இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது க்ளைமாக்ஸை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 102 ரன்கள் மட்டுமே தேவை என்பதும், கைவசம் அந்த அணி 6 விக்கெட்டுகளை வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களான க்ராளி (65 ரன்கள்) மற்றும் டக்வெட் (149 ரன்கள்) இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தனர். ஆனால், க்ராளி ஆட்டமிழந்த நிலையில், போப் 8 ரன்களிலும், புரூக் முதல் பந்திலேயே அவுட்டானார்கள். இதைத் தொடர்ந்து, தற்போது ரூட் மற்றும் கேப்டன் ஸ்டோக்ஸ் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
தற்போது தேநீர் இடைவேளையின்போது, இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஆட்டம் இடை இடையே மழை குறுக்கிட்டு வருகிறது. இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்திருந்தபோதே மழை பெய்தது. அதன் பின் மீண்டும் ஆட்டம் தொடங்கிய நிலையில், தற்போது மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக மைதான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது மைதானம் கவர்கள் போட்டு மூடப்பட்டுள்ளது. தேநீர் இடைவேளை முடிந்ததும், மழையின் தன்மையை பொறுத்து ஆட்டம் தொடங்கும். இங்கிலாந்து தனது வெற்றிக்கு தேவையான 102 ரன்களை எடுக்குமா, அல்லது இந்தியா மீதமுள்ள 6 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெறுமா, அல்லது வருணபகவான் இந்தியாவை காப்பாற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.