வச்சகுறி தப்பாது.. 2026 நம்ம ஆட்சி தான்.. விஜய் கூட்டணியில் தேமுதிக, காங்கிரஸ், மதிமுக, விசிக.. ஒரு முதல்வர் 4 துணை முதல்வர்கள்.. பக்கா திட்டம்..!

  அ.தி.மு.க. கூட்டணிக்கு விஜய் வருவார் என இலவு காத்த கிளி போல அந்த கூட்டணியில் உள்ளவர்கள் காத்திருக்கும் நிலையில், விஜய் தனது கட்சி தலைமையில் ஒரு புதிய கூட்டணியை அமைக்கத் திட்டமிட்டுவிட்டதாகவும், இந்தக்…

vijay

 

அ.தி.மு.க. கூட்டணிக்கு விஜய் வருவார் என இலவு காத்த கிளி போல அந்த கூட்டணியில் உள்ளவர்கள் காத்திருக்கும் நிலையில், விஜய் தனது கட்சி தலைமையில் ஒரு புதிய கூட்டணியை அமைக்கத் திட்டமிட்டுவிட்டதாகவும், இந்தக் கூட்டணிதான் 2026-ல் ஆட்சி அமைக்கும் என்று அவர் முழுமையாக நம்புவதாகவும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பா.ஜ.க.வை தனது கொள்கை எதிரி என்றும், தி.மு.க.வை தனது அரசியல் எதிரி என்றும் விஜய் பகிரங்கப்படுத்திய நிலையில், இரு கட்சிகள் இருக்கும் கூட்டணியில் அவர் இணைய மாட்டார் என்பது உறுதியாகத் தெரிகிறது. எனவேதான், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் விஜய்யை இணைக்க தீவிர முயற்சி செய்து வந்தாலும், அவர் கண்டிப்பாக அந்தக் கூட்டணியில் இணைய மாட்டார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருப்பதால், அந்த கூட்டணியில் சேர்ந்தால் பின்னடைவுதான் ஏற்படும் என்று விஜய்க்கு அரசியல் ஆலோசகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், விஜய் தனது கட்சியின் தலைமையில் ஒரு புதிய கூட்டணியை அமைக்க திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க. கூட்டணியில் அதிக தொகுதிகளை எதிர்பார்ப்பதால், அந்தத் தொகுதிகள் அவர்களுக்கு கிடைக்காது என்றுதான் கூறப்பட்டு வருகிறது.

குறிப்பாக, கடந்த முறை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகள் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த முறையும் அதே தொகுதியைத்தான் கொடுக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளது. அதேபோல், காங்கிரஸ் கட்சிக்கும் இரட்டை இலக்கங்களில் தொகுதிகள் கிடைப்பது சந்தேகம்தான்.

எனவே, இந்த இரண்டு கட்சிகளும் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாகவும், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருப்பதால் அங்கும் செல்ல வாய்ப்பு இல்லாததால், விஜய் கூட்டணியில் இணையும் என்றும் கூறப்படுகிறது. ம.மு.தி.க.வும் கிட்டத்தட்ட தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி விட்டதாகவே கூறலாம். தேமுதிகவும் இதே முடிவை தான் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தே.மு.தி.க. கூட்டணி அமைந்தால், விஜய் முதல்வர் வேட்பாளராகவும், இந்த நான்கு கட்சியில் இருந்து ஒவ்வொருவரும் என நால்வர் துணை முதல்வர் வேட்பாளராகவும் இருப்பார்கள் என்றும், இந்தப் ‘பக்கா திட்டம்’ ஒர்க் அவுட் ஆகும் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

இது எந்த அளவுக்கு சாத்தியம்? இந்தக் கூட்டணி ஏற்படுமா? அப்படியே ஏற்பட்டாலும் மக்கள் ஆதரவு இருக்குமா? இரண்டு திராவிடக் கட்சிகளையும் வீழ்த்தும் சக்தி இந்தக் கூட்டணிக்கு இருக்குமா? அல்லது இன்னொரு மக்கள் நலக் கூட்டணியாக மாறுமா என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.