நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி ஒரு வருடத்திற்கு மேலாகியும், ஒரிரு சில பொதுக்கூட்டங்கள் தவிர்த்து, வீட்டை விட்டு வெளியே வராமல் அரசியல் செய்து வருகிறார். “களத்தில் இறங்கி அரசியல் செய்யாத எந்த அரசியல்வாதியும் மக்கள் மத்தியில் நல்ல பெயரை எடுக்க முடியாது” என்று அரசியல் விமர்சகர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். கிட்டத்தட்ட அனைவருமே விஜய் களத்தில் இறங்க வேண்டும், மக்களை சந்திக்க வேண்டும், போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறிவரும் நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
“களத்தில் இறங்கிப் போராடுவதற்கும், மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை,” என்று அவர்கள் வாதிடுகின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் கட்சி நடத்தி வருகிறார். அவர் களத்தில் இறங்காத நாட்களே இல்லை; பல பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி உள்ளார். ஆனால், அவரால் ஒரே ஒரு கவுன்சிலர் தேர்தலில்கூட வெற்றி பெற முடியவில்லை.
எனவே, “களத்தில் இறங்கிப் போராடுவதற்கும் வெற்றிக்கும் சம்பந்தமே இல்லை” என்று தவெக தொண்டர்கள் கூறுகின்றனர். எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்து கொண்டே வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தார்; மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமும், மக்கள் மீது காட்டும் அக்கறையும் மட்டும் இருந்தால் போதும், கண்டிப்பாக எங்கள் தலைவர் விஜய் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
இருப்பினும், எம்.ஜி.ஆர். உதாரணம் தவறு என்று நடுநிலையாளர்கள் கூறுகின்றனர். எம்.ஜி.ஆர். முதலில் களத்தில் இறங்கி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று முதலமைச்சராகி, அதன் பின்னர்தான் அவர் அமெரிக்காவிலிருந்து வெற்றி பெற்றார் என்றும், முதல் தேர்தலிலேயே அவர் களத்தில் இறங்காமல் இல்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலையில், விஜய் இதுவரை களத்தில் இறங்காதது ஒரு மைனஸ்தான் என்று சில தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் ஒப்புக்கொண்டாலும், “சரியான நேரத்தில் அவர் களத்தில் இறங்குவார். அப்போது அவர் களத்தில் இறங்கினால் மற்ற அரசியல்வாதிகள் தாங்க மாட்டார்கள்,” என்று நம்பிக்கையுடன் கூறுகின்றனர். விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’ படத்தில் இடம்பெற்ற “நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்டட” என்ற பாடலை ஒப்பிட்ட விஜய் ரசிகர்கள், “கண்டிப்பாக களத்தில் விஜய் இறங்குவார்; அப்போது மக்கள் எழுச்சியை நீங்கள் பார்ப்பீர்கள்,” என்று உறுதியாக தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே, விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் திட்டம் இருப்பதாகவும், மூன்று முக்கிய நகரங்களில் ரோட் ஷோ நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. என்னதான் தமிழக வெற்றிக் கழகத்தினர் தங்களுக்குள் ஆறுதல் சொல்லி கொண்டாலும், விஜய் களத்தில் இறங்கினால் அதற்கு கிடைக்கும் ‘மாஸ்’ வேறு என்பதால், அவர் விரைவில் மக்கள் மத்தியில் களத்தில் இறங்க வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.