இளம் அரசியல் தலைவர்களில் யாருக்கு அதிக மக்கள் ஆதரவு இருக்கிறது என்ற கருத்துக்கணிப்பை மேற்கொண்டால், அதில் விஜய் முதலிடத்திலும், அண்ணாமலை இரண்டாம் இடத்திலும், சீமான் மூன்றாம் இடத்திலும், உதயநிதிக்கு நான்காவது இடமும் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இளம் அரசியல் தலைவர்கள் மத்தியில் மக்கள் ஆதரவு யாருக்கு அதிகமாக இருக்கிறது என்று வரிசைப்படுத்தினால், அதில் விஜய் தான் முதல் இடத்தில் இருக்கிறார் என்றும், முதல் தலைமுறை வாக்காளர்கள், இளைய தலைமுறை வாக்காளர்கள், மாணவர்கள், ரசிகர்கள் மற்றும் சிறுபான்மையினர், குறிப்பாக கிறிஸ்தவ சமூகத்தினர் விஜய்க்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், பட்டியல் இனத்தைச் சேர்ந்த வாக்குகள் பெரும்பாலும் விஜய்க்கு மாறி வருவதாகவும், இதுவரை அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கு இருந்த அந்த வாக்குகள் தற்போது பெரும் அளவில் விஜய்க்கு செல்வதாகவும் கூறப்படுகிறது.
அண்ணாமலையை பொறுத்தவரை, கட்சி தாண்டி அவருக்கு செல்வாக்கு இருக்கிறது என்றும், பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க மாட்டோம், ஆனால் அண்ணாமலைக்கு வாக்களிப்போம் என்று கூறும் பலரும் இருக்கிறார்கள் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. பா.ஜ.க.வுக்கு 2024 தேர்தலில் 11% வாக்குகள் கிடைத்திருக்கிறது என்றால், அதில் 8% வாக்குகள் அண்ணாமலையால் கிடைத்தது என்றும், பா.ஜ.க. எப்போதும் போல் தமிழகத்தில் வளரவில்லை, அண்ணாமலைக்காக மட்டுமே வாக்குகள் கிடைத்துள்ளன என்றும் கூறப்படுகிறது.
நாம் தமிழர் கட்சியின் சீமானை பொறுத்தவரை, இன்னும் அவரது அரசியல் செயல்பாடுகளுக்கு மக்கள் மத்தியில் எழுச்சி இருந்தாலும், விஜய்யின் வருகை அவருக்கு பெரும் பின்னடைவுதான் என்றும், அவருக்கான வாக்குகள் பெரும் அளவில் சிதறுகிறது என்றும் தெரிய வந்துள்ளது. உதயநிதியை பொருத்தவரை, இளைய தலைமுறை வாக்குகள் அவருக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்றும், தி.மு.க. மீதுள்ள வெறுப்பு காரணமாக உதயநிதிக்கு இளைஞர்களின் வாக்குகள் செல்ல வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
மொத்தத்தில், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுமே வரும் தேர்தலில் பெரிய அளவில் வாக்கு சதவீதத்தை இழக்கும் என்று கூறப்படுவது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.