ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது என்பது பஞ்சமா பாதகம் போல், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் கட்சிகள் நினைத்து கொண்டிருப்பதாகவும், ஒன்றாக சேர்ந்து ஓட்டு கேட்டு வெற்றி பெற்ற பின்னர் ஒன்றாக ஆட்சி அமைப்பதுதான் சரியானது என்றும், அதிகாரத்தில் பங்கு கேளுங்கள் என்றும், கொத்தடிமையாக இருக்க வேண்டாம் என்றும் பத்திரிகையாளர் மணி, அந்த கட்சிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக அதிகாரத்தில் பங்கு கேட்பதில் எந்தவித தவறும் இல்லை என்றும், ஒரு அரசியல் கட்சி என்பது அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது, அதனால் அதிகாரத்தில் பங்கு கேட்பது எந்த தவறும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். “பாஜகவுக்கு உள்ள தைரியம், திராணி ஏன் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என்று எனக்கு புரியவில்லை,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
“அதிகாரத்தில் நீங்கள் தாராளமாகப் பங்கு கேட்கலாம். உங்களுடைய வாக்குகளும் சேர்ந்துதான் திமுகவுக்கு செல்கிறது. அப்படி இருக்கும்போது, திமுகவின் அதிகாரத்தில் நீங்கள் பங்கு போட்டுக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை,” என்று அவர் தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தாராளமாக அதிகாரத்தில் பங்கு கேட்கலாம் என்றும், அது அவர்களது உரிமை என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு திமுகவுக்கு வெறும் 96 தொகுதிகள் மட்டுமே இருந்தது. ஆட்சி அமைக்க தேவையான 118 என்ற தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் அப்போதுகூட அதிகாரத்தில் பங்கு கேட்க காங்கிரஸ் மற்றும் பாமகவுக்குத் தைரியம் வரவில்லை. அப்போது 34 தொகுதிகளில் காங்கிரஸ், 19 தொகுதிகளில் பாமக, 15 தொகுதிகளில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் வெற்றி பெற்றன. அப்போது மட்டும் காங்கிரஸ் அதிகாரத்தில் பங்கு கேட்டு சில முக்கிய அமைச்சர் பதவிகளை பெற்று மக்கள் மத்தியில் அந்த அமைச்சர் பதவியின் மூலம் நல்லது செய்திருந்தால், காங்கிரஸ் கட்சியும் தமிழக மக்கள் மனதில் ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் என்றும், அந்த ஒரு நல்ல வாய்ப்பை காங்கிரஸ் கட்சி கோட்டை விட்டது என்றும் கூறப்பட்டு வருகிறது.
இருபெரும் ஆளுமைத் தலைவர்களான கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மறைவுக்கு பின் தற்போது அதிகாரத்தில் பங்கு கேட்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றும், இந்த வாய்ப்பையும் அரசியல் கட்சிகள் விடக்கூடாது என்றும் கூறப்பட்டு வருகிறது.
Political Analyst Mani Urges DMK Alliance Partners to Demand Share in Power
அரசியல், திமுக கூட்டணி, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், பாஜக, ஆட்சி அதிகாரம், பத்திரிகையாளர் மணி,Politics, DMK Alliance, Congress, VCK, Communist Parties, BJP, Power Sharing, Journalist Mani, Tamil Nadu Politics