இந்தப் பெண் குழந்தைகளை வளர்க்க வசதி இல்லாததால், அவர்களின் பெற்றோர் அவர்களை தத்து கொடுக்க முடிவு செய்தனர். தத்தெடுப்பின்போது, ஒரு முக்கிய நிபந்தனையாக, இரு குடும்பங்களும் ஒரே நகரத்தை சேர்ந்தவையாக இருக்க வேண்டும் என்று கோரப்பட்டிருக்கிறது.
ஒரே நகரத்தில் வசித்தாலும், 17 வயது வரை ஒருவரையொருவர் பற்றி அவர்களுக்கு தெரியவே இல்லை. ஹை-யின் வகுப்பு தோழி ஒருவர், அருகிலுள்ள ஒரு துணிக்கடையில் ஒரு பெண்மணி ஹை-யை போலவே இருப்பதாக கூறியபோதுதான், அவர்களின் பாதை ஒரு புள்ளியில் சந்தித்தது. தோழியின் கூற்றை உறுதிப்படுத்த ஹை கடைக்கு சென்றபோது, ஜாங்கை சந்தித்தார்.
ஜாங்கை பார்த்தவுடன் தங்களுக்குள் ஒரு உடனடி பிணைப்பை உணர்ந்ததாக ஹை நினைவு கூர்ந்தார். இருவரும் பேச தொடங்கியபோது, அவர்கள் ஒரே பிறந்தநாள் கொண்டவர்கள், குழந்தைகளாக இருந்தபோது ஒரே வயதில் தீவிரமாக நோய்வாய்ப்பட்டிருந்தார்கள், ஏன்… ஒரே மாதிரியான குரல், ஒரே மாதிரியான சிகை அலங்காரம் கூட இருவருக்கும் இருந்தது. இருவருக்கும் பிடித்தமான உணவுகளும் ஒன்றாகவே இருந்தன. இந்த ஆச்சரியமான ஒற்றுமைகளை உணர்ந்த இருவரும், நெருங்கிய நண்பர்களாக மாறினர்.
இரு சகோதரிகளின் வளர்ப்பு பெற்றோர்களுக்கும் அவர்கள் இரட்டையர்கள் என்பது தெரிந்திருந்தாலும், அதனை ரகசியமாகவே வைத்திருந்தனர். ஒருவேளை, உண்மையை அறிந்தால், அவர்கள் தங்களின் உண்மையான பெற்றோரைத் தேடி சென்றுவிடுவார்களோ என்று பயந்தனர். ஆனால், 14 மாதங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகிய பிறகுதான், அவர்களின் குடும்பத்தினர் தாங்கள் இரட்டை சகோதரிகள் என்ற உண்மையை இறுதியாக அவர்களிடம் தெரிவித்தனர்.
உண்மையை தெரிந்து கொண்ட பிறகும் கூட, இந்த அதிசய ஒற்றுமைகள் தொடர்ந்தன. இரு சகோதரிகளும் திட்டமிடாமலேயே அருகருகே உள்ள வீட்டு வளாகங்களில் குடியிருப்புகளை வாங்கினர். தற்போது 13 வயதாகும் அவர்களின் குழந்தைகள், ஒரே பள்ளியில் படிக்கிறார்கள்; ஏன், ஒரே வகுப்பில் கூட சேர்க்கப்பட்டுள்ளனர். ஹையின் கூற்றுப்படி, அவர்களின் குழந்தைகள் ஒருவரையொருவர் அச்சு அசலாக ஒத்திருப்பதால், ஆசிரியர்கள் இரு குடும்பங்களையும் அடிக்கடி குழப்பி கொள்கிறார்கள். இரு சகோதரிகளும் யாரும் கவனிக்காதவாறு ஒருவருக்கொருவர் மாற்றி பள்ளி நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொண்டுள்ளனர் என்பது மேலும் ஆச்சரியமளிக்கிறது.
தற்போது இந்த இரு சகோதரிகளும் ஒரு சமூக ஊடக கணக்கையும் நடத்தி வருகின்றனர். அதற்கு அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள். ஒருவரையொருவர் மீண்டும் கண்டுபிடித்து 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை அவர்கள் சமீபத்தில் கொண்டாடினர். இந்த நீண்ட காலகட்டத்தில், அவர்கள் தங்கள் உண்மையான பெற்றோரை தேட எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.