பாராட்டுரேன்னு பொழப்புல கைவச்சிட்டிங்களே… மாதம் ரூ.8 லட்சம் சம்பாதித்த மும்பை ஆட்டோ டிரைவர் புலம்பல்..!

  மும்பையில் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியே, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வித்தியாசமான ஒரு சேவையை நடத்தி வந்திருக்கிறார். வெளிநாடுகளுக்கு விசா எடுக்க வருபவர்கள், தூதரகத்திற்குள் பைகளை எடுத்து…

auto driver

 

மும்பையில் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியே, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வித்தியாசமான ஒரு சேவையை நடத்தி வந்திருக்கிறார். வெளிநாடுகளுக்கு விசா எடுக்க வருபவர்கள், தூதரகத்திற்குள் பைகளை எடுத்து செல்ல அனுமதி இல்லாததால் திண்டாடுவார்கள். இந்த ஆட்டோ ஓட்டுநர் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, தூதரகம் அருகிலேயே ஆட்டோவை நிறுத்தி, பைகளை சேமிக்கும் சேவையை வழங்கியுள்ளார். மாதம் ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை இதன் மூலம் சம்பாதிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், இப்போது போலீஸ் தலையிட்டு இந்த சேவையை நிறுத்திவிட்டது.

லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் தயாரிப்புத் தலைவர் ராகுல் ரூபானி தனது லிங்க்ட்இன் பக்கத்தில் இந்த ஆட்டோ ஓட்டுநர் குறித்து பதிவிட்டபோதுதான் இந்த செய்தி வெளி உலகிற்கு தெரியவந்தது. தூதரகத்திற்குள் பைகளை எடுத்து செல்ல முடியாததால், ராகுல் ரூபானி தனது பையை இந்த ஆட்டோ ஓட்டுநரிடம் ரூ.1,000 கொடுத்து பாதுகாப்பாக ஒப்படைத்திருக்கிறார். அருகில் பைகளை சேமிக்க வேறு எந்த அதிகாரப்பூர்வ வசதியும் இல்லாததால், இந்த ஆட்டோ ஓட்டுநர் சாமர்த்தியமாக இந்த பிசினஸை ஆரம்பித்திருக்கிறார்.

ராகுல் ரூபானி கணக்குப்படி, இந்த ஆட்டோ ஓட்டுநர் தினமும் 20 முதல் 30 வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்திருப்பார். இதன் மூலம் தினமும் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை சம்பாதித்திருக்க வாய்ப்புள்ளது. ஆட்டோ ஓட்டுநர் இவ்வளவு சம்பாதிக்க முடியுமா எனப் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஆனால், இந்தச் செய்தி வைரலானதும், மும்பை போலீசார் உடனடியாக களமிறங்கினர். அந்த ஆட்டோ ஓட்டுநரையும், தூதரகம் அருகே இதேபோன்ற சேவைகளை நடத்தி வந்த மேலும் 12 பேரையும் அழைத்து விசாரித்தனர். பி.கே.சி. காவல் நிலையத்தின் மூத்த அதிகாரி “இந்தச் சேவை பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதாகும். குறிப்பாக, அதி-பாதுகாப்பு கொண்ட தூதரகத்தை சுற்றி வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும், அங்கீகாரம் இல்லாமல் தனிப்பட்ட நபர்களின் பொருட்களை சேமிப்பது பெரிய பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தும்,” என்று விளக்கினார்.

“இந்த ஓட்டுநர்களுக்கு பைகளை சேமிக்கும் சேவைகளை வழங்கவோ அல்லது அருகிலுள்ள கடைகளில் பொருட்களை வைக்கவோ எந்த அனுமதியும் இல்லை,” என்றும் போலீசார் திட்டவட்டமாக தெரிவித்தனர். இப்போது இந்த சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. அந்தப் பகுதியில் மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.