தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணியில் இணைவதற்கான முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த கூட்டணியில் சேர்வதில்லை என்ற உறுதியான முடிவை அவர் எடுத்துவிட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு மாற்றாக தன்னுடைய கட்சி இருக்க வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருப்பதாகவும், எனவே இரண்டு திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் புதிய கூட்டணி அமைக்க இருப்பதாகவும், அதில் அவர் முதலில் இணைத்துக் கொண்டது விடுதலை சிறுத்தைகள் கட்சியைத்தான் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், அந்தக் கட்சிக்கு 40 தொகுதிகள் மற்றும் திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி என்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் ஆவின் வைத்தியநாதன் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. கூட்டணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியேறுவதற்கு முக்கிய காரணமாக, தி.மு.க. பா.ஜ.க.வுடன் ரகசிய உறவு வைத்திருக்கிறது என்றும், டாஸ்மாக் ஊழலிலிருந்து தனக்கு நெருக்கமானவர்களை காப்பாற்ற பா.ஜ.க.வின் மேலிடத்தில் தி.மு.க. சமரசம் செய்துகொண்டதாகவும் ஆவின் வைத்தியநாதன் அப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தங்கள் முன் பா.ஜ.க.வை எதிர்ப்பதுபோல் நடித்து, தங்களையும் பா.ஜ.க.வை எதிர்த்து பேச வைத்துவிட்டு, இவர்கள் மட்டும் ரகசியமாப் பேச்சுவார்த்தை நடத்தி கொள்கிறார்கள் என்றும், அதனால்தான் கூட்டணியிலிருந்து வெளியேற போவதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி காரணம் சொல்லப்போவதாகவும் ஆவின் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதுபோல் தி.மு.க. கூட்டணியிலிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறி தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.