ஆடி அடங்கும் வாழ்க்கையடா.. இதுமட்டும் நடந்தால் மனித இனமே அழிந்துவிடும்.. விஞ்ஞானிகளின் அதிர்ச்சி எச்சரிக்கை!

  இந்தியா உட்பட உலகம் முழுவதும் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருவதால், ஒரு கட்டத்தில் குழந்தை பிறப்பு நின்றுவிட்டால், அதன் பிறகு 100 ஆண்டுகளில் மனித இனமே அழிந்துவிடும் என்று விஞ்ஞானிகள்…

human

 

இந்தியா உட்பட உலகம் முழுவதும் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருவதால், ஒரு கட்டத்தில் குழந்தை பிறப்பு நின்றுவிட்டால், அதன் பிறகு 100 ஆண்டுகளில் மனித இனமே அழிந்துவிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மனிதர்கள் மலட்டுத்தன்மை அடைவது அதிகரித்து வருவதாகவும், உலக அளவில் தொற்றுநோய் பரவி வருவதாகவும், அதுமட்டுமின்றி அணு ஆயுதப் போர் மற்றும் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று ஒரு சில குறிப்பிட்ட மக்கள் முடிவு செய்ததன் காரணமாக உலக மக்கள் தொகை மிகவும் வேகமாக குறைந்து வருகிறது என்றும் விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் மிக மோசமாக இருப்பது கவலையாக இருப்பதாகவும், இந்தியாவில் கூட குறைவான குழந்தைகள் தான் பிறக்கின்றன என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு 4.1 மில்லியனாக இருந்த குழந்தை பிறப்புகள், தற்போது 3.6 மில்லியனாக குறைந்துள்ளதாகவும் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

உலகில் மனித இனத்தை பொறுத்தவரை, இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் இடையிலான சமநிலைத்தன்மை மிகவும் முக்கியமானது என்றும், எந்த அளவுக்கு இறப்பின் விகிதம் இருக்கிறதோ, அதே அளவு பிறப்பின் விகிதமும் இருக்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகமாக இருந்தால், முதியோர்கள் மட்டுமே அதிகம் வாழும் உலகமாக மாறிவிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஒருவேளை உலகில் பிறப்பு விகிதம் முழுமையாக நின்றுவிட்டால், 70 முதல் 80 ஆண்டுகளில் மனித இனம் வீழ்ச்சி அடைந்துவிடும் என்றும், 100 ஆண்டுகளில் மனித இனம் முற்றிலும் பூமியில் இருக்காது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பிறப்பு விகிதம் இன்று நின்றுவிட்டால், இன்றிலிருந்து 80 ஆண்டுகளில் இளைஞர்கள், குழந்தைகள் என யாரும் இருக்க மாட்டார்கள் என்றும், முதியவர்கள் மட்டுமே இருப்பார்கள் என்றும், அவர்களுக்கும் அத்தியாவசிய தேவைகளான உணவு, மருந்துகள், சுத்தமான நீர் ஆகியவை கிடைக்காது என்றும், விவசாயம் முற்றிலும் நின்றுவிடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

2 லட்சம் ஆண்டுகளாக மனித இனம் பூமியில் இருக்கும் நிலையில், 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் மனித இனம் வளங்களை நிர்வகிக்கும் திறனை கொண்டு வந்தது என்றும், ஆனால் தற்போது பிறப்பு விகிதம் குறைவதன் காரணமாக மீண்டும் மனித இனத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோல், உலகளாவிய காலநிலை மாற்றம், போர், தொற்றுகள் ஆகியவையும் மனித இனம் அழிவதற்கான காரணமாக உள்ளது என்றும் எச்சரித்துள்ளனர். எனவே, பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டும், உலகில் இளைஞர்கள் அதிகமாக வாழும் நிலையை ஏற்படுத்த வேண்டும், இதற்கு அனைத்து நாடுகளும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்தி உள்ளனர்.