கடந்த இரண்டு ஆண்டுகளாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், இன்று உக்ரைன் ஒரு மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியதாகவும், இதில் ரஷ்யாவின் 40க்கும் மேற்பட்ட ராணுவ விமானங்கள் காலியானதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் படைகள் ரஷ்ய போர் விமானங்களை சரமாரியாக தாக்கியதாகவும், நீண்ட தூர ராக்கெட்டுகள் மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியதில், ரஷ்யாவின் விமான தளங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளும் சேதம் அடைந்ததாகவும், முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த தாக்குதலில் பெரும்பாலும் ட்ரோன்கள் தான் இடம் பெற்றிருந்தன என்றும், ரஷ்யாவின் முக்கிய விமானப்படை தளங்களில் ஒன்று இதில் பெரும் அளவில் பாதிக்கப்பட்டதாகவும், அணு ஆயுதங்களை ஏற்றக்கூடிய விமானங்கள் உள்பட 40க்கும் மேற்பட்ட விமானங்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் உயிரிழப்பு மற்றும் காயம் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.
கடந்த வாரம் ரஷ்ய படைகள் 367 ராக்கெட்டுகள் மற்றும் ராக்கெட்டுக்களை உக்ரைன் மீது வீசி தாக்குதல் நடத்திய நிலையில், ஒரு வாரத்துக்கு பிறகு உக்ரைன் பதிலடி கொடுத்துள்ளது என்பதும், ரஷ்ய தாக்குதலில் உக்ரைன் நாட்டினர் 13 பேர் உயிரிழந்த நிலையில், ரஷ்யாவில் உள்ள உயிரிழப்புகள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் நாட்டின் இன்றைய தாக்குதலில் 256 ட்ரோன்கள், 45 ராக்கெட்டுகளையும் பயன்படுத்தியதாகவும், ரஷ்யாவில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பொதுமக்கள் வாழும் பகுதிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் – ரஷ்ய போரை முடிக்க தீவிர முயற்சி செய்தபோதிலும், போர் தீவிரமாகிக் கொண்டே வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.