மலேசியாவை சேர்ந்த ஒரு பெண் ஊழியர், தனது ஆண்டு விடுமுறையில் வெளிநாடு சென்றிருந்த போதும், தனது இருப்பிடத்தை அதாவது Live Locationஐ பகிருமாறு மேலாளர் வற்புறுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “நீங்கள் உண்மையிலேயே விடுமுறையில் இருக்கிறீர்களா?” என்பதை சரிபார்க்கவே இப்படி செய்ததாக அந்த மேலாளர் கூறியுள்ளார். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, இது தனிப்பட்ட உரிமைகளில் அத்துமீறல் என பலரும் அந்த பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் ஜூன் 10 அன்று தனது மேலாளரின் இந்த கோரிக்கை “சாதாரணமானதா?” என்று பிற பயனர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு ஊழியர் ஏற்கெனவே விடுப்பு எடுத்திருந்தாலும், ‘லைவ் லொகேஷன்’ பகிரவில்லை என்றால் ஆப்சென்ட் என்று பதிவு செய்யப்படும்; இது ஒரு “புதிய விதி” என்று மேலாளர் தெரிவித்ததாகவும் அப்பெண் கூறியுள்ளார்.
மலேசியத் தீவு ஒன்றுக்கு சென்றிருந்த அந்த பெண், தனது நிறுவனத்தின் பெயரை வெளியிடவில்லை. இந்த கோரிக்கையால் கோபமடைந்து, தான் மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் கடலோரத்தில் எடுத்த ஒரு படத்தை பதிவிட்டுள்ளார். இதன்பிறகு, அவரது மேற்பார்வையாளர் பலமுறை அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அந்த அழைப்பை அந்த பெண் எடுக்கவில்லை.
இந்த செயலை கண்டித்து நூற்றுக்கணக்கான பயனர்கள் அப்பெண்ணின் பதிவில் கருத்து தெரிவித்துள்ளனர். “இது சாதாரணமானதல்ல, உங்கள் மேலாளருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது!” என்று ஒருவர் கொதித்தெழுந்துள்ளார். மற்றொருவர், “உங்கள் மேலாளர் எப்படி உங்கள் தனிப்பட்ட உரிமையை இப்படி மீற முடியும்? ஊழியர்கள் தங்கள் ஆண்டு விடுமுறையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்,” என்று கேள்வி எழுப்பினார்.
நிறுவனம் பயண செலவை ஏற்றால் மட்டுமே இதுபோன்ற கோரிக்கைகள் நியாயமானவை என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். “அவர்கள் செய்வது உங்கள் பாதுகாப்புக்கும், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் அச்சுறுத்தல். நான் இதை எதிர்கொண்டால், வேலையை விட்டுவிட்டு புதிய வேலை தேடுவேன்,” என்று இன்னொருவர் பதிவிட்டுள்ளார்.
சமூக வலைத்தள பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அப்பெண், தனது நிறுவனம் ஊழியர்கள் ஊதியம் இல்லாத விடுப்பிலும், மருத்துவ விடுப்பிலும் இருக்கும்போது கூட நேரடி இருப்பிட தரவுகளைக் கேட்பதாக தெரிவித்துள்ளார். மலேசிய தொழிலாளர் சட்டப்படி, ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் எட்டு நாட்கள் ஊதியத்துடன் கூடிய ஆண்டு விடுப்பு உண்டு. இந்த நிலை தொடர்ந்தால், மலேசிய தொழிலாளர் துறைக்கு தகவல் தெரிவிப்பேன் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.