும் நம்பகமான உள்ளடக்கங்களுக்கு மட்டுமே யூடியூப் முக்கியத்துவம் அளிக்கும் என்றும், அத்தகைய உள்ளடக்கங்களுக்கு மட்டுமே வருவாய் ஈட்ட அனுமதிக்கும் என்றும் தெளிவாக கூறுகின்றன.
உண்மையான உள்ளடக்க படைப்பாளர்களை பாதுகாப்பதும், தளத்தின் தவறான பயன்பாட்டை தடுப்பதும் யூடியூப்பின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக, ‘கிளிக்பைட்’ என்ற குறைந்த தரம் கொண்ட மற்றும் ஒரே மாதிரியான வீடியோக்களை மீண்டும் மீண்டும் பதிவேற்றுவதன் மூலம் தளத்தை பலரும் தவறாக பயன்படுத்துவதை தடுக்க யூடியூப் ஆர்வம் காட்டுகிறது.
கல்வி அல்லது பொழுதுபோக்கிற்கு பங்களிக்கும் உள்ளடக்கத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், வெறும் பார்வைகளை அதிகரிப்பதற்காக உருவாக்கப்படும் வீடியோக்களுக்கு இனி எந்த முக்கியத்துவமும் இருக்காது என்றும் யூடியூப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஒரே மாதிரியான வீடியோக்களை திரும்ப திரும்பப் பதிவிடுவது, அதாவது ரியாக்ஷன் வீடியோக்களின் தொகுப்புகள், AI-யால் உருவாக்கப்பட்ட ஸ்லைடுஷோக்கள் அல்லது பிறரது உள்ளடக்கத்தை எடிட் செய்து வெளியிடுவது போன்றவை இனி படைப்பாளர்களுக்கு வருவாய் இருக்காது.
தொடர்ந்து அசல் உள்ளடக்கத்தை உருவாக்கும் படைப்பாளிகளுக்கு மட்டுமே வருவாய் ஈட்டும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்பதை யூடியூப் உறுதிப்படுத்தியுள்ளது. அத்தகைய வீடியோக்களில் பின்வருவன அடங்கும்:
பார்வையாளர்களுக்கு புதிய தகவல்களையும், அறிவையும் வழங்கும் கல்வி வீடியோக்கள்.
உண்மையிலேயே படைப்புத்திறன் மிக்கதாகவும், மக்களை ஈர்க்கும் வகையிலும் உள்ள பொழுதுபோக்கு வீடியோக்கள்.
மற்றவர்களிடமிருந்து எடுக்கப்படாத, அசல் குரல் மற்றும் தனித்துவமான காட்சி படங்களை கொண்ட வீடியோக்கள்.
மேலும் யூடியூப் பார்ட்னர் புரோகிராமில் சேர, உள்ளடக்க படைப்பாளர்கள் பின்வரும் குறைந்தபட்சத் தகுதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:
குறைந்தபட்சம் 1,000 சந்தாதாரர்கள் இருக்க வேண்டும்.
கடந்த 12 மாதங்களில் 4,000 பொதுப் பார்வை நேரங்கள் அல்லது கடந்த 90 நாட்களில் 10 மில்லியன் செல்லுபடியாகும் ஷார்ட்ஸ் பார்வைகள் பெற்றிருக்க வேண்டும்.
இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்ட பிறகு, யூடியூப் உங்கள் உள்ளடக்கத்தின் அசல் தன்மையை விரிவாக மதிப்பிட்டு, அதன் பின்னரே வருவாய் ஈட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கும்.
யூடியூப்பின் புதிய விதிகள், ‘காப்பி-பேஸ்ட்’ அல்லது மற்றவர்களின் உள்ளடக்கத்தை திருத்தி வெளியிடும் சேனல்கள் இனி வருவாய் ஈட்ட முடியாது என்பதை தெளிவுபடுத்துகின்றன. அதாவது,
மற்றவர்களின் உள்ளடக்கத்தை அப்படியே நகலெடுப்பது.
ஏற்கனவே உள்ள உள்ளடக்கத்தை மறுபயன்படுத்துவது
பெரிய மெனக்கெடல் இல்லாமல், ஏற்கனவே உள்ள உள்ளடக்கத்தை வெறுமனே எடிட் செய்து பதிவிடுவது.
ஆகிய தந்திரங்களை பயன்படுத்தும் படைப்பாளிகள் இனி வருவாய் ஈட்ட முடியாது. ஜூலை 15 முதல், பார்வையாளர்களுக்காக ஒரு படைப்புத்திறன் மிக்க, உயர்தர உள்ளடக்க சூழலை உருவாக்குவதே யூடியூப்பின் முக்கிய நோக்கமாக இருக்கும். யூடியூப்பின் இந்த திருத்தப்பட்ட கொள்கை, உண்மையான உள்ளடக்க படைப்பாளர்களை ஊக்குவிப்பதையும், சமூகத்திற்கு எந்த மதிப்பையும் சேர்க்காமல், வெறும் பார்வைகளுக்காக மட்டும் உள்ளடக்கத்தை பதிவிடும் சேனல்களை வடிகட்டுவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
யூடியூப்பின் இந்த புதிய விதிகள், படைப்பாளர்களுக்கு ஒரு சவாலாக இருந்தாலும், தரமான உள்ளடக்கத்திற்கு இனி அதிக அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.