ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது லிவ்-இன் காதலனுடன் சேர்ந்து நான்கு வயது குழந்தையை கொலை செய்து, அந்த குழந்தையின் பிணத்தை மறைக்க 300 கிலோமீட்டர் பயணம் செய்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜெய்ப்பூரில் ரோஷன்பாய் மற்றும் அவரது காதலர் மகாவீர் பைரவா ஆகிய இருவரும் லிவ்-இன் முறையில் வாழ்ந்து கொண்டிருந்தனர். ரோஷன்பாய்க்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகள் இருந்த நிலையில், சம்பவ தினத்தன்று இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போட்டதாக தெரிகிறது.
இந்த சண்டையில் எதிர்பாராத விதமாக ரோஷன்பாயின் நான்கு வயது மகள் விஷிகா கொல்லப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரோஷன்பாய் மற்றும் மகாவீர் இருவரும் சேர்ந்து பிணத்தை மறைக்க முடிவு செய்தனர். இதனை அடுத்து பிணத்தை ஒரு துப்பட்டாவால் சுற்றி, பிளாஸ்டிக் பையில் போட்டு காரில் வைத்து 300 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து பிணத்தை வீசிவிட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் பக்கத்து வீட்டில் உள்ள ஒருவர் ரத்த வாடை மற்றும் பிணவாடை அடிப்பதை கவனித்து சந்தேகம் அடைந்து காவல் துறை தகவல் கொடுத்த நிலையில், காவல்துறையினர் விரைந்து வந்து சோதனை செய்தனர். அப்போது மகாவீரிடம் விசாரணை செய்தபோது, அவர் குழந்தை கொன்றதை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
தற்போது ரோஷன்பாய் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை தேடும்பணிகள் நடந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இருவரும் கடந்த ஏழு மாதங்களாக திருமணம் செய்யாமல் லிவ்-இன் முறையில் வாழ்ந்து கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத நிகழ்ச்சியில் நான்கு வயது மகள் கொல்லப்பட்டதாக முதல் கட்ட விசாரணைகள் தெரிவிக்கிறது.
இந்த நிலையில், மகாவீர் பைரவா மீது ஏற்கனவெே பதினைந்து வழக்குகள் உள்ளதாகவும், அதில் கொலை, கொள்ளை வழக்குகளும் அடங்கும் என்றும் கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, கடந்த 2022 ஆம் ஆண்டு ஒரு வழக்கில் தண்டனை பெற்று சிறைக்குச் சென்ற அவர் தற்போது ஜாமினில் உள்ளவர் என்றும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது