உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் ஒரு வினோதமும், அதே சமயம் நெகிழ்ச்சியுமான சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது மனைவி, காதலனுடன் கொண்ட உறவை துண்டிக்க மறுத்த நிலையில், அவளுடைய கணவனே முன்னின்று, உள்ளூர் கோவிலில் அந்த ஜோடிக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
அரவிந்த் என்பவருக்கும் ரீட்டா என்பவருக்கும் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. சராய் மோகியுதீன்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் அவர்கள் வசித்து வந்தனர். ஆனால், ரீட்டாவுக்கு திருமணத்திற்கு முன்பே யஷ்வந்த் என்ற மற்றொரு நபருடன் காதல் உறவு இருந்தது பின்னர் தெரியவந்தது. உள்ளூர் மக்கள் கூற்றுப்படி, திருமணத்திற்குப் பிறகும் ரீட்டா யஷ்வந்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில், ரீட்டா தனது தாய் வீட்டிற்குத் திரும்பி, அங்கிருந்து காதலன் யஷ்வந்துடன் ஓடிவிட்டதாகவும் செய்தி வெளியானது.
ரீட்டாவுக்கு யஷ்வந்துடன் இருந்த உறவை உறவை முறித்து கொள்ள மறுத்ததை அறிந்த அரவிந்த், தனது திருமண உறவை முறையாக முடிவுக்கு கொண்டு வர துணிந்தார். சராய் மோகியுதீன்பூர் சந்தையில் உள்ள துர்கா கோவிலில், தனது மனைவி ரீட்டாவுக்கும், அவரது காதலன் யஷ்வந்துக்கும் முன்னின்று திருமணம் செய்து வைத்தார்.
சம்பவ இடத்திலிருந்து வெளியான வீடியோக்களும், புகைப்படங்களும் இந்த செயலின் நெகிழ்ச்சியை தெளிவாகப் படம்பிடித்து காட்டுகின்றன. அரவிந்த், திருமண விழாவின்போது மணமக்களுடன் தோளோடு தோள் நின்று, அவர்களை வாழ்த்துவதையும், சொந்தமாகவே திருமண சடங்குகளை நடத்துவதையும், கூடியிருந்த பொதுமக்கள் முன்னிலையில் தனது மனைவியை கண்ணீருடன் வழியனுப்பி வைப்பதையும் அந்தக் காட்சிகள் காட்டுகின்றன.
இது குறித்து அரவிந்த் செய்தியாளர்களிடம் பேசியதாவது, ‘எங்களுடைய திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், என் மனைவியின் மனம் வேறு ஒரு நபரிடம் இருக்கிறது என்பதை உணர்ந்தால் என் மனைவியை என்னுடன் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த விரும்பவில்லை. அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து நான் ஒதுங்கி கொண்டேன். இப்போது அவர்கள் தங்கள் விருப்பப்படி வாழலாம் என்று கூறினார்.
பாக்யராஜ் நடித்து இயக்கிய ‘அந்த 7 நாட்கள்’ என்ற திரைப்படத்தில் தன்னுடைய மனைவி அம்பிகா, இன்னொருவரை விரும்பி இருக்கிறார் என்று தெரிந்து அவரை காதலனுடன் சேர்த்து வைக்க முயற்சி செய்யும் காட்சிகள் இருக்கும். அதில் ராஜேஷின் முயற்சி நடக்காது என்றாலும் பல உண்மை சம்பவங்களில் மனைவியை அவரது காதலனுடன் சேர்த்து வைத்த சம்பவங்கள் நடந்துள்ளது. அதேபோல் தற்போது உத்தரப் பிரதேசத்திலும் அதேபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
https://x.com/HerrHankyPanky/status/1935332501951758345