இந்தியாவை உள்பட பல உலக நாடுகள், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது எனக் குற்றம் சாட்டி வரும் நிலையில், அமெரிக்க அதிகாரி ஒருவர் பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் சிறப்பாக செயல்படுகிறது என்று கூறியிருப்பது, “திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்” என்ற பாடல்தான் ஞாபகம் வருகிறது என்று நெட்டிசன்கள் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் சென்ட்ரல் கமாண்ட் தலைவர் ஜெனரல் மைக்கேல் குரில்லா செய்தியாளர்களிடம் பேசியபோது, “பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் பாகிஸ்தான் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்திற்கு எதிராக பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்குப் பாராட்டு தெரிவிக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார். “தீவிரவாத எதிர்ப்புப் போரில் பாகிஸ்தான் முழுமையாக ஈடுபட்டுள்ளது என்றும், தீவிரவாத அமைப்புக்கு எதிராக ஒரு அற்புதமான கூட்டாளிதான் பாகிஸ்தான் என்றும்,” அவர் கூறினார்.
“ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளை அமெரிக்க உளவுத்துறை உதவியுடன் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது என்றும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் சிறப்பான தலைமை ஏற்று நடத்துவதாகவும்,” அவர் கூறினார். ஐந்து முக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ். தனிநபர்களைப் பிடித்துள்ளதாகவும்,” அவர் தெரிவித்தார். “அதில் முகமது ஷரீஃபுல்லா என்ற காபூல் விமான நிலைய தற்கொலை வெடிகுண்டு வெடிப்பில் ஈடுபட்டவரும் அடங்கும் என்றும், அவரை அமெரிக்காவில் ஒப்படைக்கத் தயார் என்று ஜெனரல் முனீர் என்னிடம் கூறினார் என்றும்,” அவர் தெரிவித்துள்ளார்.
மைக்கேல் குரில்லாவின் இந்தப் பேட்டிக்கு நெட்டிசன்கள் கடும் கோபத்துடன் எதிர்வினையாற்றி வருகின்றனர். “பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் பயிற்சி பெறுகிறார்கள் என்று உலகத்துக்கே தெரியும், ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்று அமெரிக்கா கூறுவது காமெடி,” என்று பதிவு செய்து வருகின்றனர்.
“பாகிஸ்தான் உங்கள் கதையின் கதாநாயகனாக இருக்கலாம், ஆனால் உலகின் பார்வையில் பாகிஸ்தான் வில்லன்தான்,” என்று ஒருவர் எழுதியுள்ளார். “9/11 தாக்குதலிலிருந்து நீங்கள் இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானை புகழ்வது உங்களுக்கு மிகவும் ஆபத்தானதாக முடியும்,” என்று இன்னொருவர் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பல ஆண்டுகள் பாதுகாப்பாக இருந்ததை உலக நாடுகள் கவனிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மொத்தத்தில், அமெரிக்கா இன்னும் பாகிஸ்தானை நட்பு நாடாகவே பார்க்கிறது என்பதும், பாகிஸ்தானை பகைத்து கொள்ள நாடு விரும்பவில்லை என்பதுமே இவருடைய பேட்டியில் இருந்து தெரிய வருகிறது.